Published:Updated:

மன்னார் பகுதியில் சிக்கிய மீனவர்கள்... நடுக்கடலில் தங்கவேட்டையாடிய இலங்கைக் கடற்படை!

கடத்தல் தங்கக் கட்டிகள்
கடத்தல் தங்கக் கட்டிகள்

அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்றுகொண்டிருந்த படகு ஒன்றைக் கண்டனர். இந்தியாவைச் சேர்ந்த அந்தப் படகினை மடக்கிப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் படகில் 4 மீனவர்கள் இருந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வர முயன்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 4.2 கிலோ தங்கம் கைபற்றப்பட்டது.

தங்கம் கடத்திய மீனவர்கள்
தங்கம் கடத்திய மீனவர்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே இருப்பதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் விற்பனை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

விற்பனை குறைவதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தங்கத்தின் அளவும் குறைந்துகொண்டே வருகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமும், இலங்கையிலிருந்து மீனவர்கள் மூலமும் இந்தியாவிற்குத் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளன.

கடற்படையினரிடம் சிக்கிய படகு
கடற்படையினரிடம் சிக்கிய படகு

இந்நிலையில் புதன்கிழமை இரவு மன்னார் சிலாவத்துறை கடற்பகுதியை அடுத்துள்ள குதிரைமலைக் கடற்பகுதியில் இலங்கைக் கடற்படையினர் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நின்று கொண்டிருந்த படகு ஒன்றைக் கண்டனர். இந்தியாவைச் சேர்ந்த அந்தப் படகினை இலங்கைக் கடற்படையினர் மடக்கிப் பிடித்தபோது படகில் 4 மீனவர்கள் இருந்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ள வேதாளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தப் படகினை இயக்கியது அப்பகுதியைச் சேர்ந்த எட்வின் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது படகினைச் சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். 4.2 கிலோ எடை கொண்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட தங்கக் கட்டிகள்
பிடிபட்ட தங்கக் கட்டிகள்

இதையடுத்து மீனவர்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை மன்னார் சின்னப்பாடு சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த வருடத்தில் மட்டும் இலங்கைக் கடற்பரப்பிலிருந்து சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட 11 கிலோ, 695 கிராம் மதிப்புள்ள தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு