இலங்கையில் கடந்த ஒரு மாத்துக்கும் மேலாக கடுமையான பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்நாட்டு மக்கள் அகதிகளாக தமிழகத்துக்குப் படையெடுத்துவரும் சூழல் உருவாகியுள்ளது.
அதன்படி தனுஷ்கோடி அருகே மூன்றாம் தீட்டை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக ஆறு நபர்கள் நிற்பதாக க்யூ பிராஞ்ச் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீஸார், இந்திய கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுக்க, கடலோர காவல் படையினர் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்திலிருந்து அகதிகளாக தமிழகத்துக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கஜேந்திரன், மேரி கிளாரி, நிஷாஜ் தியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட ஆறு நபர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்துக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்திய பின்னர் மரைன் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதையடுத்து ஆறு பேரில் சிறுவர்களைத் தவிர்த்து மூன்று பேர் மீது சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்தது, உரிய ஆவணங்களின்றி வந்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், எங்களைப் போன்று இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகத்துக்கு வர ஆயிரக்கணக்கானோர் தயாராகவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இலங்கையிலிருந்து அகதிகளாக அதிகமான அளவில் மக்கள் தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல் படை, க்யூ பிரிவு, மரைன் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அப்போது தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் இலங்கையிலிருந்து அகதிகள் வந்துள்ளதாக மரைன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் போலீஸார் ஒரு ஃபைபர் படகில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த செய்யது முகமது அஸிம், சிவசங்கரி, மிஸ்கின் ஷம்ளா, மிஸ்கின் முதின், மிஸ்கின் முகமது, அஸ்சின் பூமிகா, சிவரத்தினம், சிந்து, ரிசாலினி, சிந்துஜா என ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேரைப் பிடித்து தனுஷ்கோடி மரைன் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரித்துவருகின்றனர்.
மேலும் அகதிகளாக வந்தவர்கள் கூறும்போது, `தற்போது இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தைவைத்து பொருள்கள் வாங்கிச் சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தாலும் தேவையான பொருள்கள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
கடுமையான விலைவாசி உயர்வும், உணவுப்பொருள்கள் தட்டுப்பாடும் இலங்கையின் சாமானிய மக்களை பட்டினிச்சாவை நோக்கித் தள்ளியுள்ளது.