Published:Updated:

சாத்தான்குளம்: `2 மணிநேர விசாரணை!’ - பதற்றத்துடன் காணப்பட்ட அரசு மருத்துவர் வினிலா

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தாமான முன்வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இவ்வழக்கினை விசாரணை எடுத்துக் கொண்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுரைக் கிளையின் அனுமதியுடன் இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழகஅரசு. சி.பி.ஐ இவ்வழக்கை விசாரணைக்காகக் கையில் எடுக்கும் வரையில், விசாரணையை சி.பி.சி.ஐ.டி மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டது.

டி.எஸ்.பி குமார் விசாரணை
டி.எஸ்.பி குமார் விசாரணை

இந்நிலையில், விசாரணையைத் தொடங்கிய முதல்நாளிலேயே உதவி ஆய்வாளர் ரகு கணேஷை கைது செய்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவ்வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு ஏ.டி.எஸ்.பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் குழுவினரால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தாமாக வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம்!

சி.பி.சி.ஐ.டியிடமிருந்து ஆவணங்களைப் பெற்ற சி.பி.ஐ போலீஸார், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீஸார் மீது கொலை வழக்காகப் பதிவு செய்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக மீடியாக்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.

டி.எஸ்.பி குமார்
டி.எஸ்.பி குமார்

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர், சிறைத்துறையின் ஏ.டி.ஜி.பி ஆகியோர் நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்புத்தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி-யும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் மற்றும் சி.சி.டி.வி பதிவுகளுடன் விரிவான அறிக்கையை 8 வாரத்திற்குள் தாக்கல் செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வினிலாவிடம் 2 மணி நேர விசாரணை!

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப்பிரிவு டி.எஸ்.பி குமார் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளார். சாத்தன்குளத்தில் பென்னிக்ஸின் தாயார் செல்வராணி, சகோதரிகள் பெர்சி, பியூலா, அபிஷா, உறவினர்கள், நண்பர்கள், பெண் தலைமைக் காவலர், பென்னிக்ஸ் செல்போன் கடையின் பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியிலுள்ள அரசினர் கூடுதல் சுற்றுலா மாளிகையில் விசாரணை தொடங்கப்பட்டது.

மருத்துவர் வினிலா
மருத்துவர் வினிலா

இதில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வினிலா, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், தனிப்பிரிவு ஏட்டு சந்தனக்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். இதில், அரசு மருத்துவர் வினிலாவிடம் மட்டும் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் நிலையத்திலிருந்து தந்தை, மகன் இருவரும் பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்களின் நிலை என்ன? உடலில் எந்தெந்தப் பகுதிகளில் காயங்கள் தென்பட்டன? காயங்களின் தன்மை எப்படி இருந்தது? தகுதிச்சான்று அளிக்க காலம் தாழ்த்தியது ஏன்?

சாத்தான்குளம்: `சி.பி.ஐ-யின் நள்ளிரவு விசாரணை!’ - என்ன காரணம்?

10 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும்!

யாருடைய வற்புறுத்தலால் சான்று அளித்தீர்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் டி.எஸ்.பி. பல கேள்விகளுக்கு விரிவாகவும், சில கேள்விகளுக்குப் பதற்றமாகவும் பயத்துடனும் பதில் அளித்தாராம் வினிலா. விசாரணை முடிந்து வெளியேறும்போதும் பதற்றத்துடனே காணப்பட்டார். இதுகுறித்து விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மருத்துவர் பாலசுப்பிரமணியன் & ஆய்வாளர் பெர்னாட் சேவியர்
மருத்துவர் பாலசுப்பிரமணியன் & ஆய்வாளர் பெர்னாட் சேவியர்

இந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு விசாரணை நிறைவுபெற்ற பிறகு மதுரை சிறைக்குச் சென்று குற்றவழக்கில் கைது செய்யபட்ட 10 போலீஸாரிடமும் விசாரணை நடத்த உள்ளேன். இதுதொடர்பான ஆவணங்கள், விசாரணை செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் ஆகியற்றுடன் விரிவான அறிக்கை விரைவில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு