Published:Updated:

`கைதாகியும் கொரோனாவால வெளியில விட்டுட்டாங்க!'- மணல் மாஃபியாக்களால் கரூர் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

தாக்குதலுக்குள்ளான திருக்குமரன்
தாக்குதலுக்குள்ளான திருக்குமரன்

'நாங்க மணல் அள்ளுவதை போலீஸில் சொல்லுவியா?!' என்றுகூறி திருக்குமரனின் முகத்தில் தாக்கியுள்ளனர்.

காவிரியாற்றில் சட்டத்தை மீறி மணல் அள்ளுபவர்களைப் பற்றிக் காவல்துறையில் புகார் கொடுத்ததற்காக, இளைஞர் ஒருவரை மணல் அள்ளுபவர்கள் கத்தியால் காயப்படுத்திய சம்பவம், கரூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் அள்ளப்பட்ட மணல்
காவிரியில் அள்ளப்பட்ட மணல்

கரூர் மாவட்டம், காவிரியில் நடைபெறும் மணல் கொள்ளை, எல்லோரும் அறிந்ததுதான். கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளியே பலர் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள்.

Vikatan

அரசும் இங்கே மணல் குவாரி அமைத்துச் செயல்படுத்தி வந்தது. இதனால், கரூர் பல சூழலியல் பிரச்னைகளைச் சந்தித்து வந்ததால், சமூக ஆர்வலர்கள் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கி, அதற்கு எதிராகப் போராடி வந்தனர். இதன் காரணமாக, அரசு நடத்தி வந்த மணல் குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன.

ஆனால், இப்போதும் சட்டத்தை மீறி பலர் கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளி வருகிறார்கள். இந்த நிலையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா நெரூர் வடபாகம் கிராமம் என்.புதுப்பாளையம் ஊரில் காவிரி ஆற்றில் அதிலும் கரூர் திண்டுக்கல், கூட்டுக்குடிநீர்த் திட்டக் கிணற்றின் சுற்றுப்பகுதியில், ஜே.சி.பி இயந்திரம் வைத்து, மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. இதைத் தடுக்கக் கோரி ஊர்மக்கள் கையொப்பமிட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருந்த நிலையில், கொரோனா காரணமாக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடியவில்லை.

திருக்குமரன் தாக்கப்பட்ட இடம்
திருக்குமரன் தாக்கப்பட்ட இடம்

இதனால், அங்கே நடக்கும் மணல்கொள்ளை தொடர்பாக, சமூக ஆர்வலர் திருக்குமரன் என்பவரும், மக்கள் பாதை பொறுப்பாளர் மோகன்ராஜ் என்பவரும், வாங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனால், நெரூர் பகுதியில் தொடர்ந்து காவல்துறையினர் துணையோடு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த, காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வித்யாராணியன் (ஓய்வுபெற்ற எஸ்.ஐ), ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணி, கார்த்திகேயன், ஆகியோர் சேர்ந்து திருக்குமரனைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அவரைக் கொலைவெறியோடு, ' நாங்க மணல் அள்ளுவதை போலீஸில் சொல்லுவியா?' என்று அடித்து முகத்தில் தாக்கியதாகவும் சொல்கின்றனர். பின்பு, பலரும் அவ்வழியாக வரவே, அவரது கழுத்தைக் கத்தியால் கிழித்துவிட்டு, ஓடி விட்டதாகவும் சொல்கிறார்கள். உதடு, கழுத்து, கைகளில் கத்தியால் காயம்பட்ட திருக்குமரன், தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருக்குமரனிடம் பேசினோம். " மணல் கொள்ளையைத் தடுக்கச் சொல்லி நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், மணல் கொள்ளையைத் தடுக்காத போலீஸ், புகார் கொடுத்த என்னைப்பற்றி மணல் மாஃபியாக்களிடம் தகவல் கொடுத்தாங்க. அதனால், என்னை அவர்கள் கொலைவெறியோடு தாக்கினாங்க. அப்போது சிலர் வந்தாங்க. அதனால், கத்தியால் கீறிவிட்டு ஓடிட்டாங்க. இல்லைன்னா, என்னைக் குத்திக் கொன்னுருப்பாங்க. நாங்க கொடுத்த புகாரின்பேரில் முதலில் வாங்கல் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கலை. கரூர் டி.எஸ்.பிகிட்ட நாங்க முறையிட்டதும், அவர் சொல்லி என்னைத் தாக்கியவர்கள் மீது நான்கு பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டாங்க.

காவிரியில் அள்ளப்பட்ட மணல்
காவிரியில் அள்ளப்பட்ட மணல்
நா.ராஜமுருகன்

ஆனா, அவர்களைக் கைது பண்ணி, கோர்ட்டுல ஆஜர்படுத்தி, கொரோனா வைரஸ்னால சொந்த ஃபெயில்ல வெளியில் விட்டுட்டாங்க. இதனால், மறுபடியும் அவர்கள் மணல் கொள்ளையை நடத்தவே செய்வாங்க. 'என்னைக் கொலை செய்ய முயன்ற மணல் கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்' என மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளேன். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து, என்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வாங்கல் காவல் நிலையத்தில் பேசினோம்.

"நாங்க யாருக்கும் சார்பாகவும் நடக்கலை. மணல் திருடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். திருக்குமரனைத் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து, கோர்ட்டுல ரிமாண்டு பண்ணினோம். கொரோனா பாதிப்புனால அவர்களை ஃபெயில்ல வெளியே அனுப்பிட்டாங்க" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு