Election bannerElection banner
Published:Updated:

அரியலூர்: மது பாட்டிலில் கிடந்த பாம்பு..! - அதிர்ச்சியில் உறைந்த குடிமகன்

மதுபானத்தில் கிடந்த பாம்பு
மதுபானத்தில் கிடந்த பாம்பு

`இது அரசு மதுதானா இல்லை அதிகாரிகளின் துணையுடன் பாரின் உரிமையாளர் டூப்ளிகேட் மதுவை விற்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.’

அரசு மதுபான கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பாம்பு கிடந்ததால் குடிமகன் ஒருவர் அதிர்ச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது பாட்டில்
மது பாட்டில்

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், சுத்தமல்லி கிராமத்திலுள்ள மாமனார் வீட்டில் தங்கி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். நேற்று முன்தினம் தமிழ்ப் புத்தாண்டு அன்று நண்பர்களுடன் மது அருந்தலாம் என்று எண்ணிய சுரேஷ், தனது நண்பர்களோடு சுத்தமல்லி கிராமத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி பாதியை அருந்திவிட்டு, மீதியை வைத்திந்திருக்கிறார்.

மீதமுள்ள மதுவை அருந்துவதற்காக மது பாட்டிலைப் பார்த்தபோது மதுபாட்டிலில் குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அரசு டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார். அதை அவர் கொஞ்சம்கூட காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லையாம்.

சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ்
சிகிச்சை பெற்றுவரும் சுரேஷ்

இந்தநிலையில், பாம்பு இருந்த மதுவைக் குடித்ததால் பயத்தில் சுரேஷ் பக்கத்திலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் சுரேஷ். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்தச் சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுரேஷ் உறவினர்களிடம் பேசுகையில். ``குடிமகன்களின் வாழ்க்கையில் அரசு மெத்தனமாகச் செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. அரசு வழங்கக்கூடிய மது பாட்டிலில் பாம்பு எப்படி வந்தது? இது அரசு மதுதானா இல்லை அதிகாரிகளின் துணையுடன் பாரின் உரிமையாளர் டூப்ளிகேட் மதுவை விற்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. மதுவை சுரேஷ் குடித்து ஏதாவது ஒன்று ஆனால் அவரது குடும்பத்தை யார் பார்ப்பது... இந்தச் சம்பவம் இறுதியாக இருக்கட்டும். இதை அதிகாரிகள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், இந்தப் பகுதியில் அரசு மதுபான கடை இருக்காது" என்று எச்சரித்தனர்.

மதுபானத்தில் கிடந்த பாம்பு
மதுபானத்தில் கிடந்த பாம்பு

இது குறித்து கலால் துறை அதிகாரியிடம் பேசினோம். ``மதுபாட்டிலில் பாம்பு கிடந்ததாகத் தகவல் எங்களுக்கும் வந்தது. அதன்பேரில் விசாரணை தொடங்கியிருக்கிறோம். அதோடு இந்தப் பகுதியில் போலி மது விற்பனையாகிறது என்று சொல்கிறார்கள். இது குறித்தும் விசாரணை நடத்துகிறோம்" என்று முடித்துக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு