திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சொத்துத் தகராறு காரணமாக தனது தாய், தந்தையை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிகிச்சை பலனின்றி தாய் மரணமடைந்தார். இந்நிலையில் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள ராஜகோபாலபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு 64 வயதாகிறது. இவரின் மனைவி பாப்பா. இவர்களுக்கு ராஜ்கண்ணன், இளையராஜா, இளவரசு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இந்த மூன்று மகன்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், கடைசி மகனான இளவரசு வீட்டில் பாலகிருஷ்ணனும் பாப்பாவும் வசிந்துவந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில்தான், தங்கள் பெற்றோரிடம், சொத்தில் பங்கு கேட்டு மூத்த மகன் ராஜ்கண்ணன், இரண்டாவது மகன் இளையராஜா ஆகியோர் அடிக்கடி தகராறு செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக, தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 22-ந்தேதி புகார் அளித்த தாய் பாப்பா, தங்களின் மகன்களான ராஜ்கண்ணன், இளையராஜா ஆகியோர் சொத்தில் பங்கு கேட்டு தன்னையும், தன் கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, மூத்த மகன் ராஜகண்ணன், இளையராஜா ஆகியோர் மீது தலையாமங்கலம் காவல் நிலையத்தினர், வழக்கு பதிவு செய்த நிலையில் ராஜ்கண்ணன் கைதுசெய்யப்பட்டார். இளையராஜாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில், தன் இளைய சகோதரரான இளவரசுவின் வீட்டுக்கு மிகுந்த கோபத்தோடு வந்த இளையராஜா, தன் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இளையராஜா, தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால், தந்தை பாலகிருஷ்ணன், தாய் பாப்பா ஆகியோரை கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. படுகாயங்களோடு ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலகிருஷ்ணன், பாப்பா இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக கொலை வழக்கு் பதிவுசெய்த தலையாமங்கலம் காவல்துறையினர், இளையராஜாவைத் தீவிரமாக தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த இளையராஜாவும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.