Published:Updated:

சென்னை: `புகாரை ஏன் வாபஸ் பெற்றேன்?’ -உதவி இன்ஜினீயர் விவகாரத்தில் கல்லூரி மாணவி விளக்கம்

இன்ஜினீயர் ஆடியோ
இன்ஜினீயர் ஆடியோ ( மாதிரிப் படம் )

நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டேன் என்று சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் மீது புகாரளித்த கல்லூரி மாணவி தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம் சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர், பேசிய காதல் ஆடியோ வைரலானது. இதுகுறித்து மாநகராட்சியில் பணியாற்றும் உதவி இன்ஜினீயர்கள் சிலரிடம் பேசினோம். தங்களுடைய பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் அவர்கள் நம்மிடம் பேசினர்.

``சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. அதனால்தான் வீடு வீடாகத் தன்னார்வலர்கள், தற்காலிக மாநகராட்சி ஊழியர்கள் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் வார்டு 60-ல் 48 பேர் தற்காலிக மாநகராட்சி ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர். அதோடு 3 என்ஜிஓக்களை சேர்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரே வீட்டுக்கு என்ஜிஓ-க்கள், தற்காலிக ஊழியர்கள் செல்லும் சூழல் உருவானது. அதனால் தற்காலிக மாநகராட்சி ஊழியர்களில் 20 பேரை பணியிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இதையடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ள உதவி இன்ஜினீயர், 20 பேரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளார். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. வேலையை இழந்தவர்களில் கல்லூரி மாணவி ஒருவரும் உள்ளார். அவர் மூலம் உதவி இன்ஜினீயருக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளனர். அந்தக் கல்லூரி மாணவிக்கு உதவி இன்ஜினீயர் பேசிய ஆடியோவை எடுத்த அந்தக் குழுவைச் சேர்ந்த சிலர், இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

`உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று உதவி இன்ஜினீயர் பேசுவதைப் போல தொடங்கும் ஆடியோவை முழுமையாகக் கேட்டால் சில உண்மை புரியும். உதவி இன்ஜினீயரின் பேச்சைப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் கல்லூரி மாணவி உடனடியாக இணைப்பை துண்டித்திருக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகாரை வாபஸ் வாங்கியதாகவும் தகவல் உள்ளது.

ஆடியோ
ஆடியோ

சம்பந்தப்பட்ட உதவி இன்ஜினீயர், கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அதனால் மாநகராட்சி உயரதிகாரிகள் அவரைப் பாராட்டி வந்துள்ளனர். விரைவில் அவருக்கு பதவி உயர்வும் வழங்கலாம் என்ற நிலை இருந்தது. இந்தச் சமயத்தில் கொரோனா கணக்கெடுப்புப் பணியில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பதில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளது. தாங்கள் சேர்த்துவிட்டவர்களை எப்படிப் பணியிலிருந்து நீக்கலாம் எனக் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஈகோவும் தலைதூக்கியுள்ளது.

அதனால் உதவி இன்ஜினீயரின் ஆடியோ வெளியானதும் அதை அவருக்குப் பிடிக்காதவர்களே அதிகளவில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அரசியல் தலையீடு, வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரம் ஆகியவற்றுக்கு வடசென்னையில் பணியாற்றும் உதவி இன்ஜீனியர் பழிவாங்கப்பட்டுள்ளார். இதே நிலைமைதான் மற்ற வார்டுகளிலும் உள்ளன" என்றனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
`நீ நார்மலாக இல்லை' என்றாள்! - விபரீத முடிவுக்குமுன் சென்னை இன்ஜினீயர் பேசிய அதிர்ச்சி ஆடியோ

இதையடுத்து உதவி இன்ஜினீயர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயரிடம் கேட்டதற்கு, `எனக்கு இதுவரை சஸ்பெண்ட் உத்தரவு வரவில்லை. உண்மையில் அந்த ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல’ என்றார் சுருக்கமாக.

கல்லூரி மாணவியிடம் கேட்டபோது, `வீட்டில் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று கூறினார்கள். அதனால் அந்தப் பிரச்னையை பேசி முடித்துவிட்டோம். நான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைக்கூட வாபஸ் பெற்றுவிட்டேன். எஃப்ஐஆர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்’ என்றார்.

இதுகுறித்து மாணவி தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் பேசினோம். ``மாணவியிடம் விசாரித்தபோது அவர் சம்பந்தப்பட்ட இன்ஜினீயர் மீது புகாரளித்துள்ளார். ஆனால், தற்போது புகார் மீது எந்தவித நடவடிக்கையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். விரைவில் அதுதொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளார்" என்றார்.

சென்னை மாநகராட்சி இன்ஜினீயர், கல்லூரி மாணவி ஆடியோ தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு