Published:Updated:

பள்ளியில் மோதல்... கையில் சாதிக்கயிறு - மாணவர்களுக்குத் திருக்குறள் எழுதும் தண்டனை!

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 42 மாணவர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர், அவர்களுக்கு 1,330 திருக்குறளையும் எழுதும் தண்டனை விதித்தார்.

காவல்நிலையத்தில் மாணவர்கள்
காவல்நிலையத்தில் மாணவர்கள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரு மாணவருக்குப் பிறந்தநாள் விழா என்பதால் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த அரசு உதவிபெறும் வேறு ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.

திருக்குறள் எழுதும் மாணவர்கள்
திருக்குறள் எழுதும் மாணவர்கள்

இந்த மோதலில் மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்துள்ளனர். அதனால் ஒருவருக்கொருவர் அடித்துள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் சமரசப்படுத்தியதால் இரு தரப்பையும் சேர்ந்த மாணவர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஒரு தரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த தயாராகியிருக்கிறார்கள்.

`150 ஆண்டுகளுக்கு முந்தைய வீரவாள்!' - தனி ஒருவனின் சாகசத்தைப் பதிவு செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, நடந்த சம்பவங்களை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் மோதல் குறித்து அறிந்த போலீஸார் அவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்து காவல்நிலையத்துக்கு வரவழைத்தனர்.

திருக்குறள் எழுதும் தண்டனை பெற்றவர்கள்
திருக்குறள் எழுதும் தண்டனை பெற்றவர்கள்

பின்னர், மோதலில் ஈடுபட்டவர்கள், கைகளில் சாதிக் குறியீடு தொடர்பான கயிறு கட்டியவர்கள் என 42 மாணவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களுக்கு ஆலோசனை கொடுத்துப் பேசினார்கள்.

மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதைப் புரிய வைத்த போலீஸார், செய்த தவற்றுக்குத் தண்டனை வழங்க முடிவு செய்தார்கள். அதனால் ஒவ்வொரு மாணவரும் 1,330 திருக்குறளையும் எழுதுமாறு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் நூதன தண்டனை வழங்கினார். அதனால் மாணவர்கள், காவல்நிலையத்தின் முன்பாக அமர்ந்து திருக்குறளை எழுதினார்கள்.

திருக்குறள் எழுதும் மாணவர்கள்
திருக்குறள் எழுதும் மாணவர்கள்

இது குறித்து ஒரு மாணவனின் தந்தை பாலசுப்ரமணியம் என்பவர் கூறுகையில், ``பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கும் செயல். பள்ளிப் பருவத்திலேயே இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் திருக்குறளை எழுதுமாறு தண்டனை கொடுத்ததை வரவேற்கிறேன்’’ என்றார்.