Published:Updated:

தூத்துக்குடி: அரிவாளுடன் புதைக்கப்பட்ட கொலையாளி! - சமாதியில் சபதம் ஏற்ற கூட்டாளிகள்

அரிவாளுடன் புதைக்கப்பட்ட கொலையாளியின் உடல்
அரிவாளுடன் புதைக்கப்பட்ட கொலையாளியின் உடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர்மீது நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்துவிட்டு உயிரிழந்த கொலையாளியை அரிவாளுடன் புதைத்த கூட்டாளிகள், சமாதியில் ரகசிய சபதம் ஏற்ற விவகாரம் காவல்துறையினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர்மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மணக்கரை வனப்பகுதியில் பதுங்கியிருந்த தகவல் கிடைத்த தனிப்படை போலீஸார் அவரைக் கைது செய்யச் சென்றனர்.

காவலர் சுப்பிரமணியன்
காவலர் சுப்பிரமணியன்

அப்போது, துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது குற்றவாளியான துரைமுத்து என்பவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இருவரின் உடல்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்ட தூத்துக்குடி காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி! - தமிழக அரசு #NowAtVikatan

காவலர் சுப்பிரமணியனின் உடலுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த காவலரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

துரைமுத்து உடலுடன் வைக்கப்பட்ட வீச்சரிவாள்
துரைமுத்து உடலுடன் வைக்கப்பட்ட வீச்சரிவாள்

காவலர்மீது வெடிகுண்டை வீசிய கொலையாளி துரைமுத்துவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பைக்குகளில் அவரது உடல் எடுத்துச் சென்ற வாகனத்தின் முன்பாக அணிவகுத்துச் சென்று காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

பின்னர் கொலையாளி துரைமுத்து உடல், சொந்த ஊரான மேலமங்கலகுறிச்சி பகுதியில் புதைக்கப்பட்டது. அப்போது காவல்துறையினரின் கெடுபிடியையும் மீறி ஏராளமான ஆதரவாளர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதைகுழியில் சபதம் ஏற்ற ஆதரவாளர்கள்
புதைகுழியில் சபதம் ஏற்ற ஆதரவாளர்கள்

புதைப்பதற்கு முன்பாக கொலையாளி துரைமுத்துவின் உடலின் மீது ஐந்து அடி நீளமுள்ள வீச்சரிவாள் வைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள், அவரது உடலை மூடிய கல்லறையின் மீது வீர சபதம் எடுத்துக்கொண்டார்கள். அப்போது, ``நீ விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவோம்’’ என அவர்கள் சபதம் ஏற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்த உளவுத்துறையினர் இந்த விவகாரங்களை கவனமாகக் கண்காணித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு