Published:Updated:

டாஸ்மாக் கடையில் பதற்றம்... மடக்கிய போலீஸ்! -தனிப்படைக்கு அதிர்ச்சிகொடுத்த கும்பல்

ரூ.65லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்
ரூ.65லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்

மணிகண்டன் வீட்டிலிருந்த ரூ.65,40,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துவருகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் விற்பனை ஜரூராக நடைபெற்றுவருகிறது. இங்கு, கடந்த மே16-ம் தேதி மது வாங்க வந்தவர்களில் சிலர் ஒருவித பதற்றத்துடன் பணத்தைக் கொடுத்து மது வாங்க முயன்றுள்ளனர்.

அப்போது சந்தேகமடைந்த விற்பனையாளர் பணத்தை வாங்கி பார்த்தபோது, அது கள்ள நோட்டு என்பது தெரியவந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட விற்பனையாளர், அவரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் விரைந்து வந்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற 4 பேரையும் வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர். மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

ரூ.65லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்;6பேர் கைது
ரூ.65லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல்;6பேர் கைது

விசாரணையில், நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன், சென்னையைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மணிகண்டன் வீட்டிலிருந்த ரூ.65,40,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப், பிரின்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டு வழக்கில் மொத்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``புதுக்கோட்டையில் கள்ளநோட்டு புழக்கத்திற்கு நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன்தான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார். கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை மடக்கிப்பிடித்த பின்பு, பின்னணியில் உள்ளவர்களையும் பிடித்து நெட்வொர்க்கை காலி செய்யும் வகையில் ரகசிய விசாரணை நடத்தினோம். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். கள்ள நோட்டுகளை யாரேனும் மாற்றுவது குறித்த தகவல் தெரிந்தால், உடனே போலீஸாரிடம் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு