Published:Updated:

திருப்பதியில் குடும்பத்துடன் சிக்கிய உதித்சூர்யா! - வேகமெடுக்கும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு

udith surya
udith surya

தேடப்பட்டு வந்த உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யாவைக் கைது செய்ய, ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் உஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக உதித்சூர்யாவை தனிப்படை தேடிவந்தது. குடும்பத்தோடு உதித்சூர்யா தலைமறைவானார். உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக இருப்பவர் என்பதால், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தது தனிப்படை. இந்த நிலையில், வழக்கானது சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இருந்தபோதும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து உதித்சூர்யாவை தேடிவந்தனர்.

udith surya
udith surya

அவரது குடும்பத்தினரின் செல்போன் சிக்னல்களை வைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு, மலையிலிருந்து கீழிறங்கும் நேரத்தில் அங்கு பதுங்கி இருந்த தனிப்படை போலீஸார் அவர்களை அதிரடியாக கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை அழைத்துவரப்பட்டு சி.பி.சி.ஐ.டி தலைமையகத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். தேடப்பட்டு வந்த உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என இனி தெரியவர வாய்ப்புள்ளது.

`நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்’ - சென்னை மாணவர் மீது தேனியில் வழக்குப் பதிவு!
அடுத்த கட்டுரைக்கு