Published:Updated:

அம்பேத்கர் சிலை உடைப்பின் பின்னணியில் சாதி மோதல்?! - பதற்றம் தணியாத வேதாரண்யம்

மு.இராகவன்
PrasannaVenkatesh AB

அம்பேத்கர் சிலை உடைப்பால் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி.

அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சாதி மோதலின் பின்னணியில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம், தலித் அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலை உடைப்பு சம்பவம் குறித்து வேதாரண்யம் பகுதி மக்களிடம் பேசினோம். `` தென் மாவட்டத்தைச் சேர்ந்த குமுளி ராஜ்குமார் என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வேதாரண்யம் வந்தார். அவரை, ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைக்குகளில் ஊர்வலமாக அழைத்து வந்தபோது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் கார் மீது பைக் ஒன்று மோதிவிட்டது.

jeep
jeep

இதனால் அந்த சமூகத்தின் அமைப்பைச் சேர்ந்த லெனின் தரப்புக்கும் ராஜ்குமார் தரப்புக்கும் தகராறு முற்றி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராஜ்குமார் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இருந்தே இருதரப்புக்கும் பகையாகிவிட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பழம் வாங்கச் சென்ற மாற்று சமூகத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரின் தந்தையிடம், இளைஞர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். அதில் தொடர்புடையவர்களைப் பழிவாங்க கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி, காரில் அரிவாளுடன் சென்றுள்ளார் பாண்டியராஜன். அப்போது காவல் நிலையம் எதிரே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை வெட்டிவிட்டு காவல் நிலையத்துக்குள் ஓடிவிட்டார் பாண்டியராஜன். அதற்குள் தகவலறிந்து திரண்ட பட்டியலின அமைப்பினர், பாண்டியராஜனின் காரைத் தீவைத்து எரித்ததோடு, காவல் நிலையம் மீதும் கல்வீசித் தாக்கினர். இந்த நிலையில், சில சமூக அமைப்பினரும் அங்கு வந்து சேர இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில், மூவர் காயமடைந்தனர். இந்தச் சூழலில்தான் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது" என விவரித்தவர்கள்,

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு
prasanna venkatesh

`` அம்பேத்கர் சிலை உடைப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, பதற்றம் அதிகரித்து ஆங்காங்கே சாலை மறியலும் நடைபெற ஆரம்பித்தன. இந்த நிலையில், சேலம் ஆத்தூரிலிருந்து இரவோடு இரவாக வரவழைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுநாள் அதே இடத்தில் வைத்துவிட்டனர். இதனால் ஓரளவுக்குப் பதற்றம் தணிந்தது" என்கின்றனர்.

இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனிடம் பேசினோம். "

vedaranyam police station
vedaranyam police station
prasanna venkatesh

புதிய சிலை வைத்ததால் உடைத்த அவமானம் துடைக்கப்படாது. எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் சிலை உடைப்புக்குக் கண்டனம் தெரிவித்தும்கூட முதல்வரோ, துணை முதல்வரோ இதுவரை ஒருவார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இது வேதனையளிக்கிறது" என்றார்.

சிலை உடைப்புக்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்படுகிறவர்கள் தரப்பில் பேசியபோது, "சம்பவத்தில் தொடர்பில்லாத எங்கள் தலைவர் சரவணனைக் கைது செய்துள்ளனர். அமைதியாக இருந்த பகுதியை ரத்தக் களறியாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எங்களில் சிலரைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் கூலிப்படையை வரவழைத்துள்ளார்கள். ஆனால், காவல்துறை யாரையோ திருப்திப்படுத்த எங்களை வஞ்சிக்கிறது" என்கிறனர்.

jeep
jeep

நாகை எஸ்.பி ராஜசேகரனிடம் பேசினோம். " இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, இதுவரை 32 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும் சிலரைத் தேடி வருகிறோம். சிலை உடைக்கப்பட்ட இடத்தில் மாற்று சிலை வைக்கப்பட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது வேதாரண்யம் அமைதிக்குத் திரும்பிவிட்டது" என்றதோடு முடித்துக் கொண்டார்.