அலசல்
சமூகம்
Published:Updated:

“டேய்... ரத்தம் கக்கிச் செத்துருவீங்கடா!”

போலி மந்திரக்காரி
பிரீமியம் ஸ்டோரி
News
போலி மந்திரக்காரி

போலீஸாரையே மிரட்டிய போலி மந்திரக்காரி...

“டேய்... ரொம்ப நல்லவன்டா நீ. ஆனா, எதிரிங்க உன் வீட்டுல ஏவலை ஏவிட்டானுங்க. பில்லி சூனியம் வெச்சிட்டானுங்க... அது உன்னோட மொத்தக் குடும்பத்தையும் ரத்தக்காவு வாங்கிடும். அதை எடுக்கணும்னா வீட்டுல இருக்கிற நகை, பணத்தையெல்லாம் ஆத்தா காலடியில புதைச்சுவெச்சு 45 நாளுக்கு பூஜை செய்யணும்டா... இது ஆத்தாவோட கட்டளை. ம்ம்ம்ம்ம்ம்...” புகை சூழ்ந்த அந்த அறைக்குள் எலுமிச்சைப்பழத்தை வாயில் கடித்துக்கொண்டே தலைவிரிகோலத்துடன் இப்படி ஆவேசமாகச் சொல்வார் நாராயணி. சிவப்பு நிறத்தில் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிய... அந்த அறை முழுக்க ஏராளமான காளி படங்கள் ‘பயங்கர’மாக அலங்கரித்திருக்கும். அந்தச் சூழலில், நாராயணி முன்பாகத் தனியாக அமர்ந்திருக்கும் எவர் ஒருவரும் சற்று வெலவெலத்துதான் போவார்கள்!

இப்படி ஆவேசமாகச் சாமியாடியே நூறு சவரனுக்கு மேல் தங்க நகைகள், லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியிருக்கிறார் பெண் சாமியார் நாராயணி. எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும்... ஒருகட்டத்தில் போலீஸாரிடம் வசமாகச் சிக்கியிருக்கிறார். விசாரணையின்போது போலீஸ் ஸ்டேஷனிலும் அவர் ஆவேசமாகச் சாமியாடி, சில நிமிடங்கள் போலீஸாரையே திகிலடையவைத்ததுதான் ஹைலைட்!

நாராயணி
நாராயணி

அருள்வாக்கு நாராயணி

சென்னை, பாலவாக்கத்தில் கடல் அலைகள் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஒரு குடிசைதான் நாராயணியின் மந்திரக்கூடம். “தங்கத்து மேல ஆசை கூடாது தாயி. நானே பாரேன்... வெள்ளிதான் போட்டிருக்கேன்” என்று பக்தைகளிடம் பதமாகப் பேசுவார். காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக ஆரம்பநாள்களில் இவர் சொன்ன சில விஷயங்கள் பலிக்கவே... சிலர் இவரைத் தேடிவர ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் அதையே தொழிலாக்கிக் கொண்டார் நாராயணி. குறி சொல்வது, பரிகாரம் சொல்வது, பூஜைகள், சிறப்பு யாகங்கள் எனக் களைகட்ட ஆரம்பித்தது நாராயணியின் மந்திரக் கூடாரம். அப்போதுதான் நாராயணியின் சாமியார் மூளையில் டாலடித்தது தங்க நகை பூஜைத் திட்டம். அதைத்தான் இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் படித்தீர்கள்!

நாராயணி சாமியாடியபடியே நகைகளைக் கொண்டுவரச் சொன்னால், பத்தில் மூன்று பேராவது நகை, பணத்தோடு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்களிடம், “என் கண்ணுல இந்த நகையெல்லாம் காட்டாதீங்க... ஆத்தா காலடியில புதைச்சுருங்க. 45 நாள் கழிச்சு வந்து எடுத்துட்டுப் போயிடுங்க” என்று சொல்லி சாமி புகைப்படத்துக்குக் கீழே குழியைத் தோண்டுவார். அதில் பக்தர்கள் நகையையும் பணத்தையும் போடுவார்கள். மண்ணைக் கொட்டி மூடி, அதன்மேல் ஒரு சாமி படத்தையும், தகட்டையும் வைத்து, “இங்க இருக்குற எல்லா சாமி படத்துக்குக் கீழேயும் இப்படித்தான் பலரோட நகைகள், ஆத்தா அருளை வாங்கிட்டு இருக்குது. 45 நாள் கழிச்சு இதை நீங்க எடுத்துட்டுப் போயிடணும். அதுக்கப்புறமும் நகைங்க இங்கிருந்தா எனக்குப் பாவம் வந்து சேரும். இந்த 45 நாளும் நீங்க கவுச்சி சேக்கக் கூடாது... சுத்தபத்தமா இருக்கணும்” என்றெல்லாம் ஏகத்துக்கும் எடுத்துவிடுவார்.

45 நாள்கள் கழித்து அவர்கள் வந்தால், லேசாக பல்ஸ் பார்ப்பாராம் நாராயணி. கொஞ்சம் விவரமானவர்கள்... பிரச்னை செய்வார்கள் என்று தெரிந்தால், நகையை எடுத்துக் கொடுத்துவிட்டு காணிக்கையாக, கணிசமான தொகையை வசூலித்துவிட்டு அனுப்பிவிடுவார். அப்படியும் சிலரிடம் நகையின் சிறு பகுதியையோ அல்லது தோடு, மோதிரம் எனச் சிறு நகையை மட்டும் எடுத்துக்கொண்டு, “ஆத்தா ஆசைப்பட்டு எடுத்துக்கிச்சு... இனிமே உங்க வீட்டுல தங்க மழை பொழியும். அதிர்ஷ்டசாலி நீங்க...” என்று சொல்லி அனுப்பிவிடுவார். அதேசமயம், நகையைக் கொடுத்தவர்கள் கொஞ்சம் அப்பாவிகளாக இருந்தால் அவ்வளவுதான்... மொத்தத்துக்கு மிளகாய்பூசி அனுப்பிவிடுவார்.

அப்படி மொத்த நகையையும் அபேஸ் செய்ய முடிவெடுத்துவிட்டால், “இன்னும் உன் வீட்ல ஏவல் சுத்திக்கிட்டிருக்கு” என்றோ “ஏன்டா சுத்தபத்தமா இல்லாம அசிங்கம் பண்ணிட்டி யேடா...” என்று சொல்லியோ “இப்ப பூஜையில இருக்குறதை எடுத்தா நீ மட்டுமில்லாம உன் மொத்த குடும்பமும் ரத்தம் கக்கிச் செத்துடும். உன் வீட்ல துர்மரணம் நடக்கும்” என்று சொல்லி அரட்டுவார். அவர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கழுத்தறுக்கப்பட்ட காக்கா ஒன்று குடிசைக் கதவில் மோதி சொத்தென்று வந்துவிழும். எல்லாம் அம்மணியின் செட்டப்தான்! “டேய் பாருடா... ஆத்தா காவு வாங்க ஆரம்பிச்சிடுச்சு... சீக்கிரம் கிளம்பு... திரும்பவும் 45 நாள் கழிச்சு வா...” என்று விரட்டிவிடுவார். அடுத்தடுத்த ஒன்றரை மாதங் களில் இப்படி விரட்டி விரட்டியே ஒருகட்டத்தில் ஆத்தாவின் பெயரைச் சொல்லி, நகைகளை ஆத்தா விழுங்கிவிட்டதாக மிரட்டுவார். திகிலடைந்த பலரும் விட்டால் போதும் என்று ஓடிவிடுவார்கள்.

“அக்னி உன்னைத் தேடுது!”

இப்படி நாராயணியிடம் பரிகாரம் தேடி வந்தவர்களில் ஒருவர்தான் அரசு ஊழியர் சிவக்குமார். அவரின் மனைவி, மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்றபோது, சேலையில் தீப்பிடித்து உயிரிழந்ததில், கடுமையாக மனமுடைந் திருந்தார் சிவக்குமார். அவரிடம் நாராயணி, “உன் வீட்டுல ஏவல் இருக்கு. அதுதான் உன் மனைவியைக் கொடூரமா கொன்னுருக்கு. அடுத்து உன்னைத் தான் காவு வாங்கக் காத்திருக்கு. உன் பொண்டாட்டியைக் கொன்ன அக்னி இப்ப உன்னைத் தேடிக் கிட்டிருக்கு. 45 நாளைக்கு தீப்பெட்டி, அடுப்புனு அக்னி சமாசாரங்களை நீ நெருங்கக் கூடாது. அந்த ஏவலை விரட்டணும்னா உன் பொண்டாட்டி யோட நகை, வீட்டுல இருக்குற பணத்தை ஆத்தா காலடியிலவெச்சு பூஜை செய்யணும்” என்று அதே பல்லவியைப் பாடியிருக்கிறார்.

பதறிப்போன சிவக்குமார், பதினொன்றரை சவரன் தங்க நகைகளையும், 1,40,000 ரூபாய் ரொக்கத்தையும் மந்திரக்கூடத்தில் புதைத்திருக் கிறார். 45 நாள்கள் முடிந்த பிறகு, சிவக்குமார் அவற்றைக் கேட்க... தனது வழக்கமான வித்தையைக் காட்டி இழுத்தடித்திருக்கிறார் நாராயணி. ஒரு கட்டத்தில் நாராயணி தனது குடிசையைக் காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிடவே... நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சிவக்குமார். அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து ஆறு பேர் இதேபோல நாராயணி மீது புகாரளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து நாராயணியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் அவர் தனது சொந்த ஊரான திருப்போரூரில் வீடு கட்டிக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றபோது, கடைசி நேரத்தில் அவர் எஸ்கேப் ஆகியிருந்தார். ஒருவழியாக நாராயணியின் புதிய செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்த போலீஸார், பில்லி சூனியம் எடுக்க வேண்டும் என்று நைசாகப் பேச்சுக் கொடுத்திருக் கிறார்கள். பட்டினப்பாக்கத்தில் இருப்பதாக அவர் சொல்லவே... அங்கு விரைந்த தனிப்படையினர் நாராயணியைப் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர் பிடிப்பட்டபோது தனது சாமியார் வேஷத்தை முற்றிலும் கலைத்து, ‘மஃப்டி’யில் இருந்திருக்கிறார்!

“டேய்... ரத்தம் கக்கிச் செத்துருவீங்கடா!”

“இங்க நிறைய சாவு விழுந்திருக்கு!”

காவல் நிலையத்திலும் தனது மந்திரஜாலத்தைக் காட்டி டபாய்த்திருக்கிறார் நாராயணி. விசாரணையின்போது திடீரென்று இன்ஸ்பெக்டர் டேபிளிலிருந்த எலுமிச்சைப்பழத்தைப் பாய்ந்தோடி எடுத்து வாயில் கடித்தபடியே ஆக்ரோஷமாக, “டேய்... நான் ஆத்தா வந்திருக்கேன்டா... இங்க நிறைய சாவு விழுந்திருக்கு. அந்த ஆத்மாக்கள் இங்கயேதான்டா சுத்துது. பரிகார பூஜை பண்ணுங்கடா, இல்லைன்னா எல்லாரும் ரத்தம் கக்கிச் செத்துடுவீங்க” என்று ஏகத்துக்கும் உக்கிரமாகச் சாமியாடியிருக்கிறார். சில நிமிடங்கள் போலீஸாரே திகைத்துப்போய்விட... தைரியமான பெண் காவலர் ஒருவர், “ஏய்... ஆத்தாவைச் சொல்லி ஏமாத்தாதே... இப்போ உன்னை என்ன செய்யப்போறன் பாரு...” என்று லத்தியை ஓங்கிக்கொண்டே சீறவும், சடாரென்று மயங்கியதுபோல நடித்தார் நாராயணி.

பிறகு விசாரணையில், பாலவாக்கம் பகுதியில் அடகுக்கடை நடத்திவரும் ரத்தன்லால் என்பவரிடம் நகைகளையெல்லாம் நாராயணி விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் கைதுசெய்தது போலீஸ். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரிடமிருந்தும் இதுவரை நகைகள் எதையும் கைப்பற்றவில்லை போலீஸ். கேட்டால், `எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டேன்’ என்றார்களாம்.

இது குறித்துப் பேசிய தனிப்படை போலீஸார், “புகார்கள் வந்த வகையில் மொத்தம் 102 சவரன் நகைகள், 8,60,000 ரூபாய் பணத்தை நாராயணி ஏமாற்றியிருக்கிறார். இவரிடம் பணம், நகையை ஏமாந்தவர்கள் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

புழல் சிறைக்குள்ளும் நாராயணி மந்திரக்கூடம் நடத்தாமல் இருந்தால் சரி