Election bannerElection banner
Published:Updated:

`980 டாலர் வேண்டும் இல்லையென்றால் அழித்து விடுவோம்!' - ஹேக்கர்களால் மிரட்டப்பட்ட விழுப்புரம் நபர்

Studio Owner kannan
Studio Owner kannan

கம்ப்யூட்டரை ஹேக் செய்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கம்ப்யூட்டரை யாரென்றே தெரியாத ஒரு நபர் ஹேக் செய்து அவரது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைப் போன்ற காட்சிகளைத் திரைப்படங்களில் அதிகமாகப் பார்த்திருப்போம். இது போன்ற ஹேக்கர்கள் தகவல்களைத் திருடிவிடுவார்கள் அல்லது திருடப்பட்ட தகவல்கள் வேண்டுமென்றால் பணம் கேட்டு மிரட்டுவார்கள். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மிகக் குறைவாகவே நடந்திருக்கின்றன.

Hack
Hack

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் ஒன்று தற்போது நடந்திருக்கிறது. திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் வீட்டிலேயே டிஜிட்டல் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார் கண்ணன். தன்னிடம் வரும் வேலைகளை மட்டும் செய்யாமல் பத்துக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்களில் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளின் போட்டோ, வீடியோ, பேனர் என அனைத்தையும் டிசைன் செய்து கொடுத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னால் வழக்கம்போல தன் பணியைத் தொடங்கிய கண்ணனுக்குப் பெரும் அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. மெயிலில் என்ன வந்திருக்கிறது எனச் சோதித்துக்கொண்டிருந்தபோது அவரது கம்ப்யூட்டர் திடீரென அவரின் கட்டுப்பாட்டை மீறி இயங்கியிருக்கிறது. அது மட்டுமன்றி திரையில் விநோதமான வடிவில் எழுத்துகளும் தோன்றி மறைந்திருக்கின்றன.

Studio Computer
Studio Computer

அதன் பிறகு சிறிது நேரத்தில் தானாகவே ஆஃப் ஆன கம்ப்யூட்டர் சில நிமிடங்கள் கழித்து தானாகவே ஆன் ஆகியிருக்கிறது. அதைத் தொடந்து கம்ப்யூட்டர் வழக்கம்போல இயங்கவும் செய்திருக்கிறது. அதைப் பார்த்து பெருமூச்சுவிட்ட கண்ணனுக்குப் புதிதாக அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவர் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருந்த 1TB அளவிலான போட்டோ, வீடியோ போன்ற தகவல்கள் முழுவதும் KVA எனும் வைரஸாக மாறியிருந்தன.

என்ன நடக்கிறது என்றே புரியாமல் பெரும் அதிர்ச்சியிலிருந்த கண்ணனுக்குத் திடீரென ஹேக்கர்களிடம் இருந்து இமெயில் ஒன்று வந்திருக்கிறது. அதில்,`980 டாலர்கள் செலுத்தினால் உங்களின் தகவல்களை உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம். இல்லையேல் அனைத்துத் தகவல்களையும் அழித்துவிடுவோம்’ என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் பதில் கூற முடியாது எனும் பயத்தில் கண்ணனும், வங்கிக் கணக்குத் தாருங்கள் என்னால் முடிந்த பணத்தைச் செலுத்திவிடுகிறேன் என ரிப்ளை செய்திருக்கிறார். அடுத சில நிமிடங்களில் எதிர்த்தரப்பில் இருந்து மற்றொரு இமெயில் வந்திருக்கிறது. கேட்ட பணத்தை பிட்காயின் மூலம் செலுத்தும்படி மீண்டும் ரிப்ளை வரவே பதற்றமடைந்த கண்ணன் செய்வதறியாது தவித்துள்ளார். இதுகுறித்து கண்ணனிடம் பேசினோம்,

``அன்றைக்கு ஸ்டூடியோவுக்கு வந்து வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்தேன். இமெயிலை செக் செய்துகொண்டிருந்தபோது என்னுடைய கணினி என் கட்டுப்பாட்டை மீறி இயங்கியது. அதன் பின்னரே கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்தது. 980 அமெரிக்க டாலர்கள் தந்தால்தான் தகவல்களைத் திருப்பித் தருவேன். இல்லையேல் தகவல்களை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள். நான் 7 வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது ஒரு வருட காலமாகத்தான் என்னுடைய ஊரில் உள்ள என் வீட்டிலேயே ஸ்டூடியோ நடத்தி வருகிறேன்.

Studio Owner kannan
Studio Owner kannan

இதுவரை இதுபோல நடந்ததில்லை. தற்போது இவ்வாறு மிரட்டுகிறார்கள் என் வாடிக்கையாளர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். விழுப்புரத்தில் உள்ள சைபர்கிரைம் டிபார்ட்மென்ட்டில் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். நண்பர் ஒருவர் 25,000 ரூபாய் கொடுத்து தகவல்களை ரெக்கவரி செய்து விடலாம் எனக் கூறுகிறார். ஏதாவது செய்து தகவல்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்கிறார் வருத்தத்தோடு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு