டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, இரு தரப்பினர் இடையே கல்வீச்சு தாக்குதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறை கலவர சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, சில காவல்துறையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கல்வீச்சில் காவல்துறை உட்படப் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை குறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உயர் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு வன்முறையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுதொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, ”தற்போது சூழல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த அனுமன் ஜெயந்தி கலவரம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் அணில் பைஜாலைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.