Published:Updated:

மாணவிகளுக்குச் சாபம்; நீதிமன்ற வளாகத்தில் தியானம்! - ஏன் இப்படி நடந்து கொண்டார் நிர்மலா தேவி?

நிர்மலா தேவியின் நடவடிக்கைகளில் சிறிது மாற்றம் காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே தியானம்செய்வது போல அமர்ந்திருந்தார்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

தனிமை, வழக்கு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால்தான் நிர்மலாதேவி இப்படி எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொள்வதாகவும், அவர் நடிக்கவில்லை எனவும் அவரைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வழக்கில் ஆஜராவதற்காக அவ்வப்போது அவர் நீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், கடந்த முறை ஆஜராக வந்த அவர் சுடிதார் அணிந்திருந்தார். அதுவே பரபரப்பாக பேசப்பட்டது.

நிர்மலா தேவி
நிர்மலா தேவி

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார். வழக்கின் விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அவரது நடவடிக்கைகளிலும் சிறிது மாற்றம் காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே தியானம்செய்வது போல அமர்ந்திருந்தார். காமாட்சியம்மன் சுவாமி வந்ததாகக் கூறிய அவர், 'தனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் இறந்துவிட்டார்கள். தனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. மனரீதியாக குடும்பத்தினரோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்' என ஏதேதோ பேசினார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், காவல்துறையினர் அவரை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்னர், சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர், இரவில் அங்கே உள்ள தர்காவில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் புலம்பியுள்ளார். அதன் பின்னர், அங்கே வந்த காவல்துறையினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

அவரது வீட்டின் வாசல் பகுதியை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார். அவர் விட்டுவிட்டு வந்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு இன்று காலை காவல்துறையினர் அவரது வீட்டுக்கு வந்து கொடுத்தனர். இந்நிலையில், ஏன் இப்படி நடந்துகொள்கிறார்... என்ன ஆனது என விசாரித்தோம்.

அவருக்குத் தெரிந்த சிலரிடம் கேட்டபோது, ``சிறையில் இருக்கும் போதே மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அதற்கான சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. 10 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகாவது, தன் குடும்பத்தினர் தன்னிடம் பேசுவார்கள் என நினைத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

நிர்ம்லாதேவி
நிர்ம்லாதேவி

தற்போது, பேசுவதற்குக்கூட யாரும் இல்லாமல் தனிமை, வழக்கு, சிறை, புறக்கணிப்பு என மனரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் அவர் அப்படி எல்லாம் நடந்துகொள்கிறார். ஒருமுறை ஒரு மாதிரியும் அடுத்தமுறை வேறு மாதிரியாகவும் பேசுவார்.

இவர் நடிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நடிக்கவேண்டிய அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் கிடைக்கும் தண்டனை கிடைப்பது உறுதிதான்.

நிர்மலாதேவி
நிர்மலாதேவி

எனவே, நடிப்பதால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால்தான் இப்படி நடந்துகொள்கிறார். ஏதோ ஒரு காரணத்துக்காக அரசும் அவருக்கு மனரீதியான நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.

பலர், நிர்மலா தேவி தண்டனையில் இருந்து தப்புவதற்காகத்தான் இது மாதிரியக நடந்துகொள்கிறார் என்றும் அவருக்கான தண்டனை விரைவாக வழங்கபட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.