Published:Updated:

சென்னை: தாயைக் கத்தியால் குத்திய மகன்! - பாசத்தை மறைத்த சொத்து

சொத்துத் தகராறில் காயமடைந்த ஆலயம்மா
சொத்துத் தகராறில் காயமடைந்த ஆலயம்மா

சொத்துக்காக, தாயை பெற்ற மகனே கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆலயம்மா (70). இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனான பூபதி கூலி வேலை செய்து வருகிறார். ஆலயம்மா பெயரில் சொத்து இருக்கிறது. அந்தச் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி ஆலயம்மாளிடம் பூபதி அடிக்கடி பிரச்னை செய்துவந்தார்.

ஆலயம்மா
ஆலயம்மா

இந்நிலையில், நேற்று இரவு சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி தன் தாயிடம் பூபதி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு ஆலயம்மா, இப்போது சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த பூபதி, மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ஆலயம்மாவின் கழுத்து, கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

ஆலயம்மாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆலயம்மாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது ஆலயம்மா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் பூபதி, தன்னுடைய தாய் ஆலயம்மாவைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பூபதியைப் பிடித்து விசாரித்தனர்.

பூபதி
பூபதி

ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய சிசிடிவியில் ஆலயம்மாவிடம் தொப்பி அணிந்தபடி வரும் பூபதி தகராறு செய்கிறார். பின்னர் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்துகிறார். அடுத்து ஆலயம்மாளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்து பூபதி சென்றுவிடுகிறார். ரத்தம் கொட்டிய நிலையில் ஆலயம்மாள் அமர்ந்திருக்கிறார். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் பூபதி அங்கு வருகிறார். அப்போது ஆலயம்மாளைச் சரமாரியாக அடிக்கிறார்.

அப்போதும் கத்தியால் குத்திவிட்டு சென்றுவிடுகிறார். அதனால் ஆலயம்மா அதே இடத்தில் படுத்துக்கிடக்கிறார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத பூபதி மீண்டும் அங்கு வந்து, ஆலயம்மாவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்கிறார். அதனால் ஆலயம்மா தரையில் படுத்துக்கிடப்பதோடு வீடியோ முடிவடைகிறது.

சென்னை:`ஃபேஸ்புக் நட்பு; ரகசிய வீடியோக்கள்!' - அதிர்ச்சியில் மாணவி
சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

இந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போலீஸாரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பூபதியிடம் போலீஸார் விசாரித்தபோது தாயைக் கொலை செய்துவிட்டால் சொத்து கிடைத்துவிடும் என்று கூறியிருக்கிறார். தற்போது பூபதி சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆலயம்மாவிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் கூறியுள்ளார். அதை போலீஸார் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு