Published:Updated:

`குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன்

சென்னையில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியரை அவரின் மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட முத்து
கொலை செய்யப்பட்ட முத்து

சென்னை நெற்குன்றம் புவனேஸ்வரி நகர், லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (80). இவர் சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். ஆனால், அவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் முத்து, கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.

கொலை
கொலை

இதுதொடர்பாக முத்துவின் மருமகள் ஆனந்தாயி என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி விசாரணை நடத்தினார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான முத்துவுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வந்துள்ளது. அந்தப் பணத்தை தன்னுடைய செலவுக்குப் போக மீதமுள்ள தொகையை குடும்பத்தினருக்கு முத்து கொடுத்துவிடுவார்.

இவரின் கடைசி மகன் பாலாஜி, கட்டட மேஸ்திரியாகப் பணியாற்றிவருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாலாஜி, வேலைக்குச் சரிவர செல்லாமல் எந்நேரமும் மது குடித்துவந்துள்ளார். இந்தச் சமயத்தில் குடிப்பதற்கு பணம் கேட்டு முத்துவை பாலாஜி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். பணம் கொடுக்கவில்லையென்றால் அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல நேற்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார் பாலாஜி. ஆனால், முத்து பணம் கொடுக்கவில்லை. இதனால் கட்டட வேலைக்குப் பயன்படுத்தும் கட்டையால் முத்துவை சரமாரியாகத் தாக்கியுள்ளார் பாலாஜி. இதில் மயங்கிய முத்துவை வீட்டில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பாலாஜி
பாலாஜி

அப்போது காயம் எப்படி ஏற்பட்டது என்று மருத்துவமனையில் உள்ளவர்கள் கேட்டதற்கு, முத்துவின் பேரன் ஒருவர், தாத்தாவை சித்தப்பா அடித்துக் கொலை செய்துவிட்டார்' என்று கூறியுள்ளார். இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே போலீஸார் விசாரணை நடத்தி பாலாஜியைக் கைது செய்துள்ளனர். அப்பா இறந்த தகவல்கூட தெரியாதளவுக்கு பாலாஜி, போதையில் இருந்துள்ளார். அதனால் முத்துவின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்து, மகன், மருமகள்களுடன் வசித்து வந்தார். மதுகுடிக்க பணம் கேட்டு முத்துவின் மகன் பாலாஜி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் முத்துவை பாலாஜி சூடு வைத்தும் அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். தள்ளாத வயதிலும் மகனின் செயலை முத்து சகித்து வந்துள்ளார். போதையில் இருந்த பாலாஜி, மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் முத்துவை அடித்தே கொலை செய்துள்ளார்'' என்றார்.

`அம்மாவிடம் பழகாதே; எச்சரித்தும் கேட்காத ஆட்டோ டிரைவர்'- கொலை செய்த மகன்!

குடிப்பழக்கம் காரணமாகப் பெற்ற அப்பா என்றுகூட பாராமல் போதையில் கொலை செய்த பாலாஜி, காவல் நிலையத்தில் போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். அப்போது எதற்காக இப்படிச் செய்தாய் என்று போலீஸார் பாலாஜியிடம் கேட்டதற்கு, நான் வழக்கம்போலதான் அடித்தேன். அப்பா இறந்தது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். பாலாஜியின் குடிப்பழக்கம், அப்பாவை கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டதே என்று கூறியபடி முத்துவின் மற்ற மகன்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதறி அழுதனர்.