Published:Updated:

விழுப்புரம்: குடும்பப் பிரச்னை; குடிபோதையில் தாயைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மகன்!

சம்பவ இடத்தில் டி.எஸ்.பி பார்த்திபன் விசாரணை

பெற்றெடுத்த தாயையே மகன் கொலைசெய்து, வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்: குடும்பப் பிரச்னை; குடிபோதையில் தாயைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மகன்!

பெற்றெடுத்த தாயையே மகன் கொலைசெய்து, வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சம்பவ இடத்தில் டி.எஸ்.பி பார்த்திபன் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகேயுள்ள சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவருக்கு திருமணமாகி, நான்கு பெண் பிள்ளைகள், ஓர் ஆண் பிள்ளை இருக்கிறார்கள். இவருடனான பிரச்னையால், இவரின் மனைவி தாயார் வீட்டில் வசித்துவருகிறார். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் சக்திவேலின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், அவரின் தாய் அசோதை சக்திவேலுடன் வசித்துவந்திருக்கிறார். குடிப்பழக்கம்கொண்ட சக்திவேல், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாய் அசோதையிடம் பணம் கேட்டும், குடும்பப் பிரச்னையை மையப்படுத்தியும் வாக்குவாதம் செய்வாராம். இதற்கு அஞ்சிய அசோதை, இரவில் உறங்குவதற்கு மட்டும் எதிர்த்த வீட்டுக்குச் சென்று படுத்துக்கொள்வாராம். 

கொலை செய்யப்பட்டு அசோதை புதைக்கப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்டு அசோதை புதைக்கப்பட்ட இடம்

இந்த நிலையில், நேற்று இரவும் மது போதையில் வந்த சக்திவேல், அசோதையிடம் தகராறு செய்திருக்கிறார். அதன் பிறகு அசோதை காணாமல்போயிருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இன்று காலை சக்திவேலின் வீட்டைத் திறக்க முற்பட்டுள்ளனர். அப்போது வீட்டின் உள் பகுதியில் பூட்டப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டின் பின்புறத்தில் அசோதையின் புடவை கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது சக்திவேல் தப்பிக்க முயன்றிருக்கிறார்.

அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து விசாரித்தபோது, சக்திவேல் தன் தாய் அசோதையைக் கொன்று, வீட்டின் பின்புறத்தில் புதைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. இது குறித்து ஊர்மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். கொலைசெய்யப்பட்ட அசோதையின் அக்கா மகன் சக்கரவர்த்தி கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிந்திருக்கும் அரகண்டநல்லூர் போலீஸார், சக்திவேலைக் கைதுசெய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

மேலும், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட அசோதையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெற்றெடுத்த தாயையே மகன் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.