Published:Updated:

சென்னை: நள்ளிரவுவரை காவல் நிலையத்தில் காத்திருந்த நடிகை வனிதா - அதிகாலையில் சூர்யாதேவி கைது

நடிகை வனிதா விஜயகுமாரைக் கடுமையாக விமர்சித்த டிக்டாக் பிரபலம் மற்றும் யூடியூப் சேனலை நடத்திவரும் சென்னைப் பெண் சூர்யா தேவியை போலீஸார் இன்று கைது செய்தனர்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த பிறகு சமூக வலைதளங்களில் அவர்களைக் குறித்த தகவல்களே வைரலாகிவந்தது. நடிகை வனிதா குறித்து சென்னையைச் சேர்ந்த சூர்யாதேவி என்ற பெண், யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து நடிகை வனிதா விஜயகுமார், சூர்யாதேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் திரைப்பட நடிகை மற்றும் சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்திவருகிறேன். கடந்த 27.6.2020-ல் எங்கள் வீட்டில் எனக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் இருமணம் சேரும் விழா நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. எங்களுடைய நிகழ்வு அனைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நடிகை வனிதா, பீட்டர்பால்
நடிகை வனிதா, பீட்டர்பால்

இதற்கிடையே எங்களுடைய இவ்விழாவை எதிர்ப்பு தெரிவித்து பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் சூர்யாதேவி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் யூடியூப் வாயிலாகவும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளிலும் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார். என்னுடைய வீட்டுக்கு வெளியில் வந்து நின்றுகொண்டிருப்பதாகவும், தனக்கு 5 நிமிடம் ஆகாது உன் வீட்டிற்குள் நுழைந்து உன்னை சாகடிப்பேன் என்றும் என்னைப் பற்றி பேசுவதற்காகவே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி இருப்பதாகவும், அவருடைய வாழ்க்கை லட்சியமே என்னை அழிப்பதுதான் என்று பகிரங்கமாக அவதூறாகவும் ஆபாசமாகவும் என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அவருடைய பேச்சு வன்முறையைத் தூண்டுவதுபோல் உள்ளது. என் வீடு புகுந்து என்னைக் கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி, என் வீட்டு முன்பே ஒரு வீடியோவைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

`தஞ்சையை இழிவுபடுத்தலாமா?' - நடிகை வனிதா மீது புகார் கொடுத்த பா.ஜ.க, காங்கிரஸ்

இந்த சூர்யா தேவி யார் என்று விசாரித்ததில், இவர் ஏற்கெனவே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றியும் தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் என்றும் தெரியவந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதற்கு நான் யாருக்கும் அனுமதி தரவில்லை.

காவல் நிலையத்தில் சூர்யாதேவி
காவல் நிலையத்தில் சூர்யாதேவி

எனது டியூப் சேனலை பெண்களும் குழந்தைகளும் பார்க்கிறார்கள். ஆனால், இவர்களின் ஆபாச பதிவுகள் டிரெண்டிங் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஆபாசம் வன்முறையும் பரப்புகிறது. ஆகவே, என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் தூண்டிவிடும் வகையில் பேசி வரும் சூர்யா தேவி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று நடிகை வனிதா குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் சூர்யாதேவியை விசாரரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணைக்குப் பிறகு அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சூர்யாதேவியைக் கைது செய்த போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஜாமீனில் சூர்யாதேவி விடுவிக்கப்பட்டார். பின்னர் சூர்யா தேவி, நிருபர்களுக்கு அளித் பேட்டியில், ``நேற்றிரவு நான் வீட்டில் இருந்தபோது போலீஸார் அங்கு வந்தனர். நான் என்னுடைய வழக்கறிஞரிடம் பேசிவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றேன். நான் காவல் நிலையத்துக்குள் இருந்தபோது, அங்கு நடிகை வனிதாவும் அவரின் வழக்கறிஞர்களும் வந்தனர்.

சூர்யாதேவி
சூர்யாதேவி

வனிதாவின் வழக்கறிஞரும் என்னுடைய வழக்கறிஞரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய வழக்கறிஞரிடம் நான் பேச முயன்றபோது, போலீஸாரின் முன்னிலையில் காலில் கிடந்த செருப்பை கழற்றி என்னை அடிக்க முயன்றார் நடிகை வனிதா. அப்போது, போலீஸார் என்னை அழைத்துச் சென்றுவிட்டனர். என்னுடைய செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டனர். நடிகை வனிதா கொடுத்த புகாரின்பேரில் என்னை கைது செய்து கொள்வதாக போலீஸார் கூறினர். அப்போது நான் நடிகை வனிதா மீது கொடுத்தபுகாருக்கு ஏன் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை: `நான் மூன்று குழந்தைகளின் தாய்... சிங்கிள் மதர்!' - கலங்கிய நடிகை வனிதா

என்னைப் பற்றி நடிகை வனிதாவும் அவரின் வழக்கறிஞரும் தவறான தகவல்களைக் கூறினர். எனக்கு போலீஸார் கொடுத்த சிஎஸ்ஆருக்கு மதிப்பு கிடையாதா? போலீஸார், நடிகை வனிதாவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள். இரவு முழுவதும் என்னை எப்படி ஸ்டேஷனில் வைக்க முடியும்? பெரிய இடத்து ஆர்டர் என்று போலீஸார் கூறுகின்றனர். இப்போது நீதிபதி விசாரித்து எனக்கு ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். என்னைக் குறித்த தகவலை வாபஸ் பெறும் வரை நடிகை வனிதா குறித்து பேசுவேன். என்னுடைய சூர்யாதேவி என்ற யூடியூப் சேனலில் பேசிக்கொண்டுதான் இருப்பேன்" என்றார்.

வக்கீல் ஸ்ரீதர்
வக்கீல் ஸ்ரீதர்
சென்னை: `நான் மூன்று குழந்தைகளின் தாய்... சிங்கிள் மதர்!' - கலங்கிய நடிகை வனிதா

இதுகுறித்து நடிகை வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு, ``இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டும் என்றாலும் யூடியூப் சேனலைத் தொடங்கலாம் என்று இருக்கிறது. யூடியூப் சேனலில் தனிப்பட்ட நபர் குறித்து எல்லைமீறிய விமர்சனம் செய்யப்படுகிறது. அதை ஒழுங்குப்படுத்த வேண்டும். இல்லையெனில் கலாசார சீரழிவு ஏற்பட்டுவிடும். நடிகை வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சித்த சூர்யாதேவி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். மீண்டும் அவர் நடிகை வனிதா குறித்து அவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

டிக்டாக் பிரபலம், யூடியூப் சேனலை நடத்திவரும் சூர்யாதேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது நள்ளிரவு வரை நடிகை வனிதாவும் அவரின் வழக்கறிஞரும் காவல் நிலையத்திலேயே இருந்துள்ளனர். அதன்பிறகுதான் அவர்கள் சென்றுள்ளனர. சூர்யாதேவி காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த சமயத்தில், அவரின் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் வீடியோவும் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது. நடிகை வனிதா, சூர்யா தேவி மீது மட்டுமல்லாமல் அவரை விமர்சித்த 2 நடிகைககள் மீதும் புகாரளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு