Published:Updated:

பொள்ளாச்சி முதல் தெலங்கானா வரை... 2019-ல் இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்முறைக் குற்றங்கள்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அடுத்த ஆண்டாவது, பெண்கள், குழந்தைகள், மாற்றுப் பாலினத்தவர்கள்மீது பாலியல் வன்கொடுமையைத் திணிக்காத தேசமாக இந்தியா இருக்குமா என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை.

'பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்' என்னும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்புடன்தான் இந்தியாவின் 2019 தொடங்கியது. இதோ, 2020 நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலங்கானா மருத்துவரைப் பாலியல் வன்புணர்வு செய்து எரித்ததாகக் கூறப்படும் நான்குபேரை போலீஸ் என்கவுன்டர் செய்தது சரியா, தவறா? என்கிற விவாதத்தில் தேங்கி நிற்கிறோமே ஒழிய, அடுத்த ஆண்டாவது பெண்கள், குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர்கள்மீது பாலியல் வன்கொடுமையைத் திணிக்காத தேசமாக இந்தியா இருக்கும் என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை.

தமிழகத்தில் 342 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2015 - 2017 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 13.1 சதவிகித பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுடன் மத்தியப்பிரதேச மாநிலம் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 342 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

'போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் சரிவர கையாளப்படுவது இல்லை', 'பெரும்பாலான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களை காவல்துறை புகார்களாக எடுத்துக்கொள்வதில்லை' என்பன போன்ற பிரச்னைகள் இன்றும் தொடர்வதால், குற்ற ஆவணக் காப்பகத்தின் இந்த எண்ணிக்கையும் சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இருந்தும், 2019-ல் மட்டும் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையிலான பாலியல் வன்கொடுமை குற்றப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்...

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகளுக்கான நூலகக்குறிப்புகளை எடுக்கும் வேலையில் பணியமர்த்தப்பட்டிருந்த பெண் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கடந்த ஏப்ரல் மாதம், நீதிபதிகளின் முன்பு அஃபிடவிட் ஒன்றைத் தாக்கல்செய்தார். முகம் சுளிக்கவைக்கும் வகையில் ரஞ்சன்கோகாய் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், அதைத் தான் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தால், நிர்வாகரீதியாகத் தன்னைத் துறைமாற்றம் செய்து, இறுதியில் பணியிலிருந்து நீக்கியதாகவும் அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரை அடுத்து, நீதிபதி எஸ்.ஏ.போப்டே அடங்கிய விசாரணைக் கமிட்டி, கோகாய் மீதான குற்றச்சாட்டை விசாரித்தது. நீதிபதியின் மீதான குற்றச்சாட்டை நீதிபதிகளே எப்படி விசாரிக்கலாம் என்றும், வெளியிலிருந்து விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இதற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. இருந்தும் போப்டே தலைமையிலான கமிட்டி, கோகாய் குற்றமற்றவர் எனக் கூறி புகாருக்கு முற்றுப்புள்ளிவைத்தது.

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் மீதான பாலியல் புகார்...

முகிலன்
முகிலன்
நா.ராஜமுருகன்

கூடங்குளம் அணுஉலைப் பிரச்னை, ஆற்றுமணல் கொள்ளை, ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் மிகமுக்கியப் பிரச்னைகளில் களத்தில் முன்நின்று வழிநடத்தியவர், சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆவணங்களைக் கடந்த15 பிப்ரவரி அன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்ட முகிலன், அன்று இரவு மதுரைக்கு ரயில் ஏறியிருந்த சூழலில் காணாமல் போனார். 'வேதாந்தா நிறுவனம் அவரைக் கடத்தியிருக்கலாம்'; ' காவல்துறை அவரைத் தாக்கியிருக்கலாம்'; 'மணல்கொள்ளை மாஃபியாக்கள் அவரை ஏதேனும் செய்திருக்கலாம்' என்றெல்லாம் பல கோணங்களிலும் அவரைப் பற்றிய செய்திகள் பரவின.

சிபிசிஐடி போலீஸார் முகிலனைத் தேடும்பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், முகிலன் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, அவருடன் களப்போராட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டுவந்த பெண் ஒருவர், குளித்தலை காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்தார். 140 நாள்களுக்குப் பிறகு, திருப்பதி ரயில்நிலையத்தில் ரயில்முன் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திரப் போலிஸார் கைதுசெய்து தமிழகப் போலீஸிடம் ஒப்படைத்தனர். திருச்சியில் சிறைவைக்கப்பட்ட முகிலன், பிறகு பிணையில் வெளிவந்தார். அவர் மீதான பாலியல் குற்றப் புகார் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்துத் தடைகளையும் கடந்து, போராட்டக் களத்துக்கு வரும் பெண்களின் பாதுகாப்புகுறித்து கேள்வி எழுப்புவதாக முகிலன் மீதான பாலியல் குற்றப்புகார் அமைந்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கடந்த பிப்ரவரி 24 அன்று, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமைப் புகார், தமிழகத்தையே நடுங்கவைத்தது. தனக்கு ஃபேஸ்புக் வழியாக அறிமுகமான நண்பர்கள் நான்கு பேர், 'அவுட்டிங் செல்லலாம்' எனக்கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு பலமுறை அதைத் தன்னிடம் காண்பித்து மிரட்டி, பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் அந்தப் பெண் தனதுபுகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அடுத்த இரண்டு நாள்களில், கல்லூரி மாணவியின் அண்ணன் தனியாகக் கொடுத்த புகாரில்,"பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி ஆபாசமாகப் படம்பிடித்தது பற்றிக் கேட்டேன். அதற்கு செந்தில், வசந்தகுமார் , மணிவண்ணன், `பார்'நாகராஜ், பாபு உள்ளிட்டவர்கள் என்னைத் தாக்கினார்கள் என்றும் பல பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்கிப் படம்பிடித்த வீடியோக்கள் அவர்களிடம் இருக்கிறது" என்றும் தனதுபுகாரில் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சியினரின் தலையீடும் இதில் இருந்ததாகக் கூறப்பட்டது. முகம் மறைக்கப்பட்டு கதறும் குரல் ஒன்று "என்ன விட்டுருங்க அண்ணா!" என்று அரற்றிய ஒரு வீடியோ, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. தேசிய மகளிர் ஆணையம் வரை இந்த விவகாரம் சென்றது. தமிழகக் காவல்துறைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி பல பக்கங்களிலிருந்தும் அழுத்தம் தரப்பட்டன. வழக்கைத் தற்போது சிபிஐ விசாரித்துவருகிறது.

சுவாமி சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை விவகாரம்...

Chinmayanand
Chinmayanand

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் எம்.பி, சுவாமி சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி ஒன்றில் படித்துவந்த 23 வயது மாணவி, கடந்த ஆகஸ்ட் 28ல் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தார்.  தன்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையை சுவாமி சின்மயானந்த் பாழ்படுத்திவிட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், சுவாமி சின்மயானந்த்தை உத்தரப்பிரதேச காவல்துறை கைதுசெய்தது. அதன்பிறகு ஒருமாதம் கழித்து, சின்மயானந்த்திடம் பணம் பறிக்க முயன்றதாகப் புகார் கொடுத்த பெண்ணையும் காவல்துறை கைதுசெய்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், புகார் அளித்த பெண்ணுக்கு மட்டும் டிசம்பர் 4-ம் தேதியன்று பிணை வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, சுவாமி சின்மயானந்த் இன்னமும் சிறையில் இருக்கிறார்.

தெலங்கானாவின்  மருத்துவர் பாலியல் வன்புணர்வும் கொலையும்...

தெலங்கானா போலீஸார்
தெலங்கானா போலீஸார்

தெலங்கானாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது, நிர்பயாவின் பாலியல் வன்புணர்வு மரணம் ஏற்படுத்திய அளவுக்கு தேசத்தை உலுக்கியது. மருத்துவரின் இருசக்கர வாகனத்தை வேண்டுமென்றே பழுதாக்கிய நான்குபேரும், அவரது வாகனத்தைச் சரிசெய்ய உதவுவதுபோல நடித்து அவரை அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்து எரித்ததாக ஹைதராபாத் போலீஸ் விசாரணை குறிப்பிடுகிறது. நாடே இந்தச் சம்பவத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்தது. மாநிலங்களவையில் பேசிய ஜெயாபச்சன், குற்றவாளிகளைக் கொல்ல வேண்டும் என்று ஆக்ரோஷமாகக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் கைதுசெய்த காவல்துறையினர், மருத்துவர் எரிக்கப்பட்ட இடத்திலேயே என்கவுன்டர் செய்தனர். காவல்துறையின் நடவடிக்கை பல தரப்பின் வரவேற்பைப் பெற்ற அதே சமயம், 'குற்றங்களுக்கு என்கவுன்டர் தீர்வல்ல' என எதிர்ப்பையும் சந்தித்தது.

தெலங்கானாவுக்குப் பிறகு…

தெலங்கானா என்கவுன்டர்
தெலங்கானா என்கவுன்டர்

மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து மூன்று தினங்களில்... தெலங்கானாவில் மேலும் இரண்டு பெண்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டனர். இவர்களில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண், வேலைக்குச் சென்று திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார். மற்றொருவர், வாரங்கல் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண். தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இரவு வெளியே சென்றவ, நன்கு பழகிய நபர் ஒருவரால் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார்.

எரிக்கப்பட்ட உன்னாவ் பெண்...

ராஜஸ்தான் சிறுமி
ராஜஸ்தான் சிறுமி

தொடர் வன்புணர்வுக் குற்றங்களின் களமாகிவருகிறது உன்னாவ். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் ரேபரேலி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தனர். பிறகு, பிணையில் வெளியே வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், வழக்கு விசாரணை தொடர்பாக ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைத் தீயிட்டு எரித்தனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய அந்தப் பெண், இறந்துவிட்டார். பெண்ணை எரித்துக் கொலைசெய்த நான்கு பேரும் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர்.

வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட ராஜஸ்தான் சிறுமி... 

ராஜஸ்தான் மாநிலம் டாங்க் பகுதியில், பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். எப்போதும் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு கொண்டாட்டமாக பள்ளிக்குச் சென்ற தனது மகளைக் காணவில்லை என கடந்த டிசம்பர் 1 அன்று, சிறுமியின் தந்தை டாங்க் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். காவல்துறை நடத்திய விசாரணையில், அந்தக் குழந்தையின் வீட்டருகே இருந்த 38 வயது நபர், மிட்டாய் வாங்கித் தருவதாக குழந்தையை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொன்றதாகத் தெரியவந்தது. "கழுத்து நெரிபட்ட நிலையில் சீருடையில் ரத்தம் சொட்ட இறந்துகிடந்த குழந்தையைப் பார்த்ததிலிருந்து, இரண்டு நாள்கள் தூக்கம் வரவில்லை" என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார், டாங்க் பகுதி காவல் ஆய்வாளர்.

காஞ்சிபுரம் பெண் பாலியல் வன்புணர்வுக் கொலை...

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டிச்சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண், கடந்த நவம்பர் 21 அன்று காணாமல் போனதாக, காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, போலீஸார் ரோஜாவைத் தேடிவந்த நிலையில், ஆண்டிச்சிறுவள்ளூரிலிருந்து 2 கி.மீ தொலைவுள்ள இடத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுக் கிடந்தார். அவர் உடலில் தீயினால் சுட்ட காயங்கள் இருந்துள்ளன. அதேபகுதியைச் சேர்ந்த ஜே.சி.பி வாகன ஓட்டுநர், அந்தப் பெண்ணைக் காதலித்துவந்ததாகவும், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்த நிலையில், காஞ்சிபுரம் பெண்ணை ஏமாற்றி அழைத்துச்சென்று தூக்கிட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் மரணம் சாதி ஆணவக் கொலை என்றும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தொடர் பாலியல் புகாரில், நித்யானந்தா

நித்யானந்தா
நித்யானந்தா

ஆசிரம வழிபாட்டுத் தலங்கள் வன்புணர்வுக் கூடாரங்களாகிவரும் காலம் இது. பிடதி நித்யானந்தா மீது பல வருடங்களாகப் பாலியல் குற்றப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை வலுவான பல புகார்கள் எழுந்தன. கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர்தான், 'ஏன் நித்யானந்தா ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன்' என்பதைத் தனது யூடியூபில் வீடியோவாகப் பதிவுசெய்தார். மேலும், நித்யானந்தா தன்னிடம் பாலியல்ரீதியாகப் பேசியது, ஆசிரமத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுவந்தார்.

இதற்கிடையே, நித்யானந்தாவின் உதவியாளராக இருந்த ஜனார்த்தனன், தனது இரண்டு பெண்களை நித்தி கடத்திச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸில் புகார் அளித்தார். மேலும், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களில் நித்யானந்தா ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்த மாநில போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமம் மூடி சீல் வைக்கப்பட்டது. ஒருபக்கம் ப்ளூ நோட்டீஸ் கொடுத்து இந்தியக் காவல்துறை நித்யானந்தாவைத் தேடிவரும் நிலையில், தற்போது நாட்டை விட்டு வெளியேறி, கைலாசா என்கிற தனிநாட்டை உருவாக்கிவருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டுவருகிறது. தற்போது வரை நித்யானந்தாவின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

தேங்கிநிற்கும் பாலியல் வன்குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கச்சொல்லி, மாநில வாரியாக விரைவு நீதிமன்றங்களை அமைக்க, கடந்த ஜூலை 2019ல் மத்திய அமைச்சரவை உத்தரவிட்டிருந்தது. அதற்காக, நிர்பயா நிதியிலிருந்து ரூ.700 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சரவை அறிவித்தது. வழக்குகளுக்குத் தீர்வு காணும் அதே சமயம், குற்றங்களும் தடுத்து நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு நிரந்தரத் தீர்வு என்கவுன்டர்களில் இல்லை. நாட்டில் இருக்க தகுதியுடைய நபர்கள் யார் என்று மதப்பிரிவினைகளின் அடிப்படையில் சட்டம் கொண்டுவர முனைப்பு காட்டும் மத்திய அமைச்சரவை, பெண்கள் வாழத் தகுதியுடைய நாடாக இந்தியாவை மாற்ற முனைப்பு காட்டவேண்டியது காலத்தின் தேவையாகிறது.

தொடரும் பாலியல் வன்முறைகள்! தீர்வு என்ன? #Shocking
அடுத்த கட்டுரைக்கு