Published:Updated:

`தினமும் குடிச்சுட்டு வந்து சண்டை போட்டார்!' -இளையான்குடியில் மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

`மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் இளையான்குடியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image
Representational Image

சிவகங்கை மாவட்டம் சூரணம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (42). இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விவசாயக் கூலியான கர்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் மாலை மது அருந்திவிட்டே வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், மதுபோதையில் குடும்பத்தினரோடு சண்டையிட்டும் வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் எப்போதும்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டில் சண்டை வந்துள்ளது. அப்போது கர்ணனின் செயல்பாடுகள் பிடிக்காமல் அவரின் இளையமகன் பிரகாஷ் (16) தந்தையின் தலையில் கட்டையால் அடித்துள்ளான்.

பிரகாஷ்
பிரகாஷ்

இதனால் மயக்கம் அடைந்த கர்ணனை இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலை மோசமாக இருந்ததால் அவரை சிவகங்கை அரசு மருத்துமனைக்கு கொண்டுசெல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, அங்கு கொண்டு சென்றபோது வழியிலேயே கர்ணன் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து கர்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி அவரைப் புதைக்க முற்பட்டனர். ஆனால், கர்ணனின் உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். போலீஸாரின் விசாரணையில் கர்ணன் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

Representational Image
Representational Image

இதைத் தொடர்ந்து கர்ணனின் இளைய மகன் பிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். இறப்பை மறைத்து தடையங்களை அழிக்க முயன்றதாகக் கர்ணனின் மனைவி செல்வராணி மற்றும் மூத்த மகன் பிரவீனையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

`மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்ற கூற்றை நிரூபிக்கும் வகையில் இளையான்குடியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.