Published:Updated:

புதுக்கோட்டை: ரோந்துக் கப்பலால் படகை மோதி உடைத்த இலங்கை கடற்படை... நடுக்கடலில் மூழ்கி மீனவர் பலி!

``கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினர் அத்துமீறல் இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அத்துமீறி, மீனவர்களின் படகுகளை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கின்றனர்.’’ - மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்.18-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைத் தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மோதி உடைத்துள்ளனர். இதில், முற்றிலும் சேதமடைந்த அந்த விசைப்படகு கடலில் மூழ்கியிருக்கிறது. படகில் பயணித்த சுகந்தன் (23), சேவியர் (32), ராஜ்கிரண் (30) ஆகிய மூன்று மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர்.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

அதில், ராஜ்கிரண் மட்டும் கடலில் மூழ்கி மாயமானார். தத்தளித்துக்கொண்டிருந்த மற்ற இரண்டு மீனவர்களையும் மீட்ட இலங்கை கடற்படையினர், அவர்களைக் கைதுசெய்து, இலங்கையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மாயமான மீனவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதையடுத்து, உடனடியாக மாயமான மீனவரை மீட்டுத்தரக் கோரியும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அந்தப் பகுதி மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். தற்காலிகமாக மீனவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையேதான் 19-ம் தேதி மாலை கடலுக்குள் மூழ்கிய மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் சடலமாக மீட்டு, உடலை காங்கேசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றனர்.

இது குறித்து மீனவ சங்கத்தினர் கூறும்போது,
"மீன்பிடிக்கச் சென்ற அந்த இளைஞர்களை நம்பித்தான் அவர்களின் குடும்பங்களே இருக்கின்றன. ஆனால், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினர் அத்துமீறல் இல்லாமல் இருந்தது.

மீனவர்கள்
மீனவர்கள்

தற்போது அத்துமீறி இந்த மீனவர்களின் படகுகளை உடைத்துச் சேதப்படுத்தியிருக்கின்றனர். இந்த விஷயத்தில் மாநில, மத்திய அரசுகள் உடனடி தீர்வுகாண வேண்டும். இலங்கை கடற்படையினர் வசம் சிக்கிய மீனவர்களை மீட்டு அவர்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். அதோடு, இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

கடந்த ஜனவரி மாதம், 18-ம் தேதி இதே கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியதில் நான்கு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில்தான், தற்போது மேலும் ஒரு மீனவர் இதே போன்று உயிரிழந்திருப்பதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு