Published:Updated:

வில்சன் கொலையின் பின்னணி... தகர்க்கப்பட்டதா தீவிரவாதிகளின் சதித்திட்டம்?

களியக்காவிளை செக்போஸ்ட் அருகே கடை வைத்துள்ள ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்திருக் கிறார்.

பிரீமியம் ஸ்டோரி

வழக்கமாக காஷ்மீரில் கேட்கும் துப்பாக்கிச் சத்தம், கன்னியாகுமரியில் கேட்டதில் தமிழகமே அதிர்ந்துபோனது. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் தீவிரவாதிகள்மீதான வேட்டையும் தீவிரமாகியிருக்கிறது. தமிழகத்தில் இந்தச் சம்பவம் அரசியல் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வில்சனின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின்மீது விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. ‘எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், இரங்கல்கூட தெரிவிக்க வில்லை’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்தார். ‘வில்சனின் மரணத்துக்கு மணல் கொள்ளையர்கள் காரணம் என்று சொன்ன ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிடம் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அப்துல் சமீம் - தவுபீக்
அப்துல் சமீம் - தவுபீக்

அதுவரை இந்தச் சம்பவம்குறித்து வாய் திறக்காமல் இருந்த ஸ்டாலின், அதற்குப் பின்பே அறிக்கை வெளியிட்டு, ‘தி.மு.க சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவியை வில்சன் குடும்பத்துக்கு வழங்குவதாகவும்’ அறிவித்தார். இதற்கிடையில், இந்தக் கொலையில் அப்துல் சமீம் மற்றும் தவுபீக் ஆகிய இருவருக்குத் தொடர்புள்ளதாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட கன்னியாகுமரி போலீஸார், ‘அவர்கள் இருவரும் தீவிரவாதிகள்’ என்றும் சொன்னார்கள். இவர்கள் இருவரும் ஜனவரி 8-ம் தேதி இரவு 9.07 மணியளவில் இந்தப் பகுதியில் நின்ற வீடியோ காட்சிகளை வெளியிட்ட போலீஸார், ‘அன்றிரவு 9.39 மணியளவில் வில்சன் கொல்லப்பட்டிருப் பதால், இவர்கள்தான் குற்றவாளிகள்’ என்று தெரிவித்திருக்கின்றனர். அந்த வீடியோவில் இரண்டு பேர் நடமாடுவது, ரோட்டிலிருந்து ஓடிவந்து பள்ளிவாசலுக்குள் நுழைவது போன்ற காட்சிகள் இருக்கின்றன.

வில்சனைக் கொன்றவர்கள் இருவரும் வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்ததாகச் சிலரும், கறுப்பு நிறத்தில் மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த காரில் வந்ததாகச் சிலரும் கூறியிருக் கின்றனர். களியக்காவிளை செக்போஸ்ட் அருகே கடை வைத்துள்ள ஒருவர், துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்திருக் கிறார். அவரிடமும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

வில்சன் இறுதி ஊர்வலத்தில்...
வில்சன் இறுதி ஊர்வலத்தில்...

‘‘இந்தச் சம்பவத்தில் அப்துல் சமீம்தான் முக்கியக் குற்றவாளி’’ என்று சொல்லும் போலீஸார், மேலும் பல தகவல்களையும் அடுக்கினர்...

‘‘கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீமும், தவுபீக் என்பவரும் சேர்ந்துதான் வில்சனைக் கொன்றிருப்பதாகத் தெரிகிறது. சமீம், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலை வராக இருந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாடி சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர். மாநில பி.ஜே.பி துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தியை, நாகர்கோவிலில் வெட்டிய வழக்கிலும் இவருக்கும் தொடர்புண்டு. நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்த சையது அலி நவாஸும் இவரும் சேர்ந்துதான் சுரேஷ் கொலை யில் ஈடுபட்டுள்ளனர். சையது அலி நவாஸ், காஜாமொய்தீன், அப்துல் சமத் ஆகியோர் டெல்லியில் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சையது அலி நவாசின் உறவினர்தான் தவுபீக். சையது அலிதான் தவுபீக்கை அப்துல் சமீமுக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார். நெல்லை ரகுமான்பேட்டையைச் சேர்ந்த அல்கபூர் என்பவரும் இவர்கள் இருக்கும் தீவிரவாதக் கும்பலில் இணைந்திருக்கிறார். அல்கபூர்தான் வில்சன் கொலைக்கு முன்பு உளவு பார்த்திருக்கிறார். அவரும் இப்போது தலைமறைவாயிருக்கிறார்’’ என்றார்கள்.

வில்சன் கொலையான இடத்தில் திரிபாதி ஆய்வு
வில்சன் கொலையான இடத்தில் திரிபாதி ஆய்வு

அப்துல் சமீம் இன்னும் போலீஸில் சிக்கவில்லை என்றும், கைது செய்யப்பட்டு வேறு எங்கோ கொண்டுசென்றுவிட்டனர் என்றும் இரு வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. சமீம் எப்போதும் ஓரிடத்தில் தங்குவதில்லை என்று சொல்லும் உளவுத்துறையினர், ‘‘அவர் பயணித்துக் கொண்டேயிருப்பார். ஓய்வு எடுக்க வேண்டுமென்றால், பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் போய்விடுவார். கடல்மார்க்கமாகத்தான் பயணிப்பார். ஐ.எஸ் போன்ற அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த அப்துல் சமீம், உள்நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக, ‘ஹல்ஹந்த்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலங்கையில் சர்ச்சில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போன்று தமிழகத்தில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று இந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே பங்களாதேஷில் இருந்து கடல் வழியாக மேற்கு வங்கத்தின் சிட்டாகாங் துறை முகத்துக்கு சமீம் வந்துள்ளார். அங்கிருந்து முர்சிதாபாத் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து, கேரளாவுக்குச் சென்றுள்ளார். கண்ணூர் பகுதியில் தீவிரவாதிகள் பலரும் இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுபற்றி தமிழக க்யூ பிரிவு மோப்பம் பிடித்துவிட்டது.

வில்சன்
வில்சன்

அதனால், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்த தமிழக உளவுத்துறையினர், நான்கு தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டனர். தீவிரவாதிகளைத் தேடும் படலம் முடுக்கிவிடப்பட்டது. பெங்களூருவில் சிலர் கைது செய்யப்பட்டனர். மொத்தத் திட்டமும் சொதப்பிவிடும் என்று தெரிந்ததும், தங்கள் திட்டத்தைத் தகர்த்த காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில்தான் வில்சனைக் கொன்றுள்ளனர்.

கொடூரமாக அவரைக் கொல்ல நினைத்த வர்கள், சத்தம் வரக்கூடாது என்று முதலில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, ரோட்டுக்கு இழுத்துவந்து முதுகு, வலது மற்றும் இடது கை விரல்கள் மற்றும் கால் பகுதிகளை வெட்டி யுள்ளனர். மக்கள் கூடியதால் துப்பாக்கியால் நெஞ்சு, தொடைப்பகுதிகளில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். கழுத்து, நெஞ்சுப் பகுதிகளில் தோட்டா துளைத்து வெளியேறிவிட்டது. தொடைப்பகுதியில் மட்டும் குண்டு இருந்தது, பிரேதப்பரிசோதனையில் தெரிந்தது. மிகப்பெரிய சதித்திட்டத்தை தமிழக காவல்துறை முறியடித்திருக்கிறது’’ என்றனர்.

வில்சனின் உடலில் பாய்ந்த குண்டுகள் பெங்களுருவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ரகத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதி களின் நெட்வொர்க் தென்னிந்தியா முழுவதுமே பரவலாகப் பரவியுள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில், குறிப்பாக, கேரளாவில் நன்கு ஆழமாகக் கால் பதித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரித்திருக்கிறது.

வில்சன் கொலையில் இவர்கள்தான் குற்றவாளி என்று அறிவித்த பின்னும், இந்த வழக்கு சம்பந்த மாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்களில் ஒன்பது பேர்மீது பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சொல்கின்றனர் போலீஸார்.

கடந்த 10-ம் தேதியன்று தெற்கு மண்டல ஐ.ஜி-யான சண்முக ராஜேஷ்வரன் பேட்டியளித்த போது, ‘‘வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார். ஆனால், அப்போதே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தென்மாநிலங்களில் சிக்கியுள்ள தீவிரவாதி களைக் கைது செய்ததாகக் கணக்கு காண்பிக் காமலே விசாரணை நடப்பதாகவும், என்.ஐ.ஏ போன்ற அமைப்பிடம் இவர்கள் ஒப்படைக்கப் படவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறும் போலீஸ் வட்டாரங்கள், ‘இவர்களைக் கைது செய்ததன்மூலம் மிகப்பெரிய சதித்திட்டத்தை தமிழக காவல்துறை முறியடித்திருக்கிறது’ என்று பெருமையோடு கூறுகின்றன.

‘‘அப்பா எப்போ வருவார்?’’

கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ-யான வில்சனுக்கு இரு மகள்கள். மூத்த மகளுக்குத் திருமணமாகி குழந்தை இருக்கிறது. இரண்டாவது மகள் வினிதா சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். அதனால், அவர்மீது வில்சனுக்கு அதீத பாசம். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த வில்சன், வினிதாவின் சிகிச்சைக்காகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றல் கேட்டு வாங்கிவந்துள்ளார். குழித்துறை மனநல காப்பகத்தில் மகளைச் சேர்த்து சிகிச்சை அளித்துவந்துள்ளார். டூட்டி நேரம் தவிர, வினிதாவிடம்தான் வில்சன் அதிகமாக இருப்பார். அவரே உணவும் ஊட்டிவிடுவார். வில்சனின் இறுதிச்சடங்கில் தமிழக

டி.ஜி.பி-யான திரிபாதி கலந்துகொண்டார். அப்போது அழுது அரற்றிய வினிதா, ‘எங்க அப்பா எப்போ வருவார்?’ என்று டி.ஜி.பி-யிடம் கேட்டது, அங்கிருந்த அனைவரையும் கணநொடியில் கலங்கிக் கண்ணீர் விடவைத்தது.

கலக்கத்தில் கடவுளின் தேசம்!

கேரளாவில் இருந்து நிறைய பேர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளதாக மத்திய உளவுத் துறையினர் தகவல் கூறுகின்றனர். கேரளாவில் 10 லட்சம் நபர்களில் ஒருவர் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளதாகப் புள்ளிவிவரம் சொல்லும் இவர்கள், ‘‘அண்மையில், 98 குடும்பங்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ளன. அங்குள்ள நங்கார்கார் மாகாணத்தில் இவர்கள் இருக்கின்றனர்’’ என்று பகீர் தகவலைக் கூறி பதறவைக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் கேரளாவில் இருந்து சென்றவர்கள் அடிக்கடி கொல்லப் படுவதையும் இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். கேரள இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடச் செய்வதும், ஐ.எஸ் இயக்கத்தின் கொள்கைகளை ஆன்லைனில் பரப்புவதும் கேரளத்தில் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கும் உளவுத்துறையினர், ‘‘கேரள இஸ்லாமிய மக்கள், தங்கள் வீட்டு இளைஞர்களை நல்வழியில் பாதுகாக்க வேண்டும்’’ என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர். உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையும் வேண்டுகோளும் கேரள மக்களைக் கலங்க வைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு