விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்தப் பகுதியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சுந்தர்ராஜ்(63) என்பவர் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்ததிலிருந்து அழுது கொண்டிருந்த காரணத்தினால், அவரிடம் பெற்றோர் என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது தன்னை முதியவர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார் சிறுமி.

இதனைத்தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவர் சுந்தர்ராஜ் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வழக்கை விசாரித்துவந்த நீதிபதி தனசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சுந்தர்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
