Published:Updated:

சென்னை:` ரூ.10,000 லஞ்சம்; சார் பதிவாளரிடம் விசாரணை; வெளிவந்த திடுக்கிடும் தகவல்!'

லஞ்சம்
லஞ்சம் ( Representational Image )

சென்னை மாதவரம் சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோர் லஞ்சம் வாங்கியபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர்.

பதிவுத்துறையில் லஞ்சம் வாங்குவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்காக பதிவுத்துறை அலுவலகங்களில் அனைத்துப் பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ள பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்குவதை முழுமையாகத் தடுக்க முடியாத நிலையே இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

லஞ்சம்
லஞ்சம்
Representational Image

இந்தநிலையில் மாதவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றனர். சென்னை மாதவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 10,000 ரூபாயை லஞ்சமாக வாங்கியபோது சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோரை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Vikatan

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறுகையில், ``மாவதரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 8.7.2021-ம் தேதி பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்றைக் கொடுக்க சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாகச் சம்பந்தப்பட்டவர் எங்களிடம் புகாரளித்தார். அதனால், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து அனுப்பினோம். அதோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் அங்கு சென்று ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது, பணத்தை வாங்கியபோது இருவரையும் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறோம். கிருஷ்ணமூர்த்தி, சுதாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.

லஞ்ச ஒழிப்பு
லஞ்ச ஒழிப்பு

சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி குறித்து இன்னொரு முக்கிய தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பதிவுத்துறையில் டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவருடன் சார் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி நட்பில் இருந்துவருகிறார். வில்லங்க சொத்துகள், விதிகளை மீறிப் பதிவு செய்தல் போன்ற வேலைகளில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி-யின் தலையீடு இருக்கிறது. அவரின் கட்டுப்பாட்டில் சென்னையில் இன்னும் சில சார்-பதிவாளர்கள் இருக்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குடன் செயல்பட்ட அந்த ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் அதே செல்வாக்குடன் இருந்துவந்தார். கடந்த ஆட்சியில் சில காரணங்களுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி-யுடன் சேர்ந்து செயல்பட்ட சார் பதிவாளர்களை கையும் களவுமாக பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறோம். அதில் சென்னை ராயப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், சென்னையில் காலியாக உள்ள சார் பதிவாளர் பதவியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வசூல் வேட்டை நடத்திவருவதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஏற்கெனவே வீட்டு வசதி வாரிய இடத்தை விதிகளை மீறிப் பதிவு செய்த முருகனின் பெயரைக்கொண்ட சார் பதிவாளர் ஒருவர், தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பணியாற்றிவருகிறார். அவர் மீது பதிவுத்துறை சார்பில் விசாரணை நடந்துவரும் சூழலில் ஓய்வுபெற்ற அந்த டி.ஐ.ஜி-யுடன் இணைந்து பல வேலைகளை அவர் செய்திருக்கும் ஃபைலும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு