கும்பகோணம் அருகே அரசுப் பள்ளியில் படித்துவந்த மாணவர் ஒருவர், தலைமையாசிரியர் திட்டியதாகக் கூறி தன் சாவுக்கு தலைமை ஆசிரியர்தான் காரணம் வேறு யாரும் கிடையாது என மொபைல்போனில் பேசி வீடியோ எடுத்து, அதை உடன் படிக்கும் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு, எலி மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (50). இவரின் மனைவி நிதா (45). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்தத் தம்பதி, கட்டடக் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு விஷ்வா, விஷால் என இரண்டு மகன்கள். விஷ்வா தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். விஷால் திருநாகேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில் விஷால் படிப்பில் கவனம் செலுத்தாமல் வித்தியாசமான ஸ்டைலில் தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்குச் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரான சம்பத்குமார் இதைப் பல முறை கண்டித்திருக்கிறாராம். `முடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார். எனினும் தொடர்ந்து முடியை வெட்டாமல் பள்ளிக்கு வந்த விஷாலிடம், `உன் பெற்றோரரை அழைத்து வா’ என சம்பத்குமார் கூறியிருக்கிறார்.

அடுத்த நாளும் பெற்றோரை அழைக்காமல் சென்ற விஷாலை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்கவைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஷால், கடைக்குச் சென்று எலி பேஸ்ட் வாங்கி வந்ததுடன், தனது மொபைல்போனில், ``என்னை ஸ்கூலில் ரொம்பக் கொடுமைப்படுத்துறாங்க. நான் சாகப்போறேன். எனது சாவுக்கு ஹெட்மாஸ்டர் சார் மட்டும்தான் காரணம்” எனக் கூறி, வீடியோ பதிவு செய்து, அதை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு பள்ளி வளாகத்திலேயே எலி பேஸ்ட்டை தின்றுவிட்டார்.
இந்நிலையில், விஷாலைத் தற்கொலைக்குத் தூண்டிய தலைமையாசிரியர் சம்பத்குமாரைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.

இது குறித்து மாணவரின் உறவினர்கள் தரப்பில் பேசினோம். `விஷால் தலை முடியை வெட்டாமல் பள்ளிக்குச் சென்று வந்தான். முடியை வெட்டிவிட்டு வருமாறு தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார். அதைச் செய்யாததால், `பெற்றோரை அழைத்து வா’ என்றிருக்கிறார். விஷாலின் பெற்றோர் கட்டட வேலைக்கு செல்பவர்கள் என்பதால் விஷாலால் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற விஷாலிடம் `பெற்றோரை ஏன் அழைத்து வரலை’ என்று கேட்டதுடன், `நீ எந்த ஏரியா?’ எனக் கேட்டிருக்கிறார்.
விஷால் தான் வசிக்கும் ஏரியாவைச் சொல்ல, `ஓ... நீ அந்தத் தெருவா... அதான் இப்படி நடந்துக்குற...’ எனப் பேசியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவன் விஷால், எலி பேஸ்ட்டைத் தின்று தற்கொலை செய்துகொண்டுவிட்டான். கட்டட வேலைக்குப் போய் பிள்ளைகளை வளர்த்த விஷாலின் பெற்றோர், `உன்னை இந்தக் கோலத்துல பார்க்கவா இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம்...’ எனக் கதறியதை யாராலும் தாங்க முடியவில்லை” என்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலோ, `விஷால் ஒழுங்கா படிக்க மாட்டான். வித்யாசமான ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்தான். `முடியை ஒழுங்கா வெட்டிக் கொண்டு வா படிப்பில் கவனம் செலுத்து’ எனக் கண்டித்ததால் விபரீதமான முடிவை எடுத்து விட்டான்” என்று கூறிவருகின்றனர். காவல்துறை முறையாக விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.