நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணான் குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி. இவர் மனைவி சித்ரா. இந்தத் தம்பதியின் மூன்றாவது மகள், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வருகிறார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் உடனடியாகக் கட்டணம் செலுத்த வேண்டுமென வற்புறுத்தியாகவும், அந்த மாணவி பணம் கட்டாததால் அவருக்குக் கட்டாய விடுப்பு அளித்து, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, பெற்றோர் பணிக்குச் சென்ற நிலையில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த உறவினர்கள் அவர் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை - நாகூர் சாலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் சுகுமாரன், டி.எஸ்.பி சரவணன் ஆகியோர் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பேச்சுவார்த்தையில் அவர்கள், ``கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர். அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரியின் தாளாளர், கல்லூரி முதல்வர், பிசியோதெரபி வகுப்பாசிரியர் உள்ளிட்ட மூவர் மீதும் நாகூர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.