Published:Updated:

மற்றொரு கொலை வழக்கில் தொடர்பு? - காயல்பட்டினத்தில் தௌஃபீக்கிடம் 2 மணிநேரம் விசாரணை

தௌஃபீக்கிடம் போலீஸார் விசாரணை
தௌஃபீக்கிடம் போலீஸார் விசாரணை

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட கொலையாளி தௌஃபீக்கை தூத்துக்குடிக்கு அழைத்துவந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சிறப்புச் சோதனைச் சாவடியில், கடந்த 8-ம் தேதி இரவு, பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை மர்மக் கும்பல் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நாகர்கோவில் இளங்கடைப் பகுதியைச் சேர்ந்த தௌஃபீக், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் வைத்து கடந்த 14-ம் தேதி கைதுசெய்தனர்.

தௌஃபீக்
தௌஃபீக்

கடந்த 21-ம் தேதி, நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவர்களைப் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், தௌஃபீக், அப்துல்சமீம் ஆகிய இருவரிடமும் விசாரணை அதிகாரியான மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், இவர்களுக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின்படி, கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை கேரள மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகிலும், கத்தியை திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகிலுமிருந்து மீட்டுள்ளனர்.

காயல்பட்டினம்
காயல்பட்டினம்

சென்னை அம்பத்தூரில் கடந்த 2014-ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பலை போலீஸார் டெல்லியில் கைதுசெய்தனர்.

`எஸ்.எஸ்.ஐ கொலையாளிகளின் பயங்கரவாத தொடர்பு!' - மருத்துவச் சோதனைக்குப் பிறகு தொடரும் விசாரணை

இதில், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த செய்யதுஅலி நவாஸ் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். இவரும், உதவி ஆய்வாளர் வில்சனின் கொலை வழக்கில் கைதான தௌஃபீக்கும் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் போலீஸார் தேடிவந்தனர்.

விசாரணை
விசாரணை

அப்போது, செய்யதுஅலி நவாஸ், தௌஃபீக் மற்றும் 7 பேர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சீதக்காதி நகரில் வசிக்கும் நாவாஸின் இரண்டாவது மனைவி மெய்தீன் பாத்திமா வீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தௌபீக்கை தனி வேனில் காயல்பட்டினத்திற்கு நேற்று (26.01.20) மாலை தனிப்படை போலீஸார் அழைத்துவந்தனர்.

சீதக்காதி நகரில் வசித்துவரும் மெய்தீன் பாத்திமா வீட்டுக்கு , தௌஃபீக்கை அழைத்துச்சென்ற டிஎஸ்பி கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார், அவரிடமும் பாத்திமாவிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது, அங்குள்ளவர்கள் விசாரணை அதிகாரிகளையும் தௌஃபீக்கையும் படம் பிடித்தனர்.

தௌஃபீக்கிடம் போலீஸார் விசாரணை
தௌஃபீக்கிடம் போலீஸார் விசாரணை

இதற்கு, போலீஸார் எதிர்ப்பு தெரிவித்து, கூடி நின்றவர்களை விரட்டியடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்திட தங்களுக்குப் போதிய காலஅவகாசம் தேவைப்படுவதால், போலீஸ் காவலை நீட்டிக்கக்கோரி, நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு