Published:Updated:

`ஏளனமாகப் பேசினர்; கண்டித்தேன், கேட்கல!'- 74 வயது தந்தையை எரித்துக்கொன்ற மகன் வாக்குமூலம்

புதுக்கோட்டை அருகே தந்தையின் நடவடிக்கை பிடிக்காததால், ஆத்திரமடைந்த மகன் தந்தையின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்துவிட்டு, உடலை அங்கேயே எரித்துள்ளார்.

கணேசன்
கணேசன்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மல்லாங்குடி காட்டுப்பகுதியையொட்டி, முதியவர் ஒருவரின் எலும்புக்கூடு கிடப்பதாக நமுணசமுத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் எலும்புக்கூட்டைக் கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுபற்றி, போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நச்சாந்துப்பட்டியில் ஒருவர் அடிக்கடி சுற்றித் திரிந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் அந்த முதியவரை காட்டுப்பகுதிக்குள் டூவிலரில் ஏற்றிச் சென்றதாகவும், அதற்குபின்பு அந்த முதியவரைப் பார்க்கவில்லை என்றும் அந்த பகுதியினர் சிலர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

`ஏளனமாகப் பேசினர்; கண்டித்தேன், கேட்கல!'- 74 வயது தந்தையை எரித்துக்கொன்ற மகன் வாக்குமூலம்

தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து போனது திருமயம் அருகே சேதுராப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (74) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருப்பையாவின் மகனான கணேசனைப் பிடித்து போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணேசன்தான் கருப்பையாவை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாரிடம் கணேசன் அளித்த வாக்குமூலம், ``எனது அப்பா கருப்பையா சேதுராபட்டியில் வசித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு நான் கோனாபட்டில் வசித்து வந்தேன். அம்மா இறப்புக்கு பிறகு அப்பா, வீட்டிற்கு போவதில்லை. அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்வார். உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று பணம் கேட்டு வாங்கி வந்து குடித்துவிட்டு வீட்டிற்கு போகாமல் நச்சாந்துபட்டி பேருந்து நிலையத்திலேயே தங்கிவிடுவார். இவர் தொடர்ந்து, இப்படி செய்ததால், உறவினர்கள் எல்லாம் என்னை கேலி, கிண்டல் செய்தனர். ஏளனமாகப் பேசினர்.

கணேசன்
கணேசன்

இதனைக் கூறி பலமுறை கண்டித்தேன். ஆனாலும், அவர் கேட்கவில்லை. அவரின் நடவடிக்கை எனக்கு பிடிக்காததால், அவரைக் கொன்றுவிட முடிவு செய்தேன். என்னுடைய பைக்கில் அவரை மல்லாங்குடி காட்டிற்குள் அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் அங்கேயே வைத்து எரித்துவிட்டேன். இதையடுத்து, கணேசனை கைது செய்த போலீஸார் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.