சென்னை: கஞ்சா போதையில் பைக்கில் பயணித்த இளைஞர்கள் - விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன ஊழியர்!
கிழக்கு தாம்பரத்தில் வேலைக்கு சைக்கிளில் வேலைக்குச் சென்ற ஆபரேட்டர்மீது கஞ்சா போதையில் பைக்கில் வந்த கும்பல் மோதியது. இதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியாகினார்.
சென்னை கிழக்கு தாம்பரம், புத்தர்தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தவர் ராஜசேகர் (47). இவரின் மனைவி ஜெயலட்சுமி (44). இந்தத் தம்பதியருக்கு 17 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். ராஜசேகரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. இவர், மறைமலைநகரில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் மெஷின் ஆபரேட்டராகப் பணியாற்றிவந்தார். அவரின் மனைவி ஜெயலட்சுமி, தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார்.
ராஜசேகருக்கு நேற்று இரவுப் பணி. அதனால் அவர் வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றார். பின்னர் சைக்கிளை ஸ்டாண்டில் விட்டுவிட்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக மின்னல் வேகத்தில் வந்த பைக் ஒன்று ராஜசேகர் மீது மோதியது. நடுரோட்டில் விழுந்த ராஜசேகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராஜசேகரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
விபத்தில் கஞ்சா போதையிலிருந்த இளைஞர்களும் சாலையில் விழுந்தனர். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். அப்போது கீழே விழுந்த இளைஞர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களில், ஓர் இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். ஆனால், இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். பொதுமக்களிடம் சிக்கிய இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் அருண் (21) என்றும், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
தப்பி ஓடியவர் பெயர் விமல் (22), சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தேடிவருகின்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் விமலும் அருணும் கஞ்சா போதையில் பைக்கில் வேகமாக வந்தது தெரியவந்தது. போதை தலைக்கேறியதால் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ராஜசேகர்மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜசேகர், ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ராஜசேகரின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
கஞ்சா போதையில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.