Published:Updated:

`அதிகரிக்கும் மருத்துவர்கள் தற்கொலைகள்!' - அதிர்ச்சியில் திருச்சி #TamilnaduCrimeDiary

மருத்துவர்கள் புனிதவதி, சரவணன்
மருத்துவர்கள் புனிதவதி, சரவணன்

திருச்சியில் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். #TamilnaduCrimeDiary

திருச்சி காந்தி மார்க்கெட், தாராநல்லூர் விசுவாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அரியமங்கலம் பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகள் புனிதவதி சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிக்கக்கூடியவர். சென்னையில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை முடித்து புனிதவதிக்கு திருச்சியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

புனிதவதி
புனிதவதி

கடந்த மார்ச் 7-ம் தேதி மருத்துவர் புனிதவதியின் பெற்றோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது புனிதவதியின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது. அவர் வேலை பார்க்கிறார் என நினைத்துப் பெற்றோரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

புனிதவதியின் அறையில் விளக்கு நள்ளிரவு வரை அணையாமல் எரிந்துகொண்டே இருக்கவே, சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அதனால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, புனிதவதி அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். மயங்கிக் கிடந்தவரின் அருகில் ஊசியும் விஷம் மருந்து பாட்டிலும் கிடந்துள்ளன. அதிர்ச்சியில் துடித்த புனிதவதியின் பெற்றோர், அவரை மீட்டு உடனடியாகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு புனிதவதியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Representational Image
Representational Image

இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸார் நடத்திய விசாரணையில், காதல் தோல்வி காரணமாக இம்முடிவை அவர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. காதல் ஆசை காட்டி புனிதவதி ஏமாற்றப்பட்டாரா, அவர் எவ்வித ஊசியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டார் என்று போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

புனிதவதியைப் போலவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த கூரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் என்பவர் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சரவணன்
சரவணன்

மருத்துவர் சரவணனுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், அவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி பணியாற்றி வந்த கடலூர் மருத்துவர் கயல்விழி தற்கொலை செய்து கொண்டதும் நடந்துள்ளது.

தொடர்ந்து நிகழும் மருத்துவர்கள் தற்கொலையால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு