Published:Updated:

மர்மங்களின் கதை: முடி திருட்டு - ரூ. 80,000 கோடி... மலைக்கவைக்கும் முடி வர்த்தகம் | பகுதி 18

முடி ( Pixabay )

இந்திய கிராமங்கள் பலவற்றில் முடி சேகரிப்பாளர்கள் நாமறியாமல் இன்றும் முடிகளைச் சேகரிக்க சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மர்மங்களின் கதை: முடி திருட்டு - ரூ. 80,000 கோடி... மலைக்கவைக்கும் முடி வர்த்தகம் | பகுதி 18

இந்திய கிராமங்கள் பலவற்றில் முடி சேகரிப்பாளர்கள் நாமறியாமல் இன்றும் முடிகளைச் சேகரிக்க சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Published:Updated:
முடி ( Pixabay )

- ஆர்.எஸ்.ஜெ.

ஜூன் 3, 2020. ஊரடங்கு முடிந்த பிறகு கனடாவில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியிருந்த நேரம். கனடாவின் வேன்கூவர் நகரத்தில் இருந்த ஒரு முடி திருத்தும் நிலையத்தில் திருட்டு நடைபெற்றது. திருட்டுச் சம்பவத்தின் காணொலியை காவல்துறை வெளியிட்டது.

சூறையாடப்பட்ட கடை முடி திருத்தகம்!

காணொலியில் கதவை உடைத்துக்கொண்டு இருவர் நுழைகின்றனர். கடையைச் சூறையாடுகின்றனர். பிறகு திருட்டில் ஈடுபடுகின்றனர். அவர்கள் திருடியது ‘விக்’ எனப்படும் போலி முடிகளை. அவற்றில் சில விக்குகளின் விலை இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல். முடி திருத்த நிலையத்தின் மேலாளர் எலிஸ் மர்ஃபி அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. வேலைகள் பல பறிக்கப்பட்டு, ஊரடங்கு காலத்தில் முடங்கிக்கிடந்தவருக்கு மீண்டும் வேலைக்கு வரும் நாளில் இப்படியொரு சோதனை. திருட்டுபோன விக்குகள் யாவும் சிகிச்சையால் முடி இழந்திருக்கும் புற்றுநோய் பாதிப்பு நோயாளிகளுக்கென வடிவமைக்கப்பட்டவை.

கிடைத்த துப்புகளைக்கொண்டு காவல்துறை குற்றச்சம்பவத்தை விசாரித்துவருகிறது.

2023-ம் ஆண்டில் தலைமுடி வணிகத்தின் உலக வர்த்தகம் 80,000 கோடி ரூபாய் வரை எட்டும் என அனுமானிக்கப்பட்டிருக்கிறது. பல வாடிக்கையாளர்கள் போலியாக ரசாயனம் கொண்டு தயாரிக்கப்படும் முடிகளை விரும்புவதில்லை. இயற்கையாக வளர்ந்த முடிகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

2016-ம் ஆண்டில் ஒரு நாள் பெங்களூரு நகரப் போலீஸுக்கு வித்தியாசமான ஒரு புகார் வந்தது. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் புகார் கொடுத்திருந்தார். அவரிடம் பதற்றம் அதிகமாகக் காணப்பட்டது. அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து 40 கிலோ தலைமுடி திருடப்பட்டிருக்கிறது என்பதே அவர் கொடுத்த புகார். பெங்களூரு போலீஸுக்கு முதலில் அந்தப் புகார் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. முடியை கிலோகணக்கில் சேமித்துவைப்பதே நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமெனில், அதைத் திருடிச் செல்வதை எந்தக் கணக்கில் சேர்க்க முடியும்? காவல்துறை அந்தப் புகாரை விசாரிக்கத் தொடங்கியதற்கு பிறகுதான் தலைமுடி சந்தையில் ஒளிந்திருந்த ரகசியங்கள் பல வெளிவந்தன.

மூன்றாம் உலக நாடுகள்

முடி
முடி
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகின் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பெருமளவுக்கான முடிகள் உலகின் முதல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாம் கண்டறிய முடியாத அளவுக்கான ஒரு பெரும் சந்தை முடிகளுக்கு மட்டுமே என உலகம் முழுக்க ரத்தமும் சதையுமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நீளமான, வளைவற்ற, நேரான முடிகள் வேண்டுமென்பதற்காக செலவழிக்கப்படும் பணம் மிக அதிகம். மேலும் அந்த போலி முடிகளும், அவற்றைப் பராமரிக்கவெனப் பயன்படுத்தப்படும் க்ரீம்களும் உடல்நலத்தை பாதிக்கவல்லவை. ஆனாலும் இவை எதுவும் முடிகளின் ஏற்றுமதியையோ, சந்தையையோ எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

உலக அளவில் சீனா, இந்தியா போன்ற நீள முடியைக் கலாசாரமாக கொண்டிருக்கும் நாடுகளே அதிகமாக தலைமுடி வணிகத்துக்கு இலக்காக்கப்படுகின்ரன. நீளமுடியை அழகு என நம்பி வளர்க்கும் பெண்கள் அதிகம்கொண்ட பிரதேசங்களே வணிகத்துக்கான களம். குறிப்பாக பணத்துக்காகத் தன் முடியைக்கூட இழக்குமளவுக்கு பெண்கள் ஏழைகளாக இருக்கும் நாடு என்றால் தலைமுடி வணிகத்துக்கு வரப்பிரசாதம்தான்.

2015-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவின் தலைமுடிச் சந்தையின் மதிப்பு 2,000 கோடி ரூபாய். அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளிலும் முடிகளுக்கான சந்தை இருந்தாலும் இந்தியாவின் முடி ஏற்றுமதி ஆண்டுதோறும் 2,000 டன் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அமெரிக்கா சொல்லும் அழகு இலக்கணப்படி இந்திய முடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அடர்த்தியாகவும், கருமையாகவும், லேசான வளைவுகளையும் கொண்டிருக்கும் இந்திய முடியின் தன்மைக்கு, போலி முடி நிறுவனங்களில் பெருமதிப்பு உண்டு. அவற்றிலும் பலவிதங்களில் மதிப்பைக் கொடுக்கிறார்கள். போலி முடிச் சந்தையில் ஒரு பெயர் சொல்கிறார்கள். வெர்ஜின் ஹேர்! `பரிசுத்தமான முடி’ என மொழிபெயர்க்கலாம். இத்தகைய முடிகளை அடைவதற்கென சில முறைகளையும் சொல்கிறார்கள்.

நகர்ப்புறப் பெண்கள் தங்களின் தலைமுடிகளுக்கு நிறம் பூசுகிறார்கள். நேர்ப்படுத்துகிறார்கள். இன்னும் பலவகை அழகுமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆதலால் அந்த முடிகளில் இயற்கை அழகு இருப்பதில்லையாம். கிராமங்களில் இருப்போரின் தலைமுடிகள் இத்தகைய போலி அழகுக்கு அதிகம் பயன்படாதவையாம். ஆதலால் தலைமுடிச் சந்தையில் இந்திய கிராமங்களில் கிடைக்கும் முடிகளுக்கென தனி மதிப்பு இருக்கிறது. இந்திய கிராமங்கள் பலவற்றில் முடி சேகரிப்பாளர்கள் நாமறியாமல் இன்றும் முடிகளைச் சேகரிக்க சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முடித் திருட்டு

வட இந்தியாவில் ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் முடித் திருட்டு நடக்கிறது. பல பெண்கள் சுயநினைவற்று இருக்கும்போது தங்களின் தலைமுடி வெட்டப்பட்டிருப்பதாகப் புகார் கொடுத்தனர். திடுமென ஒரு பெரிய வெளிச்சம் முகத்தில் அடிக்கப்பட்டு மயக்கமடைந்ததாகவும், ஒரு மணி நேரம் கழித்து தன் முடி வெட்டப்பட்டதாகவும் ஹரியானா மாநிலத்தின் சுனிதா தேவி புகார் அளித்திருக்கிறார். அவரைத் தாக்கியவர் ஒரு முதியவர் என்கிறார். பளீர் நிறங்களில் உடைகள் அணிந்திருந்ததாகச் சொல்கிறார்.

அவர் இருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் ஆஷா தேவி என்கிற பெண் வசித்துவருகிறார். அவருக்கும் தாக்குதல் நேர்ந்திருக்கிறது.

முடி
முடி
Pixabay

ஆஷாதேவியின் மாமனார் சம்பவத்தை விவரித்தபோது தலைமுடித் திருட்டு, உயிருக்கு அச்சுறுத்துல் கொடுக்கும் விஷயமாக மாறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

இரவு 10 மணிக்கு ஒரு வேலையாக மாமனார் வெளியே சென்றிருக்கிறார். அரை மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது ஆஷாதேவி மயக்கத்தில் இருந்திருக்கிறார். அவரின் தலைமுடி வெட்டப்பட்டிருக்கிறது.

மயக்கம் தெளிந்த பின் தன்னை ஒரு பெண் தாக்கியதாகவும் எல்லாமும் வெறும் 10 நொடிகளில் நடந்து முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார். என்ன நடந்தது எனத் தெரியாமலேயே இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தபோது சம்பவத்தின் விவரிப்புகள் நம்பமுடியாத தன்மைகளை அடைந்தன.

ஜோனவாசா என்கிற கிராமத்தில் வசிக்கும் ரீனா தேவி என்கிற பெண்ணும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பாதிப்பு நேர்ந்தவிதம் என்ன தெரியுமா? வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடுமென ஓர் உருவம் தெரிந்திருக்கிறது. அந்த உருவம் ஒரு மிகப்பெரிய பூனையைப்போல் இருந்ததாகச் சொல்கிறார். பிறகு தோளை யாரோ தொட்டதுபோல் உணர்ந்திருக்கிறார். அவ்வளவுதான். அதற்கு பிறகு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. விழித்துப் பார்த்தபோது தலைமுடி வெட்டப்பட்டிருந்தது.

முடி
முடி
Pixabay

பக்கத்து கிராமத்தில் 60 வயதான பெண் ஒருவர் பக்கத்துவீட்டுக்கு சென்றிருக்கிறார். யாரோ தோளைத் தொட்டு கூப்பிட்டதுபோல் இருந்திருக்கிறது. திரும்பியிருக்கிறார். யாருமில்லை. அதற்கு பின் என்ன நடந்ததெனத் தெரியவில்லை. எழுந்து பார்த்தபோது முடியைக் காணவில்லை.

இங்கிலாந்து மட்டும் ஓராண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடிகளை இறக்குமதி செய்கிறது. ஒரு பேச்சுக்கு எனக் கணக்கெடுத்தால் 8 கோடி மைல்கள் நீளமுள்ள தலைமுடி ஒவ்வோர் ஆண்டும் அங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 20 லட்சம் தலைகளில் இருக்கக்கூடிய முடிகள் அவை. அதாவது குறைந்தபட்சமாக 20 லட்சம் பேராவது ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்தில் அலங்காரத் தலைமுடி தயாரிக்கவென உலகின் பல இடங்களில் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். உலகை 3,200 தடவை சுற்றி வந்துவிடக் கூடிய அளவு நீளமுள்ள முடி. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தலைமுடி இறக்குமதியில் இங்கிலாந்து இருக்கிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் தலைமுடிக்கு இங்கிலாந்தில் வணிகம் அதிகம். ஏனெனில், இரு பூகோளப் பகுதிகளைச் சார்ந்த மக்களின் தலைமுடிகளும் ஒரு தன்மையைக் கொண்டிருக்கும். மனிதத் தலைமுடியை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா, இந்தியா, பெரு, பிரேசில், தென் கொரியா மற்றும் மியான்மர் ஆகியவை முக்கியமான நாடுகள்.

சாதாரணமாக வெட்டி வீசியெறியப்படும் முடிக்கு இத்தனை பெரிய அளவில் வணிகம் நடக்கிறதா என நீங்கள் வியக்கலாம். வியக்காதீர்கள். வியப்புக்கு மட்டுமென இல்லாமல் அதிர்ச்சி கொள்ளவுமென இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் ஒரு சங்கம் இருக்கிறது. அகில இந்திய மனித முடி ஏற்றுமதியாளர்களின் சங்கம்! அந்தச் சங்கத்தின் தலைவர் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும்போது இப்படிச் சொன்னார்.

“பல இந்தியர்களின் வாழ்வாதாரமே முடிகளைச் சேகரித்து, அவற்றை நேர்த்தியாக்கி விற்பதில் இருக்கிறது. அதில் நிறைய வெளிநாட்டு வருமானம் வேறு இருக்கிறது. இரண்டின் காரணங்களாலும் கடத்தலுக்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.”

தலைமுடிக்காகக் கடத்தலா?

ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். மியான்மர் நாட்டு எல்லையில் பல லாரிகளில் மனித முடிகள் அதிகாரிகளால் பிடிக்கப்படும் காட்சி. நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் நடக்கும் உண்மை அது.

முடி
முடி

உலக நாடுகள் பலவற்றிலும் பலவகை முடிகள் இருக்கின்றன. அவரவர் இனத்துக்கென இருக்கும் நம்பிக்கை, பாரம்பர்யம், கலாசாரம், பழக்க வழக்கம் போன்றவற்றின்பால் பலவகை அலங்காரங்களுடன் முடிகளை வளர்க்கின்றனர். அவற்றில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை நாம் மறுக்க முடியாது. அவரவர் வழக்கம் மற்றும் வாழ்க்கைச் சூழல்களை நாம் மதிப்பதற்கான அடையாளம் அதுவே. ஆனால் உலக மக்களின் பலதரப்பட்ட தலைமுடி அலங்காரங்கள் அழிக்கப்பட்டு, அமெரிக்கா சொல்லும் சிகை அலங்காரத்தையே தூக்கிப் பிடிக்கும் சூழல் இன்றிருக்கிறது.

நன்றாக கவனித்துப் பாருங்கள். இன்று நாம் ஒரு சலூன் கடைக்கு சென்று முடிவெட்டவென நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரம் என்னவாக இருக்கிறது? ஏதோவொரு படத்தில் வந்த சிகையலங்காரமாக இருக்கும் அல்லது ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்த சிகை அலங்காரமாக இருக்கும். இவை இரண்டுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சொல்லும் சிகை அலங்காரத்தையே அடிப்படையாகக்கொண்டிருக்கும். ஓர் அமெரிக்கனைபோல், ஐரோப்பியனைபோல் சிகை அலங்காரம் வைத்துக்கொள்வதில் ஒன்றும் பிரச்னை கிடையாது. அதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் சிகை அலங்காரத்துக்குப் பின்னால் ஓர் இனத்தின் மேலாதிக்கம் நம் கண்களுக்குத் தெரியாத வணிகச் சங்கிலியின் வழியாக கட்டமைக்கப்பட்டு, நம் வாழ்க்கைகளில் திணிக்கப்பட்டு, அதற்கான பலிகடாக்களாக நம் சக மக்களே ஆக்கப்படும்போது நாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தலைமுடி வரை வரும் அடையாள அழிப்பு, தலைக்கு வரும் நாள் வெகு தூரத்திலும் இருக்காது.

பகுதி 17-க்குச் செல்ல...