Published:Updated:

`பிரிந்து சென்ற மனைவி; சாக்கு மூட்டையில் அம்மா, அப்பா உடல்!'- அதிர்ச்சிகொடுத்த பெரம்பலூர் பட்டதாரி

தாய், தந்தை
தாய், தந்தை

வெகு நேரமாகியும் வீடு திறக்காமலிருந்திருக்கிறது. அத்தோடு காலை அவ்வழியே சென்ற பொதுமக்களைப் பார்த்து, வீட்டில் காலை வைத்தால் யாராக இருந்தாலும் வெட்டுவேன் என்று மாடியில் நின்றபடி அரிவாளைக் காட்டி மிரட்டியிருக்கிறார் ரமேஷ்.

பெரம்பலூரில் தாய், தந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு இருவரது உடலையும் தனித்தனியாகச் சாக்கு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு, வீட்டின் மாடியில் ஏறி அரிவாளுடன் அமர்ந்து கொண்டார் மகன். இதைப் பார்த்துப் பயந்துபோன அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்ததும் விரைந்து வந்து அவரைக் கைது செய்திருக்கிறது. இச்சம்பவத்தால் பெரம்பலூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். பி.ஏ வரலாறு பட்டதாரி. கூலித்தொழிலாளியான இவருக்கு விபத்து ஒன்றில் கால் துண்டானதால் செயற்கால் பொருத்தி இருந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 பெண், 1 ஆண் பிள்ளை உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக மனைவியைப் பிரிந்து தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமேஷ் தன் தந்தை ராமசாமி, தாய் செல்லம்மாள் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிக்கொலைசெய்து, இருவரது உடலையும் தனித்தனியாகச் சாக்கு மூட்டையில் கட்டி தனித்தனி அறையில் வைத்துவிட்டு, வீட்டின் மாடியில் ஏறி அரிவாளுடன் அமர்ந்துகொண்டார்.

வெகு நேரமாகியும் வீடு திறக்காமலிருந்திருக்கிறது. அத்தோடு காலை அவ்வழியே சென்ற பொதுமக்களைப் பார்த்து, `வீட்டில் காலை வைத்தால் யாராக இருந்தாலும் வெட்டுவேன்' என்று மாடியில் நின்றபடி அரிவாளைக் காட்டி மிரட்டியிருக்கிறார் ரமேஷ். இதனால் அச்சம் அடைந்த மக்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

ரமேஷ்
ரமேஷ்

விரைந்து வந்த போலீஸாரும் ரமேஷிடம் பேசியிருக்கிறார்கள். `நீங்கள் வந்தாலும் உங்களையும் வெட்டுவேன்' என்று போலீஸாரை மிரட்டியிருக்கிறார். பின்பு போலீஸார் அதன் அருகில் உள்ள மாடியில் ஏறி பின்பக்கமாக வந்து ரமேஷை மடக்கிப் பிடித்தனர். பின்னர் இறந்துகிடந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் போலீஸாரிடம் பேசினோம். ``ரமேஷ் ஒரு பட்டதாரி இளைஞன். மனைவியைப் பிரிந்துவாழ்வதால் மனப்பிரச்னையில் தவித்துள்ளார். மனைவியை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி பலமுறை அப்பா அம்மாவிடம் சொல்லியிருக்கிறான். அவர்களும் அந்தப் பெண்ணிடம் பேசியிருக்கிறார்கள். இவனுடைய செயல்பாடுகளால் அந்தப் பெண் வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதை ரமேஷிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

இந்த நிலையில், தன்னை மனைவியோடு வாழக் கூடாது என்று தாய், தந்தை நினைப்பதாக நினைத்து அவர்களை வெட்டிக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி மாடியில் அமர்ந்துகொண்டு பிரச்னை செய்திருக்கிறார். அவனுடைய ஆக்டிவிட்டீஸைப் பார்த்தால் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் தெரிகிறது. வழக்கு பதிவு செய்திருக்கிறோம். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர்கள் கொடுக்கும் ரிப்போர்ட்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம்" என முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு