Published:Updated:

`116 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலைகள்!’ - தஞ்சையில் மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புடைய ஐம்பொன்னால் செய்யப்பட்ட இரண்டு சிவன் சிலைகளை 69 ஆண்டுகளுக்குப் பிறகு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர்.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியாரால் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வழங்கப்பட்ட பல கோடி மதிப்புடைய இரண்டு ஐம்பொன் சிவன் சிலைகள், 69 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் கலைக்கூடத்திலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

சிலைகள்
சிலைகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழன், 35 ஆண்டுகள் மன்னராக ஆட்சி புரிந்தார். தனது 20-வது ஆண்டு ஆட்சிக் காலத்தில், பெரிய கோயிலைக் கட்டி முடித்தார். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் பெரியகோயில் உலகப் புகழ் பெற்றுத் திகழ்கிறது.

ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியார், 29-வது ஆண்டு ஆட்சியின்போது, பெரிய கோயிலுக்கு ஐம்பொன்னால் ஆன அழகிய வேலைப்பாடுகள் கொண்ட வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய இரண்டு சிவன் சிலைகளைச் செய்து வழங்கினார். இந்நிலையில், பெரியகோயிலில் இருந்த இந்த இரண்டு சிலைகளும் காணாமல் போய்விட்டன. அந்தச் சிலைகள், தற்போது தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தின் அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

மீட்கப்பட்ட சிலை
மீட்கப்பட்ட சிலை

இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஏஜி பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று அருங்காட்சியகத்திற்கு வந்து ஆய்வுசெய்தனர். இதனால் அந்த வளாகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. சுமார் மூன்று மணி நேரம் கலைக்கூடத்தில் நடைபெற்ற ஆய்வுக்குப் பின், அங்கு பணியில் இருந்த காப்பாட்சியர் சிவக்குமாரிடம், இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சொந்தமான தெய்வத் திருமேனிகள். இவை, பூஜைகள் செய்யப்பட்டு வணங்கக்கூடியவை. எனவே, இவற்றை அருங்காட்சியகத்தில் வைக்கக்கூடாது எனவும், இந்தச் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2.3.2018 -ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இதையடுத்து சிவக்குமார், இரண்டு சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எடுத்து செல்ல அனுமதித்தார். பின்னர், போலீஸார் இரண்டு சிலைகளையும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று, வரும் 10-ம் தேதி, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

மீட்கப்பட்ட சிலை
மீட்கப்பட்ட சிலை

இதுகுறித்து பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ராஜராஜன் சோழனின் ஆட்சிக்காலத்தில், தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு 66 தெய்வத் திருமேனிகள் செய்யப்பட்டு, அவற்றுடன் ஏராளமான ஆபரணங்களும் சேர்த்து கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோயிலில் உள்ள கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் இருந்த பல ஐம்பான் சிலைகள், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டன. சிலைகள் காணாமல் போனது குறித்து, கடந்த 2018 -ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஏற்கெனவே ராஜராஜசோழனின் பட்டத்து அரசியான லோகமாதேவி, ராஜராஜசோழனின் ஐம்பொன்சிலைகள், குஜராத் அருங்காட்சியத்திலிருந்து 27.5.2018 -ம் ஆண்டு மீ்ட்கப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

இதன் தொடர் நடவடிக்கையாக, தற்போது தஞ்சை அழகர் என்ற சிவன் சிலை 60 கிலோ எடையும், திரிபுராந்தகர் சிலை 56 கிலோ எடையும் கொண்டது. இவை பல கோடி மதிப்புடையன. இந்த இரு சிலைகளும் 69 ஆண்டுகளுக்கு முன் கலைக்கூடத்துக்குள் வந்துள்ளன. இதற்கு முன்பாக இந்த சிலைகள் தஞ்சாவூர் ராஜகோபலசுவாமி கோயிலிலும், அரண்மனை தேவஸ்தானத்திலும் சில காலங்கள் இருந்துள்ளன. இந்தச் சிலைகள் கோயிலில் இருந்து மாயமானது தொடர்பாகச் சில குற்ற வழக்குகள் உள்ளன. எனவே, இவற்றை மீட்டு நீதிமன்றம் வாயிலாக மீண்டும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒப்படைக்கப்படும்” என்றார்.