Published:Updated:

இன்ஷூரன்ஸுக்காகப் பெற்றோர் கொலை!- மகனைச் சிக்கவைத்த ஒரே பதில்

சத்யா கோபாலன்

இன்ஷூரன்ஸுக்கு ஆசைப்பட்டு தன் தாய், தந்தையைக் கொலை செய்துள்ளார், ஆந்திராவைச் சேர்ந்த நாராயண ரெட்டி.

கொலை
கொலை

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் தர்சி பகுதியைச் சேர்ந்தவர், நாராயண ரெட்டி. இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். நாராயண ரெட்டிக்கு அதிக மதுப் பழக்கம் இருந்துள்ளது. இதனால், தன் வீட்டில் உள்ளவர்களிடம் தினமும் தகராறு செய்துகொண்டிருப்பார். இவரின் நடவடிக்கையால், நாராயண ரெட்டியின் மனைவி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருடன் சண்டை போட்டுவிட்டு, தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கொலை செய்த மகன்
கொலை செய்த மகன்

இந்த நிலையில் நாராயண ரெட்டி, வேலை செய்துவந்த நிறுவனத்தின் பணத்தைத் தன் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பணத்தைத் திரும்பக் கேட்டு அதிகாரிகள் தொல்லைதந்துள்ளனர். பணத்தை எப்படி திருப்பித் தருவது என யோசித்த நாராயண ரெட்டிக்கு, தன் தாய் ஆதியம்மாவின் பெயரில் இன்ஷூரன்ஸ் கட்டிவந்தது ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஜூலை 21-ம் தேதி இரவு, தாய் ஆதியம்மாள் மற்றும் தந்தை வெங்கட ரெட்டி ஆகிய இருவருக்கும் மோரில் அதிகப்படியான தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார், நாராயண ரெட்டி.

அதிகப்படியான தூக்க மாத்திரை சாப்பிட்டால் பெற்றோர் இறந்து விடுவார்கள் என நினைத்த நாராயண ரெட்டிக்கு, தோல்வியே மிஞ்சியது. அதனால் தாய்-தந்தையின் மணிக்கட்டை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டில் திருட்டு நடந்ததுபோல அனைத்தையும் செட் செய்துவிட்டு, வீட்டின் வாசலில் படுத்துத் தூங்கியுள்ளார். மறுநாள் காலை, தன் வீட்டில் திருட்டு நடந்துவிட்டதாகவும் யாரோ மர்ம நபர் பெற்றோரைக் கொன்று விட்டு வீட்டிலிருந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டதாகவும் நாடகமாடியுள்ளார்.

கைது
கைது

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலில் யார் கொலை செய்தார்கள் எனத் தெரியாமல் காவலர்கள் திணறிவந்துள்ளனர். இதற்கிடையில் , ‘நான் வெளியில் தூங்கினேன். எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை’ என்று நாராயண ரெட்டி திரும்பத் திரும்பக் கூறி வந்துள்ளார். இதனால் அவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், ரூ.15 லட்சம் இன்ஷூரன்ஸ் பணத்துக்காக ஆசைப்பட்டு, பெற்றோரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, நாராயண ரெட்டியைக் கைதுசெய்த காவலர்கள், அவர்மீது இரட்டைக் கொலைவழக்கு பதிவுசெய்துள்ளனர்.