``இந்து மதத்துக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டும் பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கை மதுரை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், `தமிழக டி.ஜி.பி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கடந்த 18-ம் தேதி காலை மதுரை சைபர் க்ரைம் அலுவலகத்தில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, ``திருமாவளவன் மீது வழக்கு பதிவுசெய்து, 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவேன்'' என்றார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பும்போது, ராமசாமி சென்ற காரை சிலர் வழி மறித்து காரின் மீது முட்டைகளை வீசியும், கார் கண்ணாடிகளை கட்டையால் உடைத்தும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து காவல்துறையில் விசாரித்தபோது, ``வழக்கறிஞர் ராமசாமி கொடுத்த புகாரைப் பெற்று, சாலைகிராமம் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்கு பதிவுசெய்து தற்போது விசாரித்து வருகிறோம்" என்றனர்.