Published:Updated:

`சன் டி.வி உரிமையாளர், ஜெயலலிதா உறவினர்!’ - நடிகை ஜாக்குலினை வலையில் வீழ்த்த சுகேஷ் சொன்ன கதைகள்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
News
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தன்னை ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி நடிகை ஜாக்குலினிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடியைப் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகரும், அவரின் மனைவி லீனாவுடன் கூட்டாளிகள் சிலர் இணைந்து ஏராளமானோரிடம் சட்ட அமைச்சகத்தின் உயரதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் ஏராளமான பொய்களைச் சொல்லி தனது வலையில் விழவைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், சமீபத்தில் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் எப்படியெல்லாம் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் பொய் சொல்லி, தனது வலையில் விழவைத்தார் என்பது குறித்து அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு முறை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஜாக்குலினுடன் செஃல்பி எடுக்கும் சுகேஷ்
ஜாக்குலினுடன் செஃல்பி எடுக்கும் சுகேஷ்

அவர் கொடுத்த தகவலின்படி, முதன்முதலில் சுகேஷ் தன்னை சந்திரசேகர் ரத்னவாலா என்று ஜாக்குலினிடம் அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். அதோடு தான் சன் டி.வி உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினைத் தொடர்புகொள்ள சுகேஷ் பல முறை முயற்சி மேற்கொண்டார். 2020-ம் ஆண்டில் டிசம்பரில் இருந்து 2021ம் ஆண்டு, ஜனவரி வரை ஜாக்குலின் நம்பருக்குப் பல முறை போன் செய்துள்ளார். ஆனால் ஜாக்குலின் தெரியாத நம்பர் என்பதால் போனை எடுத்துப் பேசவே இல்லை. இதையடுத்து ஜாக்குலினின் மேக்கப் கலைஞர் ஷான் என்பவருக்கு அரசு அதிகாரி ஒருவர் போன் செய்து, சந்திரசேகர் மிகவும் முக்கியமான நபர் என்பதால் அவரிடம் ஜாக்குலின் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சந்திரசேகர் ஜாக்குலினிடம் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதைத் தொடர்ந்து ஜாக்குலின் சந்திரசேகரின் போனை எடுத்துப் பேசினார். அவர் தன்னை சன் டி.வி உரிமையாளர் என்றும், தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் உங்களின் தீவிர ரசிகன் என்றும், தென்னிந்திய மொழியில் உங்களை வைத்துப் படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு ஜாக்குலினின் மேக்கப் கலைஞருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சேகர் என்ற சுகேஷ் சந்திரசேகர் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமான நபர் என்றும், அவரிடம் தொடர்பில் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணையில் அமித் ஷாவின் அலுவலகத்திலிருந்து வந்த போன் அழைப்பு சுகேஷ் சந்திரசேகர் ஏற்பாட்டில் அவரின் கூட்டாளிதான் போன் செய்திருப்பது தெரியவந்தது.

ஜாக்குலின் - சுகேஷ்
ஜாக்குலின் - சுகேஷ்

அதோடு மூன்று ஆடம்பர பேக், இரண்டு ஜிம் ஆடைகள், இரண்டு ஜோடி ஷூக்கள், இரண்டு ஜோடி வைரக் காதணிகள், இரண்டு பிரெஸ்லெட் போன்றவற்றையும் ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசாக கொடுத்திருப்பது ஜாக்குலினிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சுகேஷ் கொடுத்த காரை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் ஜாக்குலின் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் சுகேஷ் கைதுசெய்யப்படும் வரை அடிக்கடி ஜாக்குலினுடன் அவர் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுகேஷ் சந்திரசேகரிடம் 1.5 லட்சம் டாலர் அளவுக்கு ஜாக்குலின் கடன் பெற்றிருப்பதும், ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு பூனைக்குட்டிகளும் சந்திரசேகரிடம் ஜாக்குலின் பரிசாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.