Published:Updated:

`தலைக்கு அருகே பாலிதீன் பை; நிர்வாண நிலையில் சடலம்!' -புதுச்சேரியில் கொல்லப்பட்ட நித்யானந்தா சீடர்

நித்யானந்தாவுடன் வஜ்ரவேலு
நித்யானந்தாவுடன் வஜ்ரவேலு

சாமியார் நித்யானந்தாவின் நெருங்கிய சீடர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான வஜ்ரவேல் என்பவர் சாமியார் நித்யானந்தாவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர். நித்யானந்தா பெயரில் ஏம்பலத்தில் ஆசிரமம் தொடங்கியதுடன், அதன் திறப்பு விழாவுக்கு நித்யானந்தாவைப் புதுச்சேரிக்கு அழைத்து வந்தார்.

நித்யானந்தாவுடன் வஜ்ரவேலு
நித்யானந்தாவுடன் வஜ்ரவேலு

நித்யானந்தாவின் அதிதீவிர சீடரான இவர், பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு அடிக்கடி குடும்பத்துடன் சென்று ஆசி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நித்யானந்தாவுடன் நேரடி தொடர்பிலும் இருந்திருக்கிறார்.

அந்தப் பற்றின் காரணமாக நித்யானந்தா பெயரில் ஏம்பலம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் பேக்கரித் தொழிலை நடத்தி வந்த இவர், தனது தொழிலை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 28-ம் தேதி அவரது பெரிய மாமியார் வசந்தா, தான் வாங்கிய 2 லட்சம் ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுவுக்கு போன் செய்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட வஜ்ரவேலு
கொலை செய்யப்பட்ட வஜ்ரவேலு

இதையடுத்து, பேக்கரியை மூடிவிட்டு இரவு 10 மணியளவில் செம்பியப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது பெரிய மாமியார் வசந்தா வீட்டுக்குச் சென்றார். அவர்களிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டவர், தனது காரில் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுத் திரும்பியிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் வஜ்ரவேல் வீட்டுக்குத் திரும்பாததால், அவரின் மனைவி வள்ளியம்மாள் செல்போனில் தொடர்புகொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

அது சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் குழப்பமடைந்த வள்ளியம்மாள் தனது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். வரும் வழியில் ஏதாவது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நினைத்த உறவினர்கள், பாகூர், செம்பியப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வில்லியனூர் பேக்கரி போன்ற இடங்களில் இரவு முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வள்ளியம்மாள்.

ஏம்பலம் ஆசிரமத்தில் நித்யானந்தாவுடன் வஜ்ரவேல்
ஏம்பலம் ஆசிரமத்தில் நித்யானந்தாவுடன் வஜ்ரவேல்

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. தொடர்ந்து வஜ்ரவேலுவின் உறவினர்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவரைத் தேடும் பணியைத் தொடர்ந்தனர். அப்போதுதான் பாகூர் குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வஜ்ரவேலுவின் காரினுள் அவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டுபிடித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காருக்குள் நிர்வாண நிலையில் சடலமாக இருந்த வஜ்ரவேலுவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வஜ்ரவேலுவின் தலைக்கு அருகே பாலிதீன் பை ஒன்று கிடந்தது. அவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் பாலிதீன் பையைக் கொண்டு அவரின் முகத்தை மூடி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் போலீஸார்.

சடலமாக மீட்கப்பட்ட வஜ்ரவேல்
சடலமாக மீட்கப்பட்ட வஜ்ரவேல்

இந்தக் கொலைக்கான காரணங்களாக இரண்டு தகவலைத் தெரிவிக்கிறது காவல்துறை தரப்பு. கொலை செய்யப்பட்ட வஜ்ரவேல் நிறைய பேரிடம் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்திருக்கிறார். அந்தக் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்தக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது காவல்துறை.

`சொத்துகள் குறித்து நித்யானந்தா எழுதிய `உயில்' '!- காஞ்சிபுரம் மடாதிபதி சொல்வது என்ன?

அதேபோல புதுச்சேரி-கடலூர் சாலையில் இருக்கும் கன்னியக்கோயில் என்ற பகுதியில் ரூ.1.75 கோடிக்கு ஒரு இடத்தை விலைபேசி அதற்காக ரூ.1 கோடி முன் தொகையையும் கொடுத்திருக்கிறார் வஜ்ரவேலு. இதற்கிடையில் ரூ.1.75 கோடி முழுத் தொகையையும் கொடுத்து அந்த இடத்தை வாங்குவதற்கு வேறு ஒரு நபர் முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர். அதேசமயம் கொலை செய்யப்பட்டிருக்கும் வஜ்ரவேலுவின் சடலம் நிர்வாண நிலையில் இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதால் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது காவல்துறை.

சடலமாக வஜ்ரவேல்
சடலமாக வஜ்ரவேல்

அதேபோல, வஜ்ரவேலுவின் சடலம் கிடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில், ஒரு வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் வஜ்ரவேலுவின் கார் அந்தப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. கொலைக்கான காரணத்தைக் கண்டறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

அடுத்த கட்டுரைக்கு