Published:Updated:

வழிதவறிய மற்றொரு காவலர்; அரை மணி நேர தாமதம் - ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ; நடந்தது என்ன?

குற்றவாளிகளை எப்படியும் சேஸ் செய்து பிடித்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குற்றவாளிகளுக்கு இணையாக வேகமாக ஓட்டி வந்திருக்கிறார்.

திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் ஆடு திருடர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 19 வயது இளைஞர், இளம் சிறார்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இதில், திடுக்கிடும் பல விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன.

எஸ்.எஸ்.ஐ கொலை குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், கீதா, ஆறுமுகம், ராஜேந்திரன், ஜெரினாபேகம், துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியன், அருள்மொழி அரசு, காவல் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு துப்பு துலக்கினர். இந்த வழக்கில் தற்போது மூன்று நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

பூமிநாதன்
பூமிநாதன்

அவர்களில் ஒருவர் மணிகண்டன் (19). மற்ற இருவரும் இளம் சிறார்கள். அவர்களைக் கைதுசெய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சில பொருள்கள், கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டன. தற்போது மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், சிசிடிவி கேமரா காட்சிகள், காவலரின் தொலைபேசி, அந்தப் பகுதியில் கிடைத்த ரகசியத் தகவல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். இந்தக் கொலையை அரசியல்ரீதியாகப் பார்க்காமல், அறிவியல்ரீதியாகப் பார்க்க வேண்டும். மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பின்புறத்திலிருந்துதான் எஸ்.எஸ்.ஐ தாக்கப்பட்டிருக்கிறார். முன்புறமாக எஸ்.எஸ்.ஐ அரிவாளால் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை.

திருச்சி: `ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க முயன்ற எஸ்.ஐ; ஆத்திரத்தில் கொள்ளையர்கள் வெறிச்செயல்!'

குற்றவாளிகளைப் பிடித்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன், சக எஸ்.எஸ்.ஐ சேகர், கூடவே வந்த வழி தவறிச் சென்ற காவலர் ஆகியோரைக் கூப்பிட்டபோது , பின்புறமாகக் குற்றவாளிகள் இவரைத் தாக்கியுள்ளனர். மணிகண்டனுடன் இந்த இளம் சிறார்களும் சேர்த்துத்தான் எஸ்.எஸ்.ஐ-யைத் தாக்கியிருக்கின்றனர். குற்றவாளிகளை எஸ்.எஸ்.ஐ பூமிநாதனும், மற்றொரு காவலர் ஒருவரும் தனித்தனியாக டூ வீலரில் விரட்டி வந்திருக்கின்றனர். குற்றவாளிகளை எப்படியும் சேஸ் செய்து பிடித்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குற்றவாளிகளுக்கு இணையாக வேகமாக ஓட்டி வந்திருக்கிறார். அதேநேரத்தில் மற்றொரு காவலர் மெதுவாகத்தான் வந்திருக்கிறார். குற்றவாளிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு சக எஸ்.எஸ்.ஐ சேகருக்கும் தகவல் கொடுக்க அவரும் கிளம்பி வந்திருக்கிறார்.

வழிதவறிய மற்றொரு காவலர்;  அரை மணி நேர தாமதம் - ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ; நடந்தது என்ன?

இதற்கிடையேதான் அடுத்தடுத்து போலீஸாரை போனில் தொடர்புகொண்டு வரவைப்பதால், எங்கு நம்மைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பின்புறத்திலிருந்து எஸ்.எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டியிருக்கின்றனர்.

நள்ளிரவு நேரம். அதோடு, இவர்கள் இருவருக்கும் கீரனூர் ஏரியா அவ்வளவு பரிச்சயமில்லை. ஏரியா தெரியாததால், வழி தெரியாமல் மாறிச் செல்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக, அந்த இடைப்பட்ட நேரத்தில், எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடு தஞ்சாவூர் தொகூர் காவல் நிலைய எல்லையில் திருடப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக தஞ்சாவூர் மற்றும் தொகூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டன் போதையில் இருந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இரவு ரோந்து இரண்டு பேராகத்தான் போக வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம். தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். காவலர்களது பாதுகாப்புக்காக ஆயுதங்களுடன் ரோந்து செல்வது குறித்துப் பரிசீலிக்கப்படும். இந்த வழக்கு, விசாரணையில் இருக்கிறது.

வழிதவறிய மற்றொரு காவலர்;  அரை மணி நேர தாமதம் - ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ; நடந்தது என்ன?

இந்தக் கொலை வழக்கு குறித்து ஆதாரங்களைத் திரட்டித்தான் குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறோம். நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் இணைக்கப்படும். ஆடு திருட்டு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுவருகின்றன. நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிப்பதைப் பொறுத்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது" என்றார்

திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு