பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும்பாலும் பெண்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமே நடைபெறுகின்றன. குறிப்பாக, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆண்கள் அதிகம். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மகன் ஒருவர், அப்படி ஒரு குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ முரளி மோர்வல் என்பவரின் மகன் கரண் மோர்வல் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெண் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தன்னை கரண் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸில் புகார் செய்தார். ஆனால், குறிப்பிட்ட தினத்தில்தான் மருத்துவமனையில் இருந்ததாகக் கூறி மருத்துவமனை ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து முன் ஜாமீன் கோரினார் கரண். ஆறு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த கரண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதே நேரம், அவர் முன் ஜாமீன் கோரி கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலி என்று தெரிய வந்தது. இதையடுத்து, புதிதாக மோசடி வழக்கு ஒன்றும் கரண் மீது பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி கரண் தாக்கல் செய்த மனுவை மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து போலீஸார் கரணை தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்தார். அவரைப்பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5,000 சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர். அவரை போலீஸார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் இந்தூரில் ரெய்டு நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.