அரசியல்
Published:Updated:

“ஹலோ சார்... நீங்க ரொம்ப லக்கி!”

வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்...

வலைவிரிக்கும் ஆன்லைன் கிளிகள்...

“ஹலோ சார், உங்களுக்கு எங்க பேங்க்குல பர்சனல் லோன் சேங்ஷன் ஆகியிருக்கு. எங்கேயும் அலைய வேண்டாம்... ஈஸியா நீங்க உட்கார்ந்த இடத்துக்கே பணம் வந்துடும்!”

“உங்களோட ஏ.டி.எம் கார்டு எக்ஸ்பைரி ஆகிடுச்சு. புது கார்டு அனுப்பணும்... டீடெய்ல் தர முடியுமா?”

“உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பம்பர் ப்ரைஸ் விழுந்திருக்கு. நீங்க ரொம்ப லக்கி!”

நுனி நாக்கு ஆங்கிலத்திலோ அல்லது தெள்ளத் தெளிவான தமிழிலோ... இளம்பெண்கள் சிலர் கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்லியிருப் பார்கள். இப்படி ஆசை வலைவிரிக்கும் அழைப்புகள் அத்தனையும் உங்களிடம் கறக்க நினைக்கும் தகவல்கள் இவைதான்... வங்கிக் கணக்கு விவரங்கள், ஏ.டி.எம் ரகசிய பின் நம்பர் மற்றும் ஆதார் விவரங்கள். இவற்றைக் கொடுத்து விட்டீர்களென்றால் எப்போது வேண்டு மானாலும் உங்கள் கணக்கிலிருந்த பணம் மொத்தமாக வழித்தெடுக்கப்பட்டு... கிளிகள் பறந்துவிடும். பழைய டெக்னிக்தான்... ஆனால், ஏமாற்றுபவர்கள் புதிது புதிதாக... தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள். சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு ‘பிரியாணி’ ரூ.40,000! - புதுரக ஆன்லைன் மோசடி

சென்னையில் ஒரு சம்பவம். இதைப் படித்தால், ‘இப்படிக்கூட நடக்குமா, நம்ப முடியவில்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப்போலவே ஆரம்பத்தில் அப்படித்தான் நாங்களும் எண்ணினோம். ஆனால், மத்திய குற்றப்பிரிவில் இப்படியொரு புகார் பதிவாகியிருப்பதுதான் நம்மையும் நம்ப வைத்தது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஆன்லைனில் பிரபல ஹோட்டலின் பெயரில் வந்த பிரியாணி ஆஃபரைப் பார்த்து, விட்டில்பூச்சி விளக்கில் விழுந்ததுபோல விழுந்திருக்கிறார். `400 ரூபாய் மதிப்பிலான பிரியாணி, வெறும் 76 ரூபாய்’ என்று வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்து, 76 ரூபாயை ஆன்லைனிலேயே செலுத்தியிருக்கிறார். அப்போது, ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘ஆஃபரில் பிரியாணி வேண்டுமென்றால், நீங்கள் எங்கள் நிறுவனத்தின் ப்ரைம் டைம் மெம்பராக வேண்டும். அப்படிச் சேர்ந்தால் பிரியாணி மட்டுமன்றி, எங்கள் நிறுவனத்தின் உணவுகள் அனைத்தும் 50 சதவிகித தள்ளுபடியில் லைஃப் டைம் ஆஃபராக வழங்கப்படும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்துப் புல்லரித்துப்போன அந்த மாணவி, சம்பந்தப்பட்ட ஆன்லைன் சேவை மையத்தின் எண்ணைத் தொடர்புகொண்டு ஆஃபர் விஷயத்தை விசாரித்திருக்கிறார். நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசிய பெண் ஒருவர், “மன்னிக்கவும் மேடம், நீங்கள் ப்ரைம் டைம் மெம்பர்ஷிப் தொகையான 5,000 ரூபாயைச் செலுத்தினால்தான், இப்போது ஆர்டர் செய்திருக்கும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கான ஆஃபரைப் பெற முடியும். இல்லையென்றால், நீங்கள் செலுத்திய 76 ரூபாயைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம்” என்று கறாராகக் கூறியதை நம்பியவர், அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு, தனது பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து 5,000 ரூபாயை அனுப்பியிருக்கிறார். அப்போது கால் சென்டரிலிருந்து, “பணம் வந்து சேரவில்லை; திரும்பவும் ட்ரை பண்ணுங்கள்” என்று சொல்லவே... முட்டாள்தனமாக இப்படியே எட்டு முறை திரும்பத் திரும்ப ஐந்தாயிரம், ஐந்தாயிரமாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறார். மொத்தமாக 40,000 ஆயிரம் ரூபாயைச் சுருட்டிய அந்தக் கும்பல், அதன் பிறகு செல்போனை அணைத்துவைத்து விட்டது. `இப்படியெல்லாம் கூடவா அபத்தமாக ஏமாறுவார்கள்...’ என்று நினைக்க வேண்டாம். இது குறித்து சென்னை மத்தியக் குற்றப் பிரிவிலும் புகார் பதிவாகியிருக்கிறது.

நெட்வொர்க்கை ட்ரேஸ் செய்ய முடியாத பட்டன்வைத்த பழைய மாடல் செல்போன் தான் இது போன்ற மோசடி கும்பல்களின் மூலதனம். கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் போலியான ஆன்லைன் சந்தைகளில் மேய்வதே மோசடிக் கும்பலுக்கு நீங்கள் அளிக்கும் இலவச ‘க்ளு.’ இப்படி ஒருவரின் சூழலையும், விருப்பு வெறுப்புகளையும் அறிந்தே தூண்டில் போடுகின்றன மோசடிக் கும்பல்கள்.

“உங்க மகள் மாதிரி நெனைச்சிக்கோங்க!”

இப்படி ஏமாந்தவர்களில் ஒருவர்தான் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த கருப்பையா. கடும் பணம் நெருக்கடியிலிருந்தவர் லோன் தொடர்பாக சில ஃபைனான்ஸ் நிறுவனங்களின் சைட்களை ஆன்லைனில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் அவரது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. அவரிடம் பேசிய பெண் ஒருவர், “நீங்க பணத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறதா தெரியுது. கவலைப்படாதீங்க, உங்க கஷ்டம் ஒரே நாளில் தீர்ந்துடும்” என்று ஆறுதலாகப் பேசியவர், இரண்டு லட்சம் ரூபாய் லோன் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். மேலும், குடும்ப விவரங்களைக் கேட்டு ஆறுதல் சொன்ன அந்தப் பெண், “உங்க மகள் மாதிரி நெனைச்சிக்கோங்க... லோன் வேணும்னா உங்க கணக்கில் ஓரளவுக்காவது பணம் இருக்கணும். அப்பதான் நம்பி லோன் கொடுப்பாங்க. ஒரு 20,000 ரூபாயைப் புரட்டி வங்கிக் கணக்குல போடுங்க” என்று கூறியிருக்கிறார். கருப்பையாவும், ‘அவர்களது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லாமல், நம் கணக்கில்தானே போடச் சொல்கிறார்கள்’ என்று நம்பிக்கையுடன் அவரது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்.

சில நிமிடங்களில் மீண்டும் தொடர்புகொண்ட அந்தப் பெண், அவரது ஆதார் கார்டு விவரங்கள், வங்கி டெபிட் கார்டு அட்டை விவரங்களுடன், நைஸாகப் பேசி ‘பின்’ நம்பரையும் வாங்கியிருக்கிறார். தொடர்ந்து, “உங்களுக்கு லோன் ஓகே ஆகிவிட்டது... வாழ்த்துகள் சார்” என்று தொடர்பைத் துண்டித்தார். மகிழ்ச்சியுடன் தனது வங்கிக் கணக்கை சரிபார்ப்பதற்குள் கருப்பையாவுக்கு வந்தது ‘ஜீரோ பேலன்ஸ்’ மெசேஜ். அதிர்ச்சியடைந்த கருப்பையா, மீண்டும் அந்தப் பெண்ணின் செல்போனைத் தொடர்புகொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டிருந்ததை அறிந்த கருப்பையா, சென்னை சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார்.

“ஹலோ சார்... நீங்க ரொம்ப லக்கி!”

‘சின்ன மீன்’ குமரேசன்!

போலீஸார் அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வுசெய்தபோது, சேலத்தில் வாங்கப்பட்ட அந்த சிம்கார்டு, நாமக்கல்லில் இருப்பதாகத் தெரிந்தது. அடுத்தடுத்த விசாரணையில் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி கால் சென்டர்களை நடத்தி, பல லட்சங்களைச் சுருட்டிய ‘மாஸ்டர் மைண்ட்’ ஜே.எஸ்.ஆர்.கோபிகிருஷ்ணனின் கும்பலைச் சேர்ந்த குமரேசன்தான் கருப்பையாவை ஏமாற்றியிருக்கிறார் என்பது தெரியவந்தது. உடனே அவரை அமுக்கியது போலீஸ்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் ஒரு காம்ப்ளக்ஸில் கடந்த ஆறு மாதங்களாக ‘ஃபேதர்லைட் டெக்’ என்ற பெயரில் போலி கால் சென்டரை நடத்திவந்திருக்கிறார் குமரேசன். அங்கு ஒன்பது பெண்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துவந்தனர். அவர்களில் ஆறு பேர் 15 வயது சிறுமிகள். சிறுமிகளை மட்டும் எச்சரித்து அனுப்பிவிட்டு, மற்றவர்களை சென்னைக்கு அழைத்துவந்தனர் போலீஸார்.

குமரேசனிடம் போலீஸார் விசாரித்தபோது, “செல்போன் நம்பர்களை ‘டேட்டா பேஸ்’ ஏஜென்ட்களிடமிருந்து மொத்தமாக வாங்கி, கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்கள் மூலமாகப் பேசவைப்போம். தினமும் ஒருவரையாவது லோன் வாங்கச் சம்மதிக்கவைக்க வேண்டும் என்பதே அந்தப் பெண்களுக்கு கொடுக்கப்படும் டார்கெட். நைஸாகப் பேசி, வங்கி விவரங்கள் கிடைத்தவுடன், பணத்தை அபேஸ் செய்துவிட்டு, செல்போனை அணைத்து வைத்துவிடுவோம் அல்லது ஏமாற்றப்பட்டவர் களின் எண்ணை பிளாக் செய்துவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

அவ்வளவு சீக்கிரம் தன்னைக் கண்டுபிடிக்காமலிருக்க குமரேசன் செய்த நூதன பரிமாற்றம் குறித்தும் போலீஸார் நம்மிடம் விவரித்தனர். “தான் ஏமாற்றிய நபரின் வங்கிக் கணக்கிலிருந்தே ‘ரம்மி’ உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் அந்தப் பணத்தை ரீசார்ஜ் செய்திருக்கிறார் குமரேசன். இதற்கிடையே அதே நபரின் பெயரில் ஆன்லைனிலேயே இன்னொரு வங்கிக் கணக்கை ஆரம்பிப்பார். பிறகு ‘விளையாட விருப்பம் இல்லை’ என்று அந்தப் பணத்தை மற்றோர் எண்ணுக்கு டிராப் செய்து எடுத்துவிடுவார். சூதாட்டம் ஆடும் ஆயிரக்கணக் கானவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இதேபோல பணம் டிராப் செய்யப்பட்டிருப்பதால், குமரேசன் போன்ற நபர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும்” என்றார்கள்.

‘சுறாமீன்’ ஜே.எஸ்.ஆர்!

குமரேசன் சின்ன மீன்தான். இந்தத் தொழிலில் சுறாமீனாகச் செயல்பட்டுவந்திருக்கிறார் ஜே.எஸ்.ஆர்.கோபிகிருஷ்ணன். குமரேசனின் குருவான இவர், ஏற்கெனவே ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக சில முறை சிறை சென்று மீண்டவர். சமீபத்தில் கோவை, கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரில் இவரைச் சந்தேகித்தது மத்தியக் குற்றப் பிரிவு. கால் சென்டரிலிருந்து பேசிய பெண் ஒருவர், எட்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகச் சொல்லி, ஐந்து தவணைகளாக 1,39,500 ரூபாயை செல்வராஜிடமிருந்து வசூலித்துவிட்டு கம்பிநீட்டிவிட்டார். இந்த வழக்கில்தான் கோபாலகிருஷ்ணனின் பழைய ஃபைல்களை தூசிதட்டி எடுத்தது போலீஸ். அதில் கிடைத்த சில துப்புகளைவைத்து, திருமுல்லைவாயலில் இருக்கும் போலி கால் சென்டரை வளைத்தது போலீஸ். கோபிகிருஷ்ணன், அவரின் கூட்டாளிகள் வளர்மதி, அவரின் கணவர் அந்தோணி உட்பட 12 பேர்கொண்ட பெரிய நெட்வொர்க்கையை கொத்தாக அள்ளியது போலீஸ்.

மத்தியக் குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் சரவணகுமாரிடம் பேசினோம். ``ஓரிரு வருடங்களுக்கு முன்னர் போன் மூலம் லோன் வாங்கித் தருவதாக மர்ம நபர்கள் கூறியதில், பணத்தை இழந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி தொடர் விசாரணை நடத்திவந்தோம். அப்போதே கோபிகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரைக் கைது செய்து, சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தோம். ஆனால், புற்றீசல்போல வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களில் இவர்கள் முளைத்துவிடுகிறார்கள். இந்தநிலையில்தான், கோவை செல்வராஜ் கொடுத்த புகாரில் மீண்டும் கோபிகிருஷ்ணனைப் பிடித்தோம். அவர் சென்னையில் பத்து இடங்களில் போலி கால் சென்டர்களை நடத்திவந்திருக்கிறார்.

“ஹலோ சார்... நீங்க ரொம்ப லக்கி!”

சென்னையில் இவர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காகச் செயல்பட்டு, ஆடம்பர வாழ்க்கை நடத்திவந்தனர். இவர்களின் போலி கால் சென்டர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களைப்போலவே அதிநவீனமாக இருந்தன. ரிசப்ஷனிஸ்ட்கள், புராஜெக்ட் மேனேஜர், டேட்டா அனலிஸ்ட், டீம் லீடர் என கோட், சூட் அணிந்து, டை கட்டி பந்தாவாக வேலை பார்த்தார்கள். ‘ஆடி’, பி.எம்.டபுள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களில் வலம்வந்திருக்கிறார்கள். மோசடி செய்த பணத்தை இலங்கை உள்ளிட்ட சில வெளிநாடுகளில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரீசார்ஜ் செய்து, அங்கிருந்து டிராப் செய்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஷாம் வீட்டில் நடந்த சூதாட்டத்திலும் கோபிகிருஷ்ணன் கலந்துகொண்டிருக்கிறார்” என்றவர்கள் கோபிகிருஷ்ணனின் பின்னணியையும் பகிர்ந்துகொண்டார்கள்.

“பத்தாவது வரை மட்டுமே படித்த கோபிகிருஷ்ணன், ஆரம்பத்தில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். அந்த நிறுவனங்கள் கால் சென்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களைச் சேர்த்திருக்கின்றன. அப்போது கிடைத்த அனுபவத்தைக்கொண்டு போலி கால் சென்டர்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். இவரிடம் தொழிலைக் கற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் செல்வா, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ‘பென்ஸ்’ சரவணன் ஆகியோர் தனியாகத் தொழில் தொடங்கி, அப்பாவி மக்களை ஏமாற்றிவந்திருக்கிறார்கள். அவர்களையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றார்.

நான்கு சுவர்களுக்கு மத்தியில் பத்திரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், கட்டற்ற இணைய உலகம் உங்களை அங்குலம் அங்குலமாக அளந்துவருகிறது. மோசடி நபர்களிடம் மயங்கி, நீங்கள் விடும் ஒரு வார்த்தைகூட நொடியில் உங்களை நடுத்தெருவில் நிறுத்திவிடும். டிஜிட்டல் இந்தியா இது!