Published:Updated:

`எங்க அம்மாவை யார் காப்பாற்றுவது?’ - சொத்து விவகாரத்தில் தந்தையைக் கொன்ற முதல் மனைவியின் மகன்கள்

கொலை
கொலை

நான் ஏற்கெனவே உங்களுக்கு அதிகமாகச் செய்துவிட்டேன் இனிமேல் என்னால் எதுவும் தர முடியாது என்று கறாராகச் சொல்லி அனுப்பியிருக்கிறார் கனகசபை.

`சொத்துகள் எல்லாவற்றையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது. எங்க அம்மாவை யார் காப்பாற்றுவது?’ என்று தந்தையிடம் சண்டை போட்டதோடு அவரைக் கொல்வதற்காகப் பின்தொடர்ந்து தந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள் அவரின் மகன்கள். அரியலூர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் கீழையூர் கிராமத்தில் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அஞ்சம்மாள் என்பவருக்குக் கமலா என்ற மகளும் கலைச்செல்வன், கலைவாணன் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி சங்கீதாவுக்குத் தினகரன், தினேஷ்குமார் என்ற இரு மகன்களும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

கனகசபைக்கு முதல் மனைவியுடன் வாழ விருப்பம் இல்லாமல் கடந்த ஆண்டு அவரைப் பிரிந்து சென்றிருக்கிறார். அத்தோடு நீதிமன்றத்திலும் விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது கனகசபை தன் இரண்டாவது மனைவி சங்கீதாவுடன் திருமழப்பாடி கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கு துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்து கனகசபையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை

மின் கட்டுப்பாட்டு ஊழியர் அறைக்குச் சென்று பார்த்தபோது கனகசபை ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். அதைத்தொடர்ந்து போலீஸார் கனகசபையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்
அரியலூர் அரசு மருத்துவமனையில் போலீஸார்

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை சந்தேகத்தின் பேரில் கனக சபையின் இரண்டாவது மனைவி சங்கீதாவிடம் முதலில் விசாரித்தனர். அதன் பிறகு முதல் மனைவி மற்றும் அவர்களின் இரு மகன்களையும் விசாரித்ததில் இருவரும் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்களின் தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். எதற்காகக் கொலை செய்தோம் என்று காவல்துறையினரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் வட்டாரத்தில், ``அவரின் முதல் மனைவியான அஞ்சம்மாளை கனகசபை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தின் வழக்கு கால தாமதம் ஆகும் என்பதால் அவரின் மனைவி ஜீவனாம்சம் தாருங்கள் என்று பலமுறை கேட்டு பிரச்னை செய்திருக்கிறார்கள்.

அரியலூர்
அரியலூர்

அத்தோடு அவருடைய பூர்வீகச் சொத்தை இரண்டாவது மனைவிக்குக் கொடுக்க இருப்பது முதல் மனைவியின் மகன்களுக்குத் தெரிந்ததும் அவர்களே நேரடியாகச் சென்று எங்களுக்குச் சொத்தைக் கொடுங்கள் என்று பிரச்னை செய்திருக்கிறார்கள். அதற்குக் கனகசபை நான் ஏற்கெனவே உங்களுக்கு அதிகமாகச் செய்துவிட்டேன். இனிமேல் என்னால் எதுவும் தர முடியாது என்று கறாராகச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த ஆவேசத்தில் அவரின் இரு மகன்களும் கனகசபை எங்கெங்கு போகிறார் என்று ஒரு வாரமாக பாலோ செய்து அவரை கொலை செய்தோம் என்று எங்களிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டார். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு