Published:Updated:

தஞ்சாவூர்: 3 மணி நேரம் மாயமான தாசில்தார் ஜீப்! - போதை இளைஞர் கைது

திருடிச் செல்லப்பட்ட தாசில்தார் ஜீப்
திருடிச் செல்லப்பட்ட தாசில்தார் ஜீப்

தாசில்தார் ஜீப்பைத் திருடிச் சென்றவர் திருத்தேவன் பகுதியைச் சேர்ந்த வைரக்கண்ணு என்பது தெரியவந்தது. போதையில் இருந்த அவர் கைதுசெய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்.

பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் நின்றிருந்த தாசில்தாரின் ஜீப் காணாமல்போன நிலையில், போதை ஆசாமி ஒருவர் அந்த ஜீப்பை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 25 கி.மீ தூரம் வரை எடுத்துச் செல்லப்பட்ட அந்த ஜீப் சுமார் மூன்று மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் வருவாய்த்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜீப் காணாமல் போனதில் லாரித் திருட்டில் தொடர்புடைய ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

தாசில்தார் ஜெயலட்சுமி
தாசில்தார் ஜெயலட்சுமி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாசில்தாராகப் பணியாற்றி வருபவர் ஜெயலட்சுமி. இவர் பயன்படுத்துவதற்காக அரசு ஜீப் வழங்கியிருக்கிறது. அதன் டிரைவராக சிவக்குமார் என்பவர் இருந்துவருகிறார். இந்தநிலையில், நேற்று மதியம் 2:30 மணியளவில் தாசில்தார் அலுவலகத்தில் நினறிருந்த ஜீப்பைக் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த டிரைவர் சிவக்குமார், தாசில்தார் ஜெயலட்சுமியிடம் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து அருகிலிருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலக அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 25 கிலோமீட்டர் தூரம் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி சாலையில் ஜீப் ஒன்று சென்றுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் ஜீப்பை மீட்டனர். ஜீப்பை ஓட்டி வந்தவர் போதையில் இருந்தார் என்று கூறப்படுகிறது. பின்னர் பேராவூரணியிலிருந்து தாசில்தார் ஜெயலட்சுமி நாகுடி சென்று ஜீப்பை மீட்டு வந்தார். காணாமல்போன ஜீப் சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் வருவாய்த்துறை அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

மும்பை: வீட்டு வேலை, திருட்டு, எஸ்கேப்! - 18 ஆண்டுகளில் 50 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் கைது

இது குறித்து தாசில்தார் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். தாசில்தார் ஜெயலட்சுமியை மதியம் சாப்பிடுவதற்காக டிரைவர் சிவக்குமார் வீட்டில் இறக்கிவிட்டு வந்திருக்கிறார். பின்னர் ஜீப்பை தாலுகா அலுவலகத்தில் நிறுத்திவிட்டு எதிரே உள்ள கடைக்குச் சாப்பிடச் சென்றார். அப்போது சாவி ஜீப்பிலேயே இருந்தது. சிவக்குமார் சாப்பிடச் செல்லும் நேரத்தில் ஜீப்பின் சாவியை எப்போதும் ஜீப்பிலேயே வைத்துச் செல்வது வழக்கம்.

திடீர் வேலை வந்தால், தாசில்தார் வேறு டிரைவரை ஜீப்பை ஓட்டவைத்து குறித்த பணிக்கு செல்வார். அதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்தநிலையில், ஜீப்பை நிறுத்திவிட்டு சிவக்குமார் சாப்பிடச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஜீப்பைக் காணவில்லை. உடனே தாசில்தாருக்கு போன் செய்து, `எங்கே மேடம் போயிருக்கீங்க?’ என சிவக்குமார் கேட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

அதற்கு தாசில்தார் நான் வீட்டில்தான் இருக்கிறேன் எனக் கூற, பதற்றமடைந்த சிவக்குமார், `மேடம் ஆபீஸில் நின்ன ஜீப்பைக் காணவில்லை. யாரோ எடுத்துட்டுப் போயிட்டாங்க’ என்று சொல்லியிருக்கிறார். தாசில்தார் உடனடியாக பேராவூரணி போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். அறந்தாங்கி தாசில்தார் லுாதர்கிங்குக்கும் இதைத் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் பதற்றத்துடன் நாலாபுறமும் சென்று காணாமல்போன தாசில்தார் ஜீப்பைத் தேடியுள்ளனர். இதற்கிடையில் 25 கிலோமீட்டர் தூரம் கொண்ட அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடி சாலையில் யாரோ ஒருவர் தாசில்தார் ஜீப்பை ஓட்டிச் சென்ற தகவல் கிடைத்துள்ளது. அலர்ட்டான போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடியாக ஜீப்பை நிறுத்தி மடக்கிப் பிடித்தனர். பின்னர் ஜீப்பை ஓட்டிவந்தவர் போதையில் இருந்ததும் தெரியவந்தது.

திருடி செல்லப்பட்ட தாசில்தார் ஜீப்
திருடி செல்லப்பட்ட தாசில்தார் ஜீப்

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தாசில்தார் ஜீப்பை திருடிச் சென்றவர் திருத்தேவன் பகுதியைச் சேர்ந்த வைரக்கண்ணு என்பது தெரியவந்தது. அவர் போதையில் இருந்ததால், போலீஸ் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து மேலும் அவரிடம் விசாரணை தொடர்ந்துவருகிறது. விசாரணை முடிவில்தான் ஜீப் திருடப்பட்டதா அல்லது போதையில் செய்துவிட்டாரா என்பது தெரியவரும். ஜெயலட்சுமி பேராவூரணியிலிருந்து நாகுடி சென்று ஜீப்பை மீட்டு வந்தார். இதையடுத்தே தாசில்தார் உள்ளிட்ட பலரும் நிம்மதி அடைந்ததாகத் தெரிவித்தனர்.

வேறு சிலர், ``வைரக்கண்ணு ஜீப்பைத் திருடித்தான் சென்றிருக்கிறார். சர்ச்சை ஏற்படாமல் இருக்க இதை இத்துடன் அமுக்கப் பார்க்கின்றனர். போதையில் இருப்பவர் எப்படி 25 கிலோமீட்டர் தூரம் தனியாளாக ஜீப்பை ஓட்டிச் செல்ல முடியும்... இந்தத் திருட்டில் லாரிக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்குத் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டுபிடிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு