சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், தமிழ் பூங்கா தெருவில் குடியிருந்துவருபவர் ஜீவானந்தம் (35). இவர் சேலையூரில் ஜெராக்ஸ் கடைவைத்து நடத்திவருகிறார். கடந்த 15-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை ஈக்காட்டுதாங்கலிலுள்ள மாமியார் வீட்டுக்கு ஜீவானந்தம் குடும்பத்துடன் சென்றார். அதனால் அவரின் வீடு பூட்டியிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை 6 மணியளவில் ஜீவானந்தத்தின் வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தமிழ் பூங்கா தெருவைச் சேர்ந்தவர்கள் ஜீவானந்தத்துக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம், ஈக்காட்டுதாங்கலிலிருந்து இரும்புலியூருக்கு வந்தார். பின்னர், அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவு ஆகியவற்றின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், பீரோக்களின் லாக்கர்களும் உடைக்கப்பட்டிருந்தன.
பீரோவுக்குள் 15 சவரன் தங்க நகைகள், 100 சவரன் கவரிங் நகைகள் இருந்தன. அவையெல்லாம் கொள்ளைபோயிருக்கும் என ஜீவானந்தம் கருதினார். பின்னர், இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், பீரோக்களில் பதிவாகியிருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். அப்போது, ஒரு பீரோவை திறந்து பார்த்தபோது 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போகாமல் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அதனால், ஜீவானந்தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜீவானந்தம் வீட்டில் கொள்ளைபோன நகைகள் அனைத்தும் கவரிங் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகின்றனர். பூட்டிய வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
`தங்க நகைகள் தப்பியது எப்படி?’ என போலீஸாரிடம் கேட்டதற்கு, ``ஜீவானந்தம் வீட்டுக்குள் மூன்று பீரோக்கள் இருந்தன. முதல் பீரோவில் குழந்தைகள் அணியும் கவரிங் நகைகள் சுமார் 100 சவரன் இருக்கும். அதைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர், அடுத்த பீரோவின் லாக்கரை உடைத்து அதிலிருந்த பட்டுப் புடவைகளை கொள்ளையர்கள் எடுத்துள்ளனர். அதில், வெள்ளிப் பொருள்கள் இருந்துள்ளன. ஆனால், அதைக் கொள்ளையர்கள் எடுக்கவில்லை.
அடுத்து வீட்டிலிருந்த அலமாரியில் 10,000 ரூபாய் இருந்துள்ளது. அதையும் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர். இவை தவிர லாக்கர் உடைக்கப்பட்ட பீரோவிலிருந்து தங்க மூக்குத்தி, கம்மல் ஆகியவற்றை எடுத்துள்ளனர். அடுத்தடுத்து இரண்டு பீரோக்களின் லாக்கர்களை உடைத்தார்கள் கொள்ளையர்கள். அவற்றின் அருகில் இருட்டில் இன்னொரு பீரோ இருந்தது. அது, கொள்ளையர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அதனால் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் தப்பியுள்ளன.
கைநிறைய நகைகள் கிடைத்ததும் கொள்ளையர்கள் ஜீவானந்தத்தின் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஜீவானந்தத்தின் வீடு தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் பூட்டியே இருந்ததால், அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைத் தேடிவருகிறோம்’’ என்றனர்.
100 சவரன் கவரிங் நகைகளை கொள்ளையடித்தவர்களின் கண்களிலிருந்து 15 சவரன் தங்க நகைகள் தப்பிய சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.