Published:Updated:

`9 வருடங்களில் 6 குழந்தைகள்; சந்தேக வளையத்தில் தம்பதிகள்!'- கேரளாவை உலுக்கும் மர்ம மரணங்கள்

இறந்த குழந்தை
இறந்த குழந்தை ( manoramaonline )

ஒரே ஒரு பெண் குழந்தையைத் தவிர்த்து மற்ற குழந்தைகள் அனைத்தும் முதல் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன்பாகவே மரணமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த திரூர் அருகே உள்ள தரம்மல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரபீக் மற்றும் சப்னா தம்பதியர். நேற்று காலை இவர்களது 3 மாதக் குழந்தை திடீரென உயிரிழக்க பிரேத பரிசோதனை செய்யாமல் காலை 10 மணியளவில் உடலை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். குழந்தை உயிரிழந்த பின் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்வதை அறிந்த ரபீக்கின் பக்கத்து வீட்டுக்காரர்கள் இதில் சந்தேகமடைந்து போலீஸில் தெரிவித்துள்ளனர்.

ரபீக் வீடு
ரபீக் வீடு
manoramaonline

அக்கம் பக்கத்தினரின் சந்தேகத்துக்கான காரணம்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது. ரபீக் - சப்னா இருவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் இந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்கு இப்போது இறந்த குழந்தையுடன் சேர்த்து ஆறு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இவற்றில் 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள். ஆனால், இவர்களில் யாருமே இப்போது உயிருடன் இல்லை. ஒரே ஒரு பெண் குழந்தையைத் தவிர்த்து மற்ற குழந்தைகள் அனைத்தும் முதல் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன்பாகவே மரணமடைந்துள்ளனர். அந்த ஒரு பெண் குழந்தை மட்டும் நான்கு வயது வரை இருந்துள்ளது. பின்னர் அந்தக் குழந்தையும் இறந்துள்ளது.

`பள்ளி ரீ-யூனியனில் சந்திப்பு; தோழிக்காக கொல்லப்பட்ட மனைவி!’- கேரளா முதல் நெல்லை வரை பயணித்த சடலம்

எல்லாக் குழந்தைகளும் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக ரபீக்கும், சப்னாவும் ஊர்க்காரர்களிடம் கூறிவந்துள்ளார்கள். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 3 மாதக் குழந்தை இறக்கும் வரை, அக்கம்பக்கத்தினர் குழந்தைகளின் இறப்புகளில் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் செவ்வாயன்று, குழந்தை இறந்தவுடன் அவசர அவசரமாக புதைக்கும் வேலைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்தவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரபீக் வீடு
ரபீக் வீடு
manoramaonline

தற்போது குழந்தையின் பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. டாக்டர்கள் கொடுத்துள்ள முதல்கட்ட அறிக்கையின்படி, குழந்தையின் மரணத்தில் இயற்கைக்கு மாறான எதுவும் இல்லை என்றும், எந்தவொரு தாக்குதலையும் குறிக்கும் வகையில் உடலில் எந்த அடையாளங்களும் இல்லை என்றும், மேலும் விஷம் உட்கொண்டதற்கான அறிகுறிகளும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

`டி-கம்பெனி தொடர்பு; ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைக் கொல்ல பிளான்!'- கேரள `டான்' தஸ்லீமுக்கு நேர்ந்த கதி

இருப்பினும், குழந்தையின் உள் உறுப்புகள் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுகள் கிடைத்தவுடன்தான் மரணம் குறித்த கூடுதல் தெளிவு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ரபீக்கின் உறவினர்கள் இதுதொடர்பாகப் பேசுகையில், ``குழந்தைகளின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் இல்லை. குழந்தைகளின் இறப்புக்கு மரபணு நோய் காரணமாக இருக்கலாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

திரூர் காவல்நிலையம்
திரூர் காவல்நிலையம்

மூன்றாவது குழந்தை இருந்தபோதே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சில மரபணு பிரச்னைகள் காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இப்போதும் குழந்தை இறப்பதற்கு முன்பாகவும் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே குழந்தை இறந்ததால் பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்தனர். எனினும் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் தம்பதியர்" என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோலி என்ற பெண் சொத்துக்காக தனது குடும்ப உறுப்பினர்களை மர்மமாகக் கொன்ற நிலையில் இந்தக் குழந்தையின் மரணங்கள் மீண்டும் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

`மூன்றடியில் இரண்டு தந்தங்கள்!' -கேரள வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
அடுத்த கட்டுரைக்கு