Published:Updated:

`போலீஸுக்குப் போக வேண்டாம்... அலைக்கழிப்பாங்க!’ - சேலத்தில் தந்தை கொலையில் நாடகமாடி சிக்கிய மகன்

Representational Image
Representational Image

`போலீஸாரிடம் புகார் கொடுத்தால் விசாரணைக்குக் கூப்பிட்டு அலைக்கழிப்பார்கள். அதனால் போலீஸுக்குத் தகவல் கொடுக்காமல் உடலை எரித்து விடலாம்.'

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (62). இவர் கோலப்பொடி தயாரிக்கும் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வேம்பா. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்குப் பூபதி என்ற மகனும் வசந்தா என்ற மகளும் இருக்கிறார்கள்.

பூபதி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மோகனபிரியா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் காதல் திருமணத்தை பழனிசாமி ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் தந்தை பழனிசாமி வசித்த வீட்டிலேயே பூபதி தன் மனைவியோடு வசித்து வந்தார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரிப்பதில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

பழனிசாமி
பழனிசாமி

கடந்த மாதம் தன் தந்தை பழனிசாமியிடம் வீட்டைப் பிரித்து தரும்படி பூபதி தகராறு செய்துள்ளார். அதையடுத்து மகன், மருமகள் இருவரையும் வீட்டைவிட்டு வெளியேறும்படி பழனிசாமி கூறியுள்ளார். இதனால் பூபதி அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து தனிக் குடித்தனம் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பூபதி, தன் தந்தை பழனிசாமி வீட்டுக்கு வந்து, கதறி அழுது அக்கம் பக்கத்தினரை அழைத்து, 'தன் தந்தை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்' என்று கூறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுப்பதாகக் கூறினர்.

`கபடிப் போட்டிக்காக நடந்த கொலை..!’- கோவையில் பழிதீர்க்கும் படலத்தில் சிக்கிய நண்பர்கள்

அதற்குப் பூபதி, 'போலீஸாருக்கு புகார் கொடுத்தால் விசாரணைக்குக் கூப்பிட்டு அலைக்கழிப்பார்கள். அதனால் போலீஸுக்குத் தகவல் கொடுக்காமல் உடலை எரித்துவிடலாம்' என்றார். இதனால் அருகில் வசிப்பவர்களும் உறவினர்களும் பூபதி மீது சந்தேகம் அடைந்து கொண்டலாம்பட்டி காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணியும் எஸ்.ஐ ராமகிருஷ்ணனும் விசாரணை மேற்கொண்டு உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பிறகு இக்கொலை தொடர்பாகப் பூபதியிடம் விசாரணை செய்தபோது பதற்றமாக முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்ததை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, 'நான்தான் என் தந்தையைக் கழுத்து அறுத்துக் கொன்றேன்' என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் போலீஸாரிடம், ''நேற்று முன்தினம் என் தந்தையின் வீட்டுக்குக் குடிபோதையில் சென்றேன். என் தந்தையிடம் சொத்தைப் பிரித்து தரும்படி கேட்டேன். சொத்தைப் பிரித்து தருவதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, என்னைத் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து நான் மறைத்துக் கொண்டு வந்த கத்தியை எடுத்து என் தந்தையின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினேன்.

கைது
கைது

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தார். பின்னர் கழுத்தை அறுத்துக்கொன்றேன். எப்போதும் அவர் தூங்குவதைப்போல போர்வை எடுத்து போர்த்தி விட்டு கதவை தாழிட்டேன். அருகில் உள்ள கிணற்றில் கத்தியை வீசிவிட்டு ஓடி விட்டேன்.

பிறகு, நேற்று வந்து என் தந்தையை அடையாளம் தெரியாதவர்கள் கொன்றுவிட்டதாக நாடகம் போட்டு காவல்துறைக்குத் தெரியாமல் உடலை எரித்து விடலாம் என முடிவு செய்தேன். ஆனால், காவல்துறைக்கு தகவல் தெரிந்ததால் மாட்டிக்கொண்டேன்'' என்றார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பூபதியைக் கைது செய்ததோடு கிணற்றில் வீசிய கத்தியை எடுப்பதற்காக மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பின் செல்ல