Published:Updated:

புதுக்கோட்டை: ரேஷன் அரிசி பதுக்கல்; 3,250 கிலோ பறிமுதல்; சார் ஆட்சியர் அதிரடி!

பதுக்கப்பட்ட மூட்டைகள்
பதுக்கப்பட்ட மூட்டைகள்

ரேஷன் அரிசியைக் காரைக்குடி பகுதிகளிலுள்ள பெரிய மில்களில் பட்டைதீட்டி விலையுயர்த்தி மளிகைக் கடைகளில் விற்பனை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு, பெரிய மில்களில் தீட்டப்பட்டு மளிகைக் கடைகளில் விற்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்தநிலையில்தான், அறந்தாங்கி அருகே கூத்தாடி வயல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றில் ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக அறந்தாங்கி சார் ஆட்சியருக்குப் புகார் சென்றது. புகாரின் பேரில் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், வட்டாட்சியர் மார்ட்டின் லூதர்கிங், வருவாய் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 குடோன்
குடோன்

அப்போது, அந்த குடோனிலிருந்த 65 ரேஷன் அரிசி மூட்டைகளில் 3,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசி மூட்டைகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் ரேஷன் கடைகளிலிருந்து மொத்தமாக வாங்கி, பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் கடைகளில் 50 கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசியை ரூ.250-க்கு மொத்தமாக வாங்கி அதை ஸ்டாக் வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த ரேஷன் அரிசியைக் காரைக்குடி பகுதிகளிலுள்ள பெரிய மில்களில் பட்டைதீட்டி, விலையுயர்த்தி மளிகைக் கடைகளில் விற்பனை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சார் ஆட்சியர் ஆனந்மோகன் உணவுப்பொருள்கள் கடத்தல் தடுப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததுடன், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

சீல் வைக்கும் அதிகாரிகள்
சீல் வைக்கும் அதிகாரிகள்

தொடர்ந்து அந்த குடோன் சார் ஆட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. ரேஷன் அரிசி பதுக்குபவர்களுக்கு தண்டனை கிடைப்பதுபோல, இதற்குக் காரணமாக இருக்கும் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைப் பணியாளர்களைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு