Published:Updated:

`சுஷாந்த் மரணம் கொலையல்ல.. தற்கொலைதான்!'- எய்ம்ஸ் மருத்துவர் குழு

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

`சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையல்ல, தற்கொலைதான்’ என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கடந்த ஜூன் 15-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டார். `அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால், அந்த முடிவை எடுத்திருக்கலாம்’ என்றும், `போதைப்பொருள் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

`சுஷாந்தின் காதலி ரியா, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம்’ என அவருடைய தந்தை பீகார் போலீஸில் புகாரளித்தார். அதேபோல், ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் அவர் மீது போதை தடுப்புப் பிரிவு போலீஸார் இரண்டு வெவ்வேறு வழக்குகளைப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் ரியாவும், அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சுஷாந்த் விவகாரம்: தீபிகா படுகோன் டார்கெட்... பின்னணி அரசியல் என்ன?

இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு 57 நாள்கள் கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ அலட்சியமாகச் செயல்படுவதாக சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் கூற்றுப்படி, சுஷாந்த் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது 200 சதவிகிதம் உறுதியானது என்று தெரிவித்திருந்தார்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

இந்தநிலையில், சுஷாந்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் குப்தா தலைமையிலான மருத்துவர்கள் குழு, தங்களது அறிக்கையை சி.பி.ஐ-யிடம் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி, `சுஷாந்தின் மரணம் கொலையல்ல. தற்கொலைதான்’ என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

எந்தநிலையில் இருக்கிறது சுஷாந்த் வழக்கு? - சி.பி.ஐ-யின் பதில்

இதையடுத்து, தற்கொலை என்ற கோணத்தில் சி.பி.ஐ விசாரணையைக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சுஷாந்த் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா என்ற கோணத்திலும் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு