Published:Updated:

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவன்; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் - என்ன நடந்தது?

மாணவன் தீக்‌ஷித்தின் பெற்றோர்

சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவன் தீக்‌ஷித் மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் டிரைவர் பூங்காவனம், பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவன்; பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் - என்ன நடந்தது?

சென்னை ஆழ்வார்திருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவன் தீக்‌ஷித் மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் டிரைவர் பூங்காவனம், பாதுகாவலர் ஞானசக்தி ஆகியோரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
மாணவன் தீக்‌ஷித்தின் பெற்றோர்

சென்னை விருகம்பாக்கம், இளங்கோநகர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (37). இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி ஜெனிபர். இவர் சோழிங்கநல்லூரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்தத் தம்பதியின் மகன் தீக்‌ஷித் (8). இவன் ஆழ்வார் திருநகர் அனெக்ஸில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு `பி' பிரிவில் படித்துவந்தான். தினமும் காலை 8:15 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும் தீக்‌ஷித், பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவான். வழக்கம்போல, நேற்று காலை 8:15 மணிக்கு டி.என் 10 ஏ.கே 7088 என்ற எண் கொண்ட பள்ளி வாகனத்தில் தீக்‌ஷித்தை அவனின் அம்மா ஜெனிபர் ஏற்றி வழினுப்பிவைத்தார்.

மாணவனின் பெற்றோர், உறவினர்கள்
மாணவனின் பெற்றோர், உறவினர்கள்

சுமார் 8:45 மணியளவில் தீக்‌ஷித் படிக்கும் பள்ளியிலிருந்து ஜெனிபருக்கு போன் செய்த ஒருவர், பள்ளி வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றபோது அதே வாகனம் மோதி தீக்‌ஷித் அடிப்பட்டு ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், உடனடியாக அங்கு வரும்படியும் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தீக்‌ஷித்தின் பெற்றோர், உறவினர்கள் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு தீக்‌ஷித் இல்லை. மருத்துவமனையில் விசாரித்தபோது வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவன் தீக்‌ஷித்தை அழைத்துச் சென்றிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீக்‌ஷித்தின் பெற்றோர் வடபழனிக்குச் சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் தீக்‌ஷித் படுக்கையில் படுக்கவைக்கப்பட்டிருந்தான். அங்குள்ள மருத்துவர்களிடம் விசாரித்தபோது வரும்வழியில் அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு தீக்‌ஷித்தின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமி, டிரைவர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தீக்‌ஷித்தின் தந்தை வெற்றிவேல் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் துரைராஜ் 304 (2) ஐபிசி-ன் படி வழக்கு பதிவு செய்து டிரைவர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோரைக் கைதுசெய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை தனலட்சுமி, தாளாளர் ஜெயசுபாஷ் ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. மாணவன் தீக்‌ஷித், பள்ளி வாகனம் மோதி உயிரிழந்ததையடுத்து, சம்பவம் நடந்த பள்ளிக்கு போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, போலீஸார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

டிரைவர் பூங்காவனம்
டிரைவர் பூங்காவனம்

பள்ளியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்தனர். அப்போது வேனைவிட்டு இறங்கிய தீக்‌ஷித் பள்ளிக்குச் செல்ல நடந்து சென்றபோதுதான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. முன்சக்கரத்தில் சிக்கிய தீக்‌ஷித், உயிருக்குப் போராடிய அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்ற சக பள்ளி மாணவர்கள் சத்தம் போட்ட பிறகே ஆசிரியர்கள், ஊழியர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் டிரைவர் பூங்காவனத்தின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதோடு மாணவர்களைப் பாதுகாப்பாக வகுப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டிய குழந்தைக் காப்பாளர் ஞானசக்தியும் கவனக்குறைவாக இருந்ததும் தெரியவந்தது. அதனால்தான் இருவரையும் வளசரவாக்கம் போலீஸார் உடனடியாக கைதுசெய்திருக்கிறார்கள். அதேநேரத்தில் இந்த வழக்கில் தாளாளர் ஜெயசுபாஷ், தலைமை ஆசிரியை தனலட்சுமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவன் தீக்‌ஷித்தின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவ முறைப்படி தீக்‌ஷித்தின் சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டது. மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்ததையடுத்து, சென்னை போக்குவரத்து போலீஸார் சென்னை மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பள்ளி ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் 355 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது தீவிரமாக கண்காணிப்படுவதோடு, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து போலீஸார் எச்சரித்திருக்கின்றனர்.

ஞானசக்தி
ஞானசக்தி

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள டிரைவர் பூங்காவனம், மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். அதன் பிறகு குடும்ப வறுமை காரணமாக தனியார் பள்ளியில் டிரைவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். வயது மூப்பு காரணமாக அவருக்குக் கண்பார்வை குறைபாடு, சரிவர காது கேட்பதில்லை என்று சொல்லப்படுகிறது. விசாரணையின்போது போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்த பூங்காவனம், சோகமாகவே இருந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 64 வயதாகும் டிரைவரை ஏன் பணியமர்த்தினீர்கள், பள்ளி வளாகத்துக்குள் ஏன் வேகத்தடைகள் இல்லை, பள்ளி வாகனத்திலிருந்து மாணவர்கள் இறங்கி வகுப்பறைக்குச் செல்லும் வரை அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவில்லை, சம்பவம் நடந்து சில மணி நேரம் கடந்தும் பள்ளி தாளாளர் பள்ளிக்கு ஏன் வரவில்லை போன்ற கேள்விகள் தாளாளர், முதல்வர் ஆகியோரிடம் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவன் தீக்‌ஷித் உயிரிழந்த தகவல் வெளியானதும் பின்னோக்கி பள்ளி வாகனத்தை எடுத்தபோது சம்பவம் நடந்ததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சிசிடிவியில் உள்ள காட்சிகளைப் பார்த்தபோது பள்ளி வாகனம் முன்னோக்கிச் சென்றது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சி அடிப்படையில்தான் டிரைவர் பூங்காவனமும், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தியும் வசமாகச் சிக்கிக்கொண்டனர் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த தீக்‌ஷித்தின் தாத்தா, காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியவர். மேலும் வெற்றிவேல், ஜெனிபர் தம்பதியருக்கு தீக்‌ஷித் ஒரே மகன். தீக்‌ஷித் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism